2015-08-04 14:51:00

விவிலியத் தேடல் : தாலந்து உவமை – பகுதி - 4


10 வயது சிறுவன் ஒருவன், ஒரு விபத்தில் தன் இடது கரத்தை இழந்தான். இருப்பினும், அவன் 'ஜூடோ' என்ற தற்காப்புக் கலையைப் பயில விரும்பினான். 'ஜூடோ' கலையில் மிகச் சிறந்த ஒரு குருவிடம் பயிற்சிகளைத் துவக்கினான் சிறுவன். 'ஜூடோ'வில் ஒரு குறிப்பிட்ட செயல்முறையை மட்டும் அவனுக்குச் சொல்லித் தந்தார், குரு. அந்தச் செயல்முறையை, அவன் மூன்று மாதங்களாகப் பயின்று, அதில் மிகவும் தேர்ச்சி பெற்றான். மூன்று மாதங்கள் கழிந்தபின்னரும், அவனுக்கு வேறு எந்த ஒரு செயல்முறையையும், குரு சொல்லித் தரவில்லை.

எனவே, ஒரு நாள், அவன் குருவை அணுகி, "குருவே, நான் 'ஜூடோ'வில் வேறு செயல்முறைகளில் பயிற்சி பெற வேண்டாமா?" என்று கேட்டான். குருவோ அவனிடம், "இந்த ஒரு செயல்முறையை மட்டும் நீ முழுமையாகத் தெரிந்துகொண்டால் போதும்" என்று கூறினார். குரு சொன்னதை நம்பி, அச்சிறுவன் அந்த ஒரு செயல்முறையில் உச்ச நிலையை அடைந்தான்.

பல மாதங்கள் சென்று, அந்நகரில் நடைபெற்ற ஒரு 'ஜூடோ' போட்டியில் கலந்துகொள்ள, குரு, சிறுவனை அழைத்துச் சென்றார். தான் கற்றுத் தேர்ந்திருந்த அந்த ஒரு செயல்முறையைக் கொண்டு, முதல் மூன்று சுற்றுகளில் வெற்றி பெற்று, இறுதிச் சுற்றில் நுழைந்தான், சிறுவன்.

இறுதிச் சுற்றில், அவனுக்கு எதிராகப் போட்டியிட்டவன், உடல் வலிமை, உயரம், வயது, அனுபவம் அனைத்திலும் கூடுதல் தகுதி பெற்றிருந்தான். போட்டியைக் காண வந்திருந்த அனைவரும், போட்டியிடும் இருவரையும் ஒப்பிட்டு, சிறுவன் மீது, அதுவும், ஒரு கரம் இன்றி போட்டியிட்ட சிறுவன் மீது பரிதாபப்பட்டனர்.

போட்டி ஆரம்பமானதும், சிறுவனை எதிராளி அதிகமாகத் தாக்கினான். சிறுவன், உடல் அளவில் காயப்படுவான் என்று எண்ணிய நடுவர், இடைவேளையின்போது, போட்டியை நிறுத்த விரும்பினார். குரு அதற்குச் சம்மதிக்கவில்லை.

இடைவேளை முடிந்து, போட்டி துவங்கியதும், எதிராளி சிறிது கவனக்குறைவாக இருந்த நேரம், சிறுவன், தான் கடந்த பல மாதங்களாகக் கற்றுத் தேர்ந்திருந்த அந்த ஒரு செயல்முறையைப்  பயன்படுத்தி, எதிராளியை வீழ்த்தி, வெற்றி பெற்றான்.

குருவும், சிறுவனும் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, சிறுவன் குருவிடம், "குருவே, எப்படி அந்த ஒரு செயல்முறையை மட்டும் கொண்டு, என்னால் அனைவரையும் வெல்ல முடிந்தது?" என்று ஆச்சரியத்துடன் கேட்டான்.

அதற்கு குரு, அமைதியாக, "உன் வெற்றிக்கு இரு காரணங்கள் உண்டு. ஒன்று, 'ஜூடோ' கலையில் மிகக் கடினமான ஒரு செயல்முறையை நீ முழுமையாகக் கற்றுத் தேர்ந்துள்ளாய். இரண்டாவது, அந்த செயல்முறையின்போது, உன்னை ஒருவர் வெல்ல வேண்டுமென்றால், அவர் உனது இடது கரத்தைப் பிடிக்கவேண்டும்" என்று புன்முறுவலுடன் கூறினார். இடது கரத்தை இழந்த சிறுவன், குரு சொன்னதைப் புரிந்துகொண்டு, சிரித்தான்.

நமது உடல் உறுப்புக்களில் ஒன்றை இழப்பதை, நாம் எப்போதும் ஒரு குறை என்றே கருதுகிறோம். குறை என்று பொதுவாகக் கருதப்படும் அந்த நிலையும், எவ்விதம் ஒரு சிலருக்கு நிறைவாக, சக்தியாக மாறி வெற்றியைத் தரக்கூடும் என்பதை இக்கதை தெளிவாக்குகிறது. நம்மிடமுள்ள நிறைகளை, திறமைகளை எண்ணிப்பார்க்காமல், குறைகளைப் பெரிதுபடுத்தி, நம்மிடம் உள்ள மற்ற கொடைகளையும் பயன்படுத்தாமல் புதைத்து விடுகிறோமா என்ற கேள்வியை நம் மனதில் எழுப்புகிறது, இக்கதை. நாம் கடந்த மூன்று வாரங்களாகச் சிந்தித்துவரும் 'தாலந்து உவமை'யும் இதே கேள்வியை நம்முன் வைக்கிறது.

'திறமைகள்' என்பதைக் குறிக்க ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படும் சொல், 'Talent'. இந்தச் சொல், நாம் சிந்தித்துவரும் 'தாலந்து உவமை'யிலிருந்து எடுக்கப்பட்டிருக்க வேண்டும். இந்தச் சொல்லைப் பயன்படுத்தி, தொலைக்காட்சியில் 'Got Talent' என்ற புகழ்பெற்ற போட்டி ஒன்று நடத்தப்படுகிறது. Ameirca’s Got Talent, Britain’s Got Talent, India’s Got Talent, Iceland’s Got Talent என்று 60க்கும் மேற்பட்ட நாடுகளில் நடைபெற்றுவரும் இந்தப் போட்டியின் வழியாக, பாடல், ஆடல், மாஜிக், பொம்மலாட்டம் போன்ற பல்வேறு திறமைகள் அரங்கேறி வருகின்றன.

வெளிப்படையாக, பலரையும் பிரமிக்கவைக்கும் வண்ணம் காட்டப்படும் திறமைகளையே, நாம், பெரும்பாலும் 'திறமைகள்' என்று முத்திரை குத்துகிறோம். பலரின் கவனத்தையும், பாராட்டையும் ஒருவர் பெறும்போது, அவரை, 'திறமை மிக்கவர்' என்று சான்றிதழ் வழங்குகிறோம். ஆனால், அத்திறமையை வளர்க்க, அவர் மேற்கொண்ட முயற்சிகளை பெரும்பாலான நேரங்களில் நாம் எண்ணிப் பார்ப்பதில்லை. "உன்னுடைய ‘தாலந்து’ இறைவன் உனக்குத் தரும் பரிசு. அதைக் கொண்டு நீ என்ன செய்கிறாய் என்பது, நீ இறைவனுக்குத் தரும் பரிசு" (Your talent is God's gift to you. What you do with it is your gift back to God.) என்று, புகழ்பெற்ற பேராசிரியர் Leo Buscaglia அவர்கள் சொன்னது, இப்போது என் நினைவுக்கு வருகிறது.

ஒருவர் 'திறமை மிக்கவர்' என்று சொல்லும்போது, இறைவன் அவருக்கு அத்திறமையை ஒரு முழுமையாக உருவாக்கப்பட்டப் பரிசாக, பிறப்பிலேயே வழங்கிவிட்டார் என்ற பாணியில் சிந்திப்பது ஆபத்து. இறைவன் தருவதெல்லாம் ஆரம்பங்களே! இதை விளக்கும் ஓர் உவமை, இதோ:

உலகமென்ற சந்தையில், மிக உயர்ந்த, உன்னதமான பொருள்களை வாங்க அங்கு வந்தார் ஓர் இளம்பெண். அச்சந்தையில் "இறைவனின் பழக்கடை" என்ற விளம்பரப் பலகையைக் கண்டதும் அவருக்கு அளவுகடந்த ஆனந்தம். தான் விரும்பும் தலை சிறந்த பழங்கள் அனைத்தும் அக்கடையில் விளம்பரம் செய்யப்பட்டிருந்ததைக் கண்ட இளம்பெண், அனைத்தையும் வாங்கிச் செல்லும் ஆவலுடன் உள்ளே சென்றார். கடையின் உரிமையாளரான கடவுளிடம், "இறைவா, எனக்கு தலை சிறந்த ஆப்பிள், மிகச் சுவையான ஆரஞ்சு, ஒப்பற்ற மாம்பழம் எல்லாம் வேண்டும்" என்று தன் பட்டியலைக் கூறினார். கடவுள் அவரிடம் ஒரு சிறிய பொட்டலத்தை மடித்துக் கொடுத்தார். தான் சொன்னதை இறைவன் புரிந்துகொள்ளவில்லையோ என்ற சந்தேகத்துடன், அப்பெண் கடவுளைப் பார்த்து, தனக்கு விருப்பமான பழங்களின் பட்டியலை மீண்டும் கூறினார். கடவுள் அப்பெண்ணிடம், "நீங்கள் எதிர்பார்க்கும் பழங்கள் இங்கில்லை. என்னிடம் உள்ளதெல்லாம், பழ மரங்களின் விதைகளே" என்று கூறினார்.

இறைவன் நம் வாழ்வில் தருவதெல்லாம், விதைகளே, ஆரம்பங்களே! கனிதரும் வகையில் அவற்றை வளர்ப்பதும், கருவிலேயே வாடிப் போகச் செய்வதும் நம் பொறுப்பு!

மனிதராகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் இறைவன் வழங்கியுள்ள ஒரு விதை, நமது மனித உணர்வுகள். இதை, விதையாக, திறமையாக, இறைவன் தந்த கொடையாக நாம் கருதலாம். இதைக்கொண்டு, மனித குடும்பத்தை வாழ வைக்கலாம் அல்லது, அதை அழிக்கலாம். இந்தக் கருத்தை தெளிவாக்க, மூன்று ஆண்டுகளுக்கு முன், சென்னையின் புறநகர் பகுதியில், போரூருக்கு அருகே மவுலிவாக்கம் என்ற இடத்தில் நிகழ்ந்த ஒரு கட்டட விபத்து, நம் அனைவருக்கும் ஓரு பாடமாக அமைந்தது.

அந்த அடுக்குமாடி கட்டட விபத்தில் 61 பேர் உயிரிழந்தனர் என்றும், 27 பேர் மீட்கப்பட்டனர் என்றும் செய்திகள் கூறின. மீட்புப் பணியில் ஈடுபட்டோருக்கு, தமிழக அரசு சார்பில், பாராட்டு விழா நடைபெற்றது என்ற செய்தியும், இந்தக் கட்டட விபத்தைக் குறித்து, தமிழக முதல்வருக்கு முன்னாள் முதல்வர், கேள்விகளை எழுப்பினார் என்ற மற்றொரு செய்தியும் வெளியாயின.

விபத்தையும், மனித உயிர்பலிகளையும் கூட தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு, அரசியல்வாதிகள் மேற்கொள்ளும் விவாதங்களும், தேடிக்கொள்ளும் விளம்பரங்களும், நமக்குப் பழக்கமாகிப்போன வேதனைதான். ஆனால், எவ்வித விளம்பரமும் தேடாமல், ஊடகங்களின் கவனத்தை ஈர்க்காமல், பல மனிதாபிமானச் செயல்களும் இந்த விபத்து நடந்த இடத்தில் நிகழ்ந்துள்ளன. எடுத்துக்காட்டாக, தீயணைப்புப் படையினர், காவல் துறையினர், அரசுப் பணியாளர்கள் என்று பலரும் அங்கு வந்து சேர்வதற்கு முன், எத்தனையோ பல நல்ல உள்ளங்கள், உயிர் காக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இவர்களுக்கு எவ்வித விருதும் கிடைக்கவில்லை. உயிர்காக்கும் ஒப்பற்ற பணியைச் செய்தோம் என்ற மன திருப்தியே இவர்களுக்குக் கிடைத்த விருது.

இத்தகையோரை மையப்படுத்திய ஒரு செய்தியை என் நண்பர் ஒருவர் எனக்கு மின்னஞ்சலில் அனுப்பி வைத்தார். இச்செய்தி என் உள்ளத்தில் ஆழமான தாக்கங்களை உருவாக்கின. "நாம நினைக்கிறமாதிரி இந்த உலகம் அவ்வளவு மோசமில்லை போலிருக்கு" என்ற தலைப்பில் வந்திருந்த அந்த மின்னஞ்சல் வரிகளை உங்களுடன் அப்படியே பகிர்ந்துகொள்கிறேன்:

"நாம நினைக்கிறமாதிரி இந்த உலகம் அவ்வளவு மோசமில்லை போலிருக்கு"

அன்றைய தினம், போரூரில், அடுக்கு மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தவுடன், முதல் அரை மணி நேரத்தில் அங்கு சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்ட பலரில், எனது நண்பனும் ஒருவன். இரவெல்லாம், ஓயாத கத்தல், கதறலுக்கு மத்தியில் கருவிகள் ஏதுமின்றி, வெறும் கரங்களைக் கொண்டு இடிபாடுகளை அகற்றி, பலரை உயிருடன் மீட்டுள்ளனர், நல்மனம் கொண்ட பல நண்பர்கள்.

அதன்பிறகு, தீயணைப்புப் படையினரும், மற்ற அரசுப் பணியாளர்களும் வந்து அந்தப் பொறுப்பினை ஏற்று, மீட்புப் பணிகளைத் தொடர்ந்திருக்கிறார்கள். காலில் கல் விழுந்து அடிபட்டு, மறுநாள் வீட்டுக்கு வந்த எனது நண்பன், அங்கு நடந்த சம்பவம் ஒன்றினைச் சொன்னான்.

முதல் மணி நேரத்திலேயே அங்கு நூற்றுக்கும் மேலான பொதுமக்கள் வந்திருந்து மீட்புப் பணிகளில் உதவிடும்போது, யாரோ ஒருவர் நூற்றுக்கணக்கான பிஸ்கெட் பாக்கட்டுகளை வாங்கி வந்து மீட்புப் பணியிலிருந்தவர்களுக்குத் தந்துள்ளார்.

இன்னுமொருவர், ஓடிச்சென்று தெருவில் சென்று கொண்டிருந்த டீ விற்கும் சைக்கிளை அப்படியே அழைத்து வந்துள்ளார். டீ வண்டிக்காரர் அங்கிருந்த எல்லாருக்கும் டீ கொடுத்துள்ளார். நண்பர், தனது பாக்கெட்டிலிருந்து ஐநூறு ரூபாயை எடுத்து டீ வண்டிக்காரருக்கு தர முயல, டீ வண்டிக்காரர் அப்போது சொன்னது, "அய்யே.. இப்போ இதுதான் ரொம்ப முக்கியமா? நா ஓடிப்போய் இன்னொரு கேன் டீ கொண்டுட்டு வரேன். நீ போய், மாட்டிட்டு இருக்கவங்க யாரையாவது தூக்க முடியுமான்னு பாரு.. அத்த வுட்டுட்டு, காசு கொடுக்குது பாரு"..

இதை எனது நண்பன் என்னிடம் நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டு, “நாம நினைக்கிற மாதிரி இந்த உலகம் அவ்வளவு மோசமில்லை போலிருக்குடா!” என்றான்.

“நாம நினைக்கிற மாதிரி இந்த உலகம் அவ்வளவு மோசமில்லை போலிருக்குடா!” என்று அந்த இளையவரைச் சொல்லவைத்தது, விபத்து நடந்த இடத்தில் காட்டப்பட்ட அடிப்படை மனித உணர்வுகள். மனசாட்சி, மனிதாபிமானம், மென்மையான உள்ளம், பிறருக்கு உதவும் ஆவல் என்ற உயரியப் பண்புகள், மனிதராய் பிறக்கும் ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டுள்ள தாலந்துகள், கொடைகள். இக்கொடைகளைக் குழிதோண்டி புதைத்துவிட்டு, அதற்கு மேல் தங்கள் சுயநலக் கோட்டைகளைக் கட்டியெழுப்ப, மனசாட்சியின்றி, தரக்குறைவான கட்டடங்களைக் கட்டும் மனிதர்கள் வாழும் அதே உலகில், மனசாட்சியைப் போற்றிப் பாதுகாக்கும் ஆயிரமாயிரம் உள்ளங்களும் வாழ்கின்றன.

இந்தக் கட்டட விபத்தைப் பற்றி நாம் சிந்திக்கும் நேரத்தில், ஆகஸ்ட் 4, இச்செவ்வாயன்று மும்பையின் புறநகர் பகுதியான தானேயில் (Thane), மற்றொரு கட்டடம் இடிந்து 10க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர், இன்னும் பலர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என்ற செய்தி நம்மைத் துயரத்தில் ஆழ்த்துகிறது. இந்த விபத்திலும், பல நல்ல உள்ளங்கள், மனிதாபிமானத்தோடு தங்களால் இயன்ற உதவியைச் செய்துவருவர் என்று உறுதியாக நம்பலாம்.

இறைவன் தங்களுக்கு வழங்கிய அடிப்படை மனிதப் பண்புகளைக் கொண்டு, நல்லவை பலவற்றை இவ்வுலகில் வளர்த்துவரும் இத்தகைய மனிதர்கள் வாழும்வரை, “நாம நினைக்கிற மாதிரி இந்த உலகம் அவ்வளவு மோசமில்லை போலிருக்கு!” என்பதை நாம் நெஞ்சுயர்த்தி முழக்கமிடலாம்.

தனக்கு வழங்கப்பட்ட கொடையான ஒரு தாலந்தைப் புதைத்துவிடும் மூன்றாவது பணியாளரே, இந்த உவமையின் நாயகன். அவருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பும், தீர்ப்பின் இறுதியில், “உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும். அவர்கள் நிறைவாகப் பெறுவர். இல்லாதோரிடமிருந்து அவரிடமுள்ளதும் எடுக்கப்படும்” (மத். 25:29) என்று இல்லத் தலைவர் சொல்லும் புதிரான சொற்களும் சில பாடங்களைச் சொல்லித்தரக் காத்திருக்கின்றன. இந்தப் பாடங்களை நமது அடுத்தத் தேடலில் பயில முயல்வோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.