2015-08-06 15:15:00

கடுகு சிறுத்தாலும் – நிகழ்கால செயல்களே ஒருவரின் எதிர்காலம்


அந்த சிறிய நகரத்திற்கு யார் வேண்டுமானாலும் மன்னராக வரமுடியும். ஆனால், அந்தப் பதவி ஐந்தாண்டுகள் மட்டுமே! ஐந்தாண்டுகள் முடிந்த அடுத்த நாளே மன்னர் ஆற்றின்  மறுகரையிலுள்ள காட்டிற்குச் சென்று விட வேண்டும். அந்தக் காட்டில் நுழைந்தால் வனவிலங்குகள் கொன்று தீர்த்துவிடும். இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டவர் மட்டுமே அந்த நகரத்தில் அரியணையில் அமர முடியும். இப்படி ஒரு சட்டமிருந்தது. இதனை ஏற்று மன்னராக இருந்த ஒருவரின் ஐந்து ஆண்டு ஆட்சிக்காலம் முடிந்து, அவரை வழியனுப்ப நாடே திரண்டிருந்தது. மன்னர் சிறப்பான ஆடைகளையும் நகைகளையும் அணிந்து, முடிசூடி, தங்க வாளேந்தி வைரங்கள் மின்ன மக்கள் முன் நின்றார். தான் செல்லவிருந்த படகைப் பார்த்துவிட்டு கோபத்துடன், ''மன்னன் செல்லும் படகா இது! பெரிய படகைக் கொண்டு வாருங்கள்! நான் நின்றுகொண்டா செல்வது! அரியணையைக் கொண்டு வாருங்கள்!'' என்று கூறினார். சிறிது நேரத்தில் அலங்கரிக்கப்பட்ட அழகான படகு ஆற்று நீரைத் கிழித்துக் கொண்டு மறுகரை நோக்கிப் பயணித்தது. மக்கள் திகைத்து நிற்க, மன்னர் கையசைக்க பயணம் தொடர்ந்தது. மிகவும் அதிர்ச்சியடைந்தவர் படகோட்டியே! காரணம், இதுவரை அவர் மறுகரைக்கு அழைத்துச் சென்ற எந்த மன்னரும் மகிழ்ச்சியாகச் சென்றதில்லை. படகோட்டி பொறுத்துக்கொள்ள முடியாமல் கேட்டார் ''மன்னா! எங்கே செல்கிறீர்கள் தெரியுமா?'' ''தெரியும் மறுகரைக்குச் செல்கிறேன்!'' ''அங்கே சென்றவர்கள் திரும்ப இந்த நகரத்திற்கு வந்ததில்லை தெரியுமா?''  ''தெரியும். நானும் திரும்ப இந்த நகரத்திற்கு வரப் போவதில்லை!'' ''பின்னே எப்படி உங்களால் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது?''  ''அதுவா! நான் என்ன செய்தேன் தெரியுமா? ஆட்சிக்கு வந்த ஓராண்டு முடிவில் ஆயிரம் வேட்டைக்காரர்களைக் காட்டிற்கு அனுப்பினேன்; அவர்கள் கொடிய விலங்குகளை வேட்டையாடிக் கொன்று விட்டார்கள்! இரண்டாமாண்டு முடிவில் ஆயிரம் விவசாயிகள் சென்றார்கள்; காட்டைத் திருத்தி உழுதார்கள்; இன்று ஏராளமான தானியவகைகள் பயிராகியுள்ளன. மூன்றாமாண்டின் முடிவில் ஆயிரம் கட்டடக்கலை வல்லுநர்களும், தொழிலாளர்களும் சென்றனர். இன்று வீடு, வாசல், அரண்மனை, அந்தப்புரம், சாலைகள் எல்லாம் தயார்! நான்காம் ஆண்டு முடிவில் ஆயிரம் அரசு அதிகாரிகள் சென்றனர். நிர்வாகம் சீரடைந்தது. இந்த 4000 பேரும் தங்கள் மனைவி, குழந்தைகளுடன் சென்று அங்கே வாழ்கின்றனர். இப்போது நான் காட்டிற்குப் போகவில்லை; என்னுடைய நாட்டிற்குப் போகின்றேன்! சாகப் போகவில்லையப்பா, வாழப் போகின்றேன்! அதுவும் மன்னராக ஆளப்போகிறேன்! உனக்கு ஒருவேளை அரண்மனைப் படகோட்டி வேலை வேண்டுமென்றால், இந்தப் படகோடு இப்படியே வேலைக்கு சேர்ந்து விடு!'' என்றார் மன்னர். படகோட்டி வியப்பில் ஆழ்ந்தான்.  ஆம். ஒருவர் நிகழ்காலத்தில் செய்வதே அவரின் எதிர்காலம்! 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.