2015-08-05 16:18:00

'காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவது, நமது நன்னெறிக் கடமை'


ஆக.05,2015. 'காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த நாம் எடுக்கவேண்டிய நிலைப்பாடு, நமது நன்னெறிக் கடமை' என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் 'Laudato si' திருமடலில் கூறியுள்ள வார்த்தைகளை, அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத் தலைவர் பாரக் ஒபாமா அவர்கள், இத்திங்களன்று வழங்கிய ஓர் உரையில் குறிப்பிட்டார்.

சுற்றுச்சூழல் சீரழிவைக் குறைக்க, கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவது குறித்துப் பேசிய அரசுத் தலைவர் பாரக் ஒபாமா அவர்கள், சுத்தமான சக்தி திட்டத்தை 2030ம் ஆண்டுக்குள் அமெரிக்க ஐக்கிய நாடு நிறைவேற்றவேண்டும் என்ற தீர்மானத்தை இத்திங்களன்று வெளியிட்டார்.

நமது சுற்றுச்சூழலில் கலந்துள்ள அல்லது கலக்கக்கூடிய 87 கோடி டன் எடையுள்ள கார்பன் டை ஆக்சைடு அளவைக் குறைக்கும் கடமை நமது தலைமுறைக்கு உள்ளது என்று அரசுத் தலைவர் பாரக் ஒபாமா அவர்கள், தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

இவ்வாண்டு டிசம்பர் மாதம் பாரிஸ் மாநகரில் நடைபெறவிருக்கும் காலநிலை மாற்ற உலக உச்சி மாநாட்டில், உலகத் தலைவர்கள் மேற்கொள்ளவிருக்கும் விவாதங்களில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள திருமடல் முக்கியமான தாக்கத்தை கொண்டிருக்கும் என்று ஊடகங்கள் கூறிவருகின்றன.

ஆதாரம் : ICN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.