2015-08-03 16:23:00

வாரம் ஓர் அலசல் – இறைவன் என்னோடு இருக்கையில்....


ஆக.03,2015. Old West அல்லது Wild West என அழைக்கப்பட்ட அமெரிக்க ஐக்கிய நாட்டின் மேற்குப் பகுதியில், 19ம் நூற்றாண்டின் இரண்டாவது பாதிப் பகுதி வன்முறை மிகுந்து ஊடகங்களின் கவனத்தை ஈர்த்து வந்தது. அக்காலத்தில், Billy the Kid (Henry McCarty, செப்.17,1859–ஜூலை 14, 1881) என்பவர், அப்பகுதியின் பிரபல வங்கிக் கொள்ளைக்காரர் மற்றும் வாகனத் திருடராக இருந்தவர். துப்பாக்கியோடு அலையும் இந்த மனிதரின் உயிரை எடுப்பவர்க்கு பரிசு தருவதாக நியு மெக்சிகோ ஆளுனர் அறிவித்திருந்தார். அந்த அளவுக்கு Billy the Kid வன்முறைக்குப் பெயர் பெற்றிருந்தார். Henry McCarty என்ற இயற்பெயரைக் கொண்ட இவர், 21 பேரைக் கொன்றவர் என்று கூறப்படுகின்றது. Billy the Kidயின் குற்றக் கும்பலைச் சேர்ந்த ஒருவர், ஒருநாள் சுடப்பட்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார். ஆனால், Colorado மாநிலத்தின் Trinidad நகரின் மருத்துவர்கள் அவருக்குச் சிகிச்சை அளிக்க மறுத்து விட்டனர். அச்சமயத்தில் அருள்சகோதரி Blandina Segale அவர்கள், சுடப்பட்ட அந்த மனிதரை தனது இடத்திற்கு எடுத்துச் சென்று மூன்று மாதங்கள் சிகிச்சை அளித்து, அவருக்கு நல்ல சுகத்தை அளித்தார். ஆனால்,  Billy the Kid அவர்களுக்கு மகிழ்ச்சி இல்லை. இவர் Trinidad நகரத்திற்கு வந்து அங்கு நான்கு மருத்துவர்களைப் பழிவாங்கத் திட்டமிட்டார். இதைக் கேள்விப்பட்ட அருள்சகோதரி Blandina அவர்கள், Billy the Kid அவர்கள் இருக்குமிடம் சென்று, தான் காப்பாற்றிய அந்த மனிதரின் பெயரால் இந்தப் பழிவாங்கும் செயலைக் கைவிடுமாறு கெஞ்சிக் கேட்டார். Billy the Kidம் தனது எண்ணத்தை மாற்றிக் கொண்டார். பின்னர் அருள்சகோதரி Blandina அவர்களுடன் நல்ல நட்புறவையும் வளர்த்துக் கொண்டார். ஒருசமயம், Billy the Kid அவர்கள் சிறையில் இருக்கும்போது அவரைச் சென்று சந்தித்தார் அருள்சகோதரி Blandina. பின்னர் ஒருநாள் இரயில் பெட்டியில் திருடுவதற்குத் திட்டமிட்டபோது, அந்த இரயிலில் அருள்சகோதரி Blandina பயணம் செய்கிறார் என்பதை அறிந்து அத்திட்டத்தை Billy the Kid கைவிட்டார் என்று வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன.

அருள்சகோதரி Blandina அவர்கள், தற்போது அமெரிக்க ஐக்கிய நாட்டின் நியு மெக்சிகோ மாநிலத்தில் “இறையடியார்”என்ற நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளார். இவரை முத்திப்பேறு பெற்ற நிலைக்கு உயர்த்தும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்தாலியைச் சேர்ந்த இச்சகோதரியின் குடும்பம் அமெரிக்க ஐக்கிய நாட்டில் குடியேறியதால் இச்சகோதரி, அமெரிக்காவில் பிறன்ரபு சகோதரிகள் சபையில் சேர்ந்தார். நியு மெக்சிகோவில் பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் இவர் உருவாக்கினார். ஒருசமயம், இவரது வகுப்பு மாணவர் ஒருவர் ஓடிவந்து, அப்பா ஒருவரைச் சுட்டுவிட்டார் எனவே அப்பாவைத் தூக்கிலிடப் போகிறார்கள் என்று கூறினான். உடனே அருள்சகோதரி Blandina அவர்கள், சுட்ட மனிதரிடம் தனது குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு எழுதி வாங்கினார். சுடப்பட்டு இறந்துகொண்டிருந்த மனிதரிடம் சென்று, அவரைச் சுட்டவரை மன்னிக்குமாறு மன்றாடினார். பின்னர் இந்த இரு மனிதர்களும் ஒப்புரவானார்கள். அதேநேரம், சுட்ட மனிதரைக் கொல்வதற்காக ஒரு கும்பல் ஆவேசத்துடன் ஆயுதங்களுடன் வந்து கொண்டிருந்ததைக் கண்டு, அவர்களைச் சமாதானப்படுத்தினார் அருள்சகோதரி Blandina. அக்கும்பல், ஆயுதங்களையும், தூக்குக் கயிறையும், காழ்ப்புணர்வையும் கைவிடச் செய்தார். சுட்ட மனிதருக்கு ஆயுள்தண்டனை பெற்றுக் கொடுத்தார். ஆயினும் ஒன்பது மாதங்கள் சென்று அந்த மனிதர் சிறையிலிருந்து விடுதலையாகி, தனது நான்கு குழந்தைகளையும் நன்கு பராமரித்து வரவும் உதவினார்.

அன்பு நேயர்களே, அருள்சகோதரி Blandina அவர்கள் பலமுறை வாஷிங்டன் சென்று சட்ட அமைப்பாளர்களைச் சந்தித்து, அமெரிக்க பூர்வீக இன மக்களின் நீர்வளங்கள் பாதுகாக்கப்படவும், அம்மக்களின் உரிமைகளும், மனித மாண்பும் காக்கப்படவும் நடவடிக்கை எடுத்தார். வன்முறைக் கும்பல்களும், கொலை வெறியர்களும் இச்சகோதரியின் அன்புக்கு அடிமையாகி இருந்ததால்தான் அவர்கள் தங்களின் தீய பழக்கங்களைக் கைவிட முடிந்தது. ஆகஸ்ட் 01, கடந்த சனிக்கிழமையன்று இச்சகோதரி பற்றி CNA ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது. சமூக நீதிக்காக உழைத்த அருள்சகோதரி Blandina அவர்களுக்கு உந்து சக்தியாகவும், ஊக்க மருந்தாகவும் இருந்தது இயேசு இறைவன்மீது அச்சகோதரி கொண்டிருந்த ஆழமான பற்று, அசையாத நம்பிக்கை. அதன் வழியாக அவரிடம் பிறந்த மனித நேயம், அன்பு. இறைவனிடம் ஆழமான பற்றும், உண்மையான நம்பிக்கையும் கொண்டவர்களின் வாழ்வு, அவர்களின் செயல்களில் வெளிப்படுகின்றது. செயல்களில் வெளிப்படாத இறைநம்பிக்கை செத்தது என்று புனித யாக்கோபும் கூறியுள்ளார். நமது பிறப்பு ஒரு நிகழ்வாக இருக்கலாம், ஆனால் நமது இறப்பு ஒரு வரலாறாக இருக்க வேண்டும் என்று சொன்ன, மறைந்த மக்கள் ஜனாதிபதி நம் APJ அப்துல் கலாம் அவர்கள், ஒருசமயம் சிவானந்தா பள்ளி மாணவருக்கு உரையாற்றிய பின்னர் இப்படிச் சொல்லச் சொன்னார்....

“இறைவனின் மக்கள் நாங்கள், வைரத்தை மிஞ்சும் நெஞ்சம் கொண்டோம், வெல்வோம், சாதிப்போம், வேதனைகளைத் துடைத்தெறிவோம், எந்தையருளால் எதுவும் எம் வசமாகும், இறைவன் எங்கள் பக்கம் எனில், எவர் எதிர்ப் பக்கம்”(APJ அப்துல் கலாம்)

“இறைவனின் குழந்தைகள்”என்ற எனது இந்தக் கவிதை வரிகளைத் தினமும் சொல்லுங்கள். உங்களுக்கு உற்சாகம் பிறக்கும் என்று மாணவரிடம் சொன்னார் நம் அறிவியல் மேதை அப்துல் கலாம். இறைவன் நம் பக்கம் இருக்கும்போது, இறைவன் என் பக்கம் இருக்கும்போது, யார் நம்மை, யார் என்னை என்ன செய்துவிட முடியும்?. இதைத்தான் புனித பவுலடிகளாரும் சொன்னார். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையில்.... "ஒவ்வொரு மனிதரும் தனக்குள் உடல் பசியையும், மற்றொரு பசியையும் கொண்டிருக்கின்றனர். நாம் அனைவரும் சுமந்துகொண்டிருக்கும் மிக முக்கியமான பசியை இவ்வுலகின் சாதாரண உணவால் திருப்திப்படுத்த முடியாது. அதுதான் நித்திய வாழ்வுக்கான பசி, நித்தியத்திற்கான பசி. இந்தப் பசியை வாழ்வின் உணவாகிய இயேசுவால் மட்டுமே திருப்திப்படுத்த முடியும். மனித வரலாற்றை, அதன் துன்பங்கள் மற்றும் இன்பங்களுடன் நித்திய பேரின்ப வாழ்வு என்ற கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். இறைவனோடு நாம் மேற்கொள்ளும் இறுதி சந்திப்பில் நம் வாழ்வின் அனைத்து நாள்களும் சுடர்விடும். நம் அன்றாட வாழ்வில் இறைவனின் பிரசன்னம் நமக்கு அதிகம் தேவைப்படுகின்றது. நமக்கு ஒரு கொடை கிடைக்கும்போது, அக்கொடையை அதிகம் மதிப்பதைவிட, அக்கொடையை கொடுத்தவர் யார் என்பதை நாம் அதிகம் நோக்க வேண்டும். நம் வாழ்வு இறைவனின் கொடை"... இவ்வாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உரையாற்றினார்.

நமக்கு வாழ்வெனும் கொடையைக் கொடுத்தவர் இறைவன். அந்த வாழ்வில் நாம் பெற்றுள்ள கொடைகளை, அதாவது நம் திறமைகளையும், நல்ல பண்புகளையும் போற்றிப் பெருமைப்படுவதைவிட, அவற்றை நமக்கு வழங்கியவர் யார் என்று நோக்கி அவருக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும், அதற்கேற்றாற்போல் வாழ்வை அமைத்துக்கொள்ள வேண்டும். இவ்வுலகில் துன்பங்கள், துயரங்கள் வராமல் இருக்காது. நாம் இவ்வுலக உணவுக்காக உழைப்பதை இறைவன் வேண்டாம் என்றும் சொல்லவில்லை. அப்படி உழைக்கும்போது நம் இவ்வுலக வாழ்வின் உண்மையான அர்த்தம் நமக்கு அனைத்தையும் அளித்துள்ள பெரும் வள்ளளாகிய இறைவனைச் சந்திப்பதில் இருக்கின்றது. நம் வாழ்வு இறைவனைவிட்டு விலகிச் சென்றால் அது வெறுமையை அனுபவிக்கும். அந்த வாழ்வில் நாள்கள் செல்லச் செல்ல விரக்தியும், அதிருப்தியும், எனக்கென்று யாரும் இல்லையே என்ற தனிமையுணர்வும் ஏற்படும். நமக்கு வீட்டிலும் வெளியிலும் பல உதவிகள் கிடைக்கின்றன. நமக்கு உதவிக்கரம் நீட்டுபவர் இறைவன் என்று அறியாமல், உதவியவரைப் பற்றிக் கொள்கிறோம் என்று ஆன்மீகவாதிகள் சொல்கின்றனர். எத்தனை பொருள் செல்வம் இருந்தாலும் அவை மனதிற்கு நிறைவை அளிக்காது, ஆனால், கடவுள் என்ற செல்வத்தை உள்ளத்தில் கொண்டிருப்பவர் எத்துணை இடர்கள் நேரிடினும் நிலைகுலையாமல் இருப்பார்கள். இந்தியாவில் இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 46 விவசாயிகள் வீதம் தற்கொலை செய்துகொள்கின்றனர். கடந்த எட்டு ஆண்டுகளில் 2 இலட்சத்து 96,438 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். உலக அளவில் நடைபெறும் விவசாயிகள் தற்கொலையில் 17 விழுக்காடு இந்தியாவில் நிகழ்கிறது என்று ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.

“கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே, அது உன்னைக் கொன்று விடும். கண்ணைத் திறந்து பார், நீ அதை வென்று விடலாம்” என்று சொன்ன நம் மக்கள் ஜனாதிபதி, “எந்தையருளால் எதுவும் எம் வசமாகும், இறைவன் எங்கள் பக்கம் எனில், எவர் எதிர் பக்கம்” என்ற அவரின் சொற்களையும் சிந்தித்துப் பார்ப்போம். வாழ்வின் மேன்மையை உணராமல், வாழ மறுக்கும் கோழைகளாக இல்லாமல், இன்பத்தை எதிர்பார்த்து, துன்பத்தை தாங்கிக்கொள்ள விரும்பாதவர்களாக இல்லாமல், இறைவன் இருக்கையில்... என்ற உணர்வில் வாழ முயற்சிப்போம். அன்பர்களே, என்ன துன்பம் வந்தாலும், இயற்கையான மரணம் வரும் வரை வாழ்ந்து பார்ப்பதுவே நம் பெருமை. அந்த வாழ்வில் தோல்வியில்லை. எந்நிலையிலும் நாம் துணிந்து வாழ்ந்தால், நாம் வாழும் நிலை பார்த்து இந்த உலகம் வாழ்த்தும். அன்பர்களே, இந்நேரத்தில் நாம் வேறு யாரையும் எடுத்துக்காட்டுக்குக் குறிப்பிடாமல், ஜூலை 27, கடந்த திங்களன்று மறைந்த ஏவுகணையின் தந்தையையே குறிப்பிடுகிறோம். இந்திய அறிவியலை உலகுக்கு உணர்த்திய அப்துல் கலாம் அவர்களின் இறைநம்பிக்கை நம்மை வியக்க வைக்கிறது. அவர் தினமும் காலையில் இப்படிச் சொல்லுங்கள் என ஐந்து வரிகளைச் சொல்லியிருக்கிறார். அவற்றைச் சொல்லி இந்நிகழ்ச்சியை நிறைவு செய்கிறோம்.

1. நானே சிறந்தவன்,  

2. என்னால் இயலும்,

3. இறைவன் எப்போதும் என்னோடு இருக்கிறார்,

4. நான் வெற்றியாளன்,

5. இன்று எனது நாள்  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.