2015-08-03 17:12:00

மத்திய ஆப்ரிக்க பகுதியில் தீவிரவாதிகளாக சிறார்கள்


ஆக.03,2015. மத்திய ஆப்ரிக்கப் பகுதியில் ஒன்பது வயது சிறுவர்களுக்குக்கூட ஆயுத பயிற்சி வழங்கி தங்கள் குழுவில் போர்வீரர்களாக இஸ்லாமிய தீவிரவாதிகள் வைத்துள்ள விவரம் தற்போது தெரிய வந்துள்ளதாக, அப்பகுதியில் பணியாற்றும் கத்தோலிக்க பிறரன்பு நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது.

காங்கோ சனநாயக குடியரசின் தெருக்களில் பசியால் அலையும் சிறார்களுக்கு ஆசைகாட்டி, அவர்களை, தங்கள் படைகளில் இணைத்துக்கொள்ளும் இஸ்லாமியத் தீவிரவாதிகளின் முகாம்கள், தற்போது அறியப்பட்டுள்ளதாகவும், இங்கு 60 சிறுமிகள் தீவிரவாதிகளை திருமணம் புரிய பலவந்தமாக வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தது Aid to the Church in Need கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்பு.  

தெருக்களில் அலையும் சிறார்களை, மேற்கத்திய நாடுகளில் படிக்க அனுப்புவதாக ஏமாற்றி, இஸ்லாமியத் தீவிரவாதிகள், தங்கள் முகாமுக்கு அழைத்துச் சென்று, பின்னர் அவர்களை துப்பாக்கி முனைகளின் கீழ் படைவீரர்களாக மாற்றிவருதாகவும் கூறுகிறது, இக்கத்தோலிக்க அமைப்பு.

காங்கோ குடியரசின் நிலையான தன்மைக்கு உதவும் நோக்கில், ஐ.நா. அமைப்பால் அனுப்பப்பட்ட படையில் உள்ள பாகிஸ்தான் இஸ்லாமியர்களே, இஸ்லாமியத் தீவிரவாத குழுக்களுக்கு உதவி வருவதாகவும் Aid to the Church in Need கத்தோலிக்க அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. 

ஆதாரம் : ACN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.