2015-08-04 15:42:00

கேரள அரசின் துறைமுகத் திட்டத்திற்கு தலத்திருஅவை எதிர்ப்பு


ஆக.04,2015. இந்தியாவின் கேரள மாநில அரசு திட்டமிட்டுள்ள ஏறக்குறைய 700 கோடி ரூபாய் மதிப்பிலான துறைமுகத் திட்டம், 32 மீனவக் கிராமங்களைப் பாதிக்கும் என்று சொல்லி, அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார், திருவனந்தபுரம் உயர்மறைமாவட்ட பேராயர், மரிய சூசை பாக்கியம்.

இம்மாதம் 17ம் தேதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள Vizhinjam துறைமுகத் திட்டம், 13 கிலோ மீட்டர் அளவில் பரவியுள்ள 32 மீனவக் கிராமங்களையும், ஏறக்குறைய ஐம்பதாயிரம் குடும்பங்களையும் பாதிக்கும் என்று பேராயர் சூசை பாக்கியம் அவர்கள், அரசுக்கு எச்சரிக்கை கடிதம் அனுப்பியுள்ளார்.

பேராயர் சூசை பாக்கியம் அவர்கள், அரசுக்கு எழுதிய கடிதம், இஞ்ஞாயிறன்று அவ்வுயர் மறைமாவட்டத்தின் அனைத்து ஆலயங்களிலும் வாசிக்கப்பட்டது. 

மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்கு, தலத்திருஅவை எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, ஆனால், இந்தத் துறைமுகத் திட்டத்தை மனித உரிமைகள் விவகாரமாக நோக்குவதாக, அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார், பேராயர் சூசை பாக்கியம். 

இதற்கிடையே, பேராயர் சூசை பாக்கியம் அவர்களின் எதிர்ப்பை முன்னிட்டு, தல கத்தோலிக்கத் திருஅவையோடு உரையாடல்களை நடத்துவதற்குத் தயாராக இருப்பதாக, கேரள அரசு அறிவித்துள்ளது.

ஆதாரம் :  UCAN/ வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.