2015-08-05 15:55:00

திருத்தந்தையின் மறைக்கல்வி – மணமுறிவும் இணைந்து வாழ்தலும்


ஆகஸ்ட்,05,2015. ஒரு மாத கோடை விடுமுறைக்குப்பின் இப்புதனன்று திருப்பயணிகளை தன் புதன் பொதுமறைக்கல்வி மூலம் நேருக்கு நேர் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூன் மாத இறுதிவரை வழங்கிவந்த குடும்பம் குறித்த போதனைகளின் தொடர்ச்சியை வழங்கினார். குடும்பம் குறித்த தன் மறைக்கல்வித் தொடரில், ‘காயமடைந்த குடும்பங்கள்’ என்ற தலைப்பில் ஏற்கனவே தான் வழங்கியுள்ள கருத்துக்களின் இரண்டாம் பகுதியாக, மணமுறிவுப் பெற்று வாழும் குடும்பங்கள் குறித்து இவ்வாரம் எடுத்துரைத்தார்.

மணமுறிவுப் பெற்று, மீண்டும் புதியதொரு இணைப்பில் வாழும் நம் சகோதர சகோதரிகள் குறித்து, நம் குடும்பம் குறித்த மறைக்கல்வி போதனையில் நோக்குவோம். மணமுறிவுக்குப்பின் இவர்கள் இன்னொருவருடன் இணைந்து வாழ்வது, திருமணம் எனும் அருளடையாளத்திற்கு எதிராகச் செல்வது எனினும், திருஅவையானது ஓர் அன்னை என்ற முறையில், தன் குழந்தைகளின் நலனிலும் மீட்பிலும் அக்கறை கொண்டு செயலாற்ற முனைகிறது. இத்தகைய சூழல்கள், குழந்தைகளின் வாழ்வைப் பாதிக்கின்றன என்பதால், இக்குடும்பங்களை நம் சமுதாயத்திற்குள் உண்மையிலேயே வரவேற்க வேண்டிய அவசரத் தேவையை உணர்கிறோம். நாம் அவர்களை தூர விலக்கி வைத்தால், நம்மால் எவ்வாறு  அவர்களுக்கு உதவ முடியும், அதாவது, கிறிஸ்தவ விசுவாசத்தில் அவர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்கவும், கிறிஸ்தவ வாழ்வில் தங்கள் குழந்தைகளை வளர்க்க இந்த பெற்றோருக்கு ஊக்கமளிக்கவும் நம்மால் எவ்வாறு இயலும்? இத்தகையச் சூழல்களில் இருக்கும் குடும்பங்கள் அனைத்தும் இன்னும் திருஅவையின் ஓர் அங்கமே என்பதை அவர்கள் உணர்ந்துகொள்ளும் வகையில், எனக்கு முன் இருந்த திருத்தந்தையர்களின் வழிகாட்டுதலில், சீரிய முறையில் இவர்களிடையே பணியாற்றி வந்த மேய்ப்பர்களை, நன்றியுடன் இந்நேரத்தில் நினைவுகூர்கிறேன். இந்தப் பிரச்சினைக்கு ஓர் எளிதான தீர்வு இல்லை என்பது நமக்குத் தெரியும். ஆனால், இத்தகையக் குடும்பங்கள், செபங்கள் வழியாகவும், இறை வார்த்தைக்குச் செவிமடுப்பதன் வழியாகவும், தங்கள் குழந்தைகளின் கிறிஸ்தவக் கல்வி வழியாகவும், ஏழைகளுக்கு ஆற்றும் பணி வழியாகவும், திருஅவையின் வாழ்வில் பங்குபெற, இக்குடும்பங்களுக்கு நாம் ஊக்கமளிக்க முடியும். எவ்வாறு, நல்லாயன் தன் ஆடுகளுக்காக தன் உயிரையே வழங்குகிறாரோ, அதுபோல், திருஅவை எனும் அன்னை, தன் கதவுகளை எப்போதும் திறந்து வைத்திருக்கும் தந்தையின் இல்லமாகச் செயல்பட்டு, தன் வாழ்வையே தன் குழந்தைகளுக்காக கையளிக்கிறார். தன் ஆடுகள் அனைத்தையும் தனித்தனியாக அறிந்திருக்கும், அதேவேளை, தன் அன்பிற்குள் அனைவரையும் அணைத்துக் கொள்ளும் நல்லாயனைப் பின்பற்றி, இவ்வுலகிலுள்ள அனைவரும்,  குறிப்பாக கிறிஸ்தவக் குடும்பங்கள், செயலாற்றட்டும். இவ்வாறு, தன் புதன் பொது மறைக் கல்வியை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.