2015-08-04 15:48:00

அதிக அறிவுத் திறன் கொண்ட 12 வயது பிரிட்டன் சிறுமி


ஆக.04,2015. அறிவுத் திறன் சோதனையில், இதுவரை யாரும் பெறாத குறியீட்டு எண்ணை (IQ), 12 வயது பிரிட்டன் சிறுமி பெற்று சாதனை புரிந்துள்ளார்.

பிரிட்டனில் ஹார்லோ என்னுமிடத்தில் ஏழாம் வகுப்பு மாணவியான Nicole Barr, கடந்த வாரம் நடத்தப்பட்ட அறிவுத் திறன் சோதனையில் 162 புள்ளிகள் பெற்றார். இந்தச் சோதனையை நடத்திவரும் மென்ஸா அமைப்பினர், வரலாற்றில் இதுவரை எவரும் பெறாத குறியீட்டு எண் இதுவாகும் என்று தெரிவித்தனர்.

உலகப் புகழ் பெற்ற அறிவியலாளர்கள் Albert Einstein, Stephen Hawking போன்றோரைவிட அதிக அறிவுத் திறன் குறியீட்டு எண்ணை இவர் பெற்றுள்ளார் என பிரிட்டன் ஊடகங்கள் இவரைப் புகழ்கின்றன.

நிகோலுக்கு 10 வயதாகும்போதே, கணிதப் பாடத்தில் அவரது வகுப்பு மாணர்களைவிடப் பல படிகள் முன்னேறியிருந்தார் என அவருடைய ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

இவருக்கு இலக்கியம், இசை, நாடகத்திலும் மிகுந்த ஈடுபாடு உண்டு. தற்போது ஷேக்ஸ்பியரின் "பன்னிரண்டாம் இரவு' நாடக ஒத்திகையில் ஈடுபட்டுள்ள நிகோல், விரைவில் அரங்கேறவுள்ளார்.

சார்பியல் தத்துவம், அணு ஆராய்ச்சி ஆகிய இரு மாபெரும் பங்களிப்பைச் செய்த ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், எந்த அறிவுத் திறன் சோதனையிலும் பங்கு பெற்றதில்லை என்பதைக் குறிப்பிட வேண்டும். ஆனால் மென்ஸா முறையின் அடிப்படையில், அவரது அறிவுத் திறன் குறியீடு 160 என்று பொதுவாக கருதப்படுகிறது.

பில் கேட்ஸ், பிரபல இயற்பியல் அறிவியலாளர் ஸ்டீஃபன் ஹாக்கிங் ஆகியோரை விடவும் நிகோல் அதிக அறிவுத்திறன் குறியீட்டைப் பெற்றுள்ளார் என பிரிட்டன் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. பொது அறிவு, நினைவுத்திறன், கணிதத்திறன், சிக்கலுக்குத் தீர்வு காண்பது உள்ளிட்டவற்றின் அடிப்படையில், அறிவுத் திறனை சோதிக்கும் முறையை மென்ஸா அமைப்பு வடிவமைத்துள்ளது. 

ஆதாரம் :  Agencies / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.