2015-08-07 16:40:00

கடும் துன்பத்தில் அடைக்கலம் தேடுவோரை ஏற்க வேண்டும்


ஆக.07,2015. கடும் துன்ப நிலையில் அடைக்கலம் தேடுவோரை ஏற்குமாறு, பிரிட்டன் மற்றும் ப்ரெஞ்ச் அரசுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கத்தோலிக்க ஆயர்கள்.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கத்தோலிக்க ஆயர் பேரவையின் குடியேற்றதாரர் ஆணைக்குழு தலைவர் ஆயர் பாட்ரிக் லின்ச் அவர்கள், Calais குடியேற்றதாரர் பிரச்சனை குறித்து பிரித்தானிய தினத்தாள் ஒன்றுக்கு எழுதிய கடிதத்தில் கடும் துன்ப நிலையில் அடைக்கலம் தேடுவோர் நியாயமான முறையில் நடத்தப்பட்டு அவர்களின் கோரிக்கைகள் ஏற்கப்படுமாறு கேட்டுள்ளார்.

பிரான்சின் Calais துறைமுக நகரிலிருந்து, இங்கிலாந்து செல்வதற்கு, ஆங்கிலக் கால்வாயில் தரைக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள சுரங்க இரயில் பாதை வழியாக ஏறக்குறைய மூவாயிரம் குடியேற்றதாரர் இரவில் நடந்து சென்று இங்கிலாந்தை அடைய முயற்சித்துள்ளனர். 

இவ்விவகாரம் குறித்து வத்திக்கான் வானொலிக்கும் பேட்டியளித்த ஆயர் லின்ச் அவர்கள், மனித வர்த்தகத்தால் பல்வேறு துன்பங்களை எதிர்கொண்டுள்ள இக்குடியேற்றதாரரின் நிலைகளைப் புரிந்துகொண்டு அவர்களை ஏற்க வேண்டும் என்றும், இவ்விவகாரம் தொடர்புடைய நாடுகளுக்கு இடையே நல்ல ஒத்துழைப்பு அவசியம் என்றும் கூறினார்.

ஐரோப்பாவில் குடியேற்றதாரர் பிரச்சனை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டுவருவதாகவும் உரைத்த ஆயர் லின்ச் அவர்கள், ஆபத்தான பயணங்களை மேற்கொள்ளத் தூண்டும் மனித வர்த்தகம் ஒழிக்கப்பட வேண்டியது இன்றியமையாதது என்றும் தெரிவித்தார்.

இதற்கிடையே, பிரிட்டன் செல்வதற்காக, ஏறக்குறைய 50 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த இரயில் சுரங்கப் பாதையை நடந்தே கடந்துவந்த சூடான் குடிமகன் ஒருவரைப் பாதுகாப்பு அதிகாரிகள் வழியில் நிறுத்தி கைதுசெய்துள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.