2015-08-04 16:11:00

"ஒருபோதும் போரே வேண்டாம்" – ஹிரோஷிமாவில் கருத்தரங்கு


ஆக.04,2015. ஜப்பானின் ஹிரோஷிமா நகர், உலகின் முதல் அணுகுண்டு தாக்குதலுக்கு உள்ளானதன் எழுபதாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, உரோம் சான் எஜிதியோ பக்த அமைப்பு, ஹிரோஷிமா நகரில், வருகிற வியாழனன்று கருத்தரங்கு ஒன்றை நடத்தவுள்ளது.

"இனிமேல் ஒருபோதும் போரே வேண்டாம்" என்ற தலைப்பில், ஆகஸ்ட் 06, வருகிற வியாழனன்று, சான் எஜிதியோ அமைப்பு, ஜப்பானின் சமயக் கழகங்களுடன் சேர்ந்து இக்கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளது.

ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில், உலகின் முதல் அணுகுண்டுகள் வீசப்பட்டு, எழுபது ஆண்டுகள் ஆகியும், அவற்றின் கதிர்வீச்சு தாக்கங்கள் இன்றும் உணரப்படுகின்றன என்றுரைத்த எஜிதியோ அமைப்பு, உலகில் இன்றும் 16 ஆயிரத்துக்கு மேற்பட்ட அணுகுண்டுகள் நாடுகளிடம் உள்ளன என்று கூறியுள்ளது.

சமயத் தலைவர்கள், வல்லுனர்கள் மத்தியில் திறந்த உரையாடலை நடத்தி, ஜப்பான் நாட்டிற்குள்ளும், உலகின் பிற நாடுகளிலும் உடனடி ஆயுதக் களைவுக்கு அழைப்பு விடுக்கவிருப்பதாகவும் சான் எஜிதியோ அமைப்பு தெரிவித்தது.

1945ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி ஹிரோஷிமாவிலும், ஆகஸ்ட் 9ம் தேதி நாகசாகியிலும் வீசப்பட்ட அணுகுண்டுகளால் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். அவற்றின் கதிர்வீச்சுத் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள் இன்றும் துன்பங்களை அனுபவிக்கின்றனர் என்றும் சான் எஜிதியோ அமைப்பு கூறியது.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.