2015-08-03 16:16:00

பிள்ளைகள் சோதிக்க விரும்புவது பெற்றோரின் பொறுமையை


தாயில்லாத அந்த வீட்டில் தந்தை தனது குழந்தைகளை மிகவும் அன்புடன் வளர்த்து வந்தார். ஒருநாள் அவர் அவசர அவசரமாக சமையல் செய்துகொண்டிருந்தார். அப்போது, தொட்டிலில் கிடந்த மகன் முக்கி முணகத் தொடங்கினான். மகனைத் தூக்கி தோளில் போட்டு தட்டிக்கொடுத்துக் கொண்டே தெருவுக்குத் வந்தார். ஜான் பொறுமையாய் இரு என்று மகனை தடவிக் கொண்டிருந்தார். மகன் அழத் தொடங்கினான். ஜான், பொறுமை, பொறுமை, பொறுமையை மட்டும் நீ இழந்துவிடக் கூடாது என்று சொல்லிக்கொண்டே, கையில் வைத்திருந்த புட்டிப்பாலைக் கொடுத்தார். மகன் பாலைக் குடிக்க மறுத்து அதை ஒரு கையால் தட்டிவிட்டான். அதேநேரம் அழுகையை நிறுத்தாமல் வீரிட்டுக் கத்தினான். அப்போது அந்தத் தந்தை, ஜான், பொறுமை, பொறுமை. பொறுமை கடலினும் பெரிது. அதைமட்டும் நீ இழந்து விடாதே, கோபப்பட்டு விடாதே, கவலைப்படாதே, எல்லாம் சரியாகிவிடும். சரியா, ஜான் என்று சொல்லிக் கொண்டிருந்தார். இதைக் கவனித்த பக்கத்து வீட்டுக்காரர் அவரிடம், என்னங்க, சின்னக் குழந்தைக்கிட்ட போய் இப்படி பெரிய பெரிய அறிவுரைகளைச் சொல்றீங்க, குழந்தை கேட்கவா போகிறது என்று கேட்டார். அப்போது அழுத குழந்தையை அமைதிப்படுத்தியபடியே அத்தந்தை சொன்னார் – அறிவுரை என் மகனுக்கு அல்ல, அது எனக்குத்தான். என் பெயர்தான் ஜான் என்று. ஆம். பிள்ளைகள் முதலில் பெற்றோரின் பொறுமையைத் தானே சோதிக்க விரும்புகிறார்கள்      

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.