ஆக.04,2015. அமெரிக்க ஐக்கிய நாட்டின் மின்உற்பத்தி நிலையங்களிலிருந்து கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கு, தேசிய அளவில் எடுக்கப்பட்டுள்ள புதிய நிலைப்பாடுகள், அந்நாட்டு மக்களின், குறிப்பாக, சிறார், வயது முதிர்ந்தோர், ஏழைகள் மற்றும் நலிந்த சமூகங்களின் நலவாழ்வைப் பாதுகாப்பதற்கான ஒரு முக்கிய முயற்சி என்று அந்நாட்டுத் தலத் திருஅவை கூறியுள்ளது.
அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின் நீதி மற்றும் மனித முன்னேற்ற ஆணைக்குழுத் தலைவர் பேராயர் Thomas Wenski அவர்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனத்தின் (EPA) வேண்டுகோளின்பேரில், கார்பன் மாசுகேட்டை கட்டுப்படுத்துவதற்கு கொண்டுவரப்பட்டுள்ள புதிய விதிமுறையை வரவேற்றுள்ளார்.
இறைவனின் படைப்பை நாம் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை இத்திங்களன்று வலியுறுத்தியுள்ள பேராயர் Wenski அவர்கள், கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கு அண்மையில் எடுக்கப்பட்டுள்ள நிலைப்பாடு, அமெரிக்க ஐக்கிய நாட்டில் கார்பன் வெளியேற்றத்திற்கு முக்கியக் காரணமாக அமைந்திருக்கும் மின்உற்பத்தி நிலையங்களிலிருந்து வெளியேறும் கார்பனைக் குறைக்க உதவும் என்று தெரிவித்துள்ளார்.
இந்தப் புதிய நிலைப்பாட்டைத் தடை செய்ய வேண்டாமென அமெரிக்க காங்கிரஸ் அவைக்கு கடிதம் அனுப்பியுள்ள பேராயர் Wenski அவர்கள், Laudato Si’ என்ற திருத்தந்தையின் அண்மைத் திருமடலின் முக்கியத்துவத்தையும் குறிப்பிட்டுள்ளார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |