2015-08-05 15:43:00

10,000த்திற்கும் அதிகமான பீடச் சிறாரைச் சந்தித்த திருத்தந்தை


ஆக.05,2015. பீடச் சிறார் என்ற முறையில், இயேசுவுக்கு அருகில் இருக்கும் வாய்ப்பு பெற்றுள்ள நீங்கள், அயலவருக்கும் நெருக்கமாக, வாழ அழைக்கப்பட்டிருக்கிறீர்கள் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பீடச் சிறாரிடம் கூறினார்.

உலகின் பல நாடுகளிலிருந்து உரோம் நகருக்கு திருப்பயணம் மேற்கொண்டு, வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த 10,000த்திற்கும் அதிகமான பீடச் சிறாரை, ஆகஸ்ட் 4, இச்செவ்வாய் மாலை 6 மணியளவில் சந்தித்தத் திருத்தந்தை, அவர்களுக்கு வழங்கிய வாழ்த்துரையில் இவ்வாறு கூறினார்.

கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது உரோம் நகரில் கூடியிருந்த இளையோரைப் பாராட்டியத் திருத்தந்தை, அயலவரோடு மேற்கொள்ளும் வாழ்வுப் பயணத்தில், உயர்ந்த இலக்குகளை நிர்ணயித்து, அவற்றைப் பின்பற்றும் சக்தியை இளையோர் பெறவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இறைவாக்கினர் எசாயாவை அழைத்தபோது, இறைவன் முதல் முயற்சிகளை மேற்கொண்டது, எசாயாவை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது என்று கூறிய திருத்தந்தை, அந்த அழைப்பை ஏற்ற எசாயாவின் வாழ்வு முற்றிலும் மாறியது என்பதைச் சுட்டிக்காட்டினார்.

நெருங்கமுடியாத ஓர் உயர்ந்த அரியணையில் இருந்தபடி இயேசு உங்களைச் சந்திப்பவர் அல்ல, மாறாக உங்களுடன் முற்றிலும் கலந்துவிடும் வகையில், அப்ப இரச வடிவில் வருகிறார் என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.

இறைவனின் பீடத்தை நெருங்கி, அவரது வார்த்தையாலும், உடலாலும் நிறைவடையும் பீடச் சிறார், மற்றவர்களை நெருங்கி, அவர்களுக்கு ஆண்டவரை ஒரு கொடையாக அளிக்கும் ஆர்வத்தைப் பெறவேண்டும் என்று இளையோரைக் கேட்டுக்கொண்டார், திருத்தந்தை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.