2015-08-03 16:22:00

திருத்தந்தை:வாழ்வுதரும் அப்பத்திற்கான ஆவலை வெளிப்படுத்துவோம்


ஆக.03,2015. இறைவனின் அன்பை வெளிப்படுத்தும் வாழ்வு தரும் அப்பத்திற்கான நம் ஆவலை வெளிப்படுத்துவோம் என தன் இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் அழைப்பு விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அப்பம் பலுகிய புதுமைக்குப் பின்னர், கப்பர்நாகுமுக்கு மக்கள் கூட்டம், இயேசுவைத் தேடிச்சென்ற நிகழ்வை விவரிக்கும் இஞ்ஞாயிறு வாசகம் குறித்து தன் மூவேளை செப உரையில் எடுத்துரைத்த திருத்தந்தை, இவ்வுலக உணவிற்காக இயேசுவைப் பின்தொடர்ந்த கூட்டம், தங்களின் ஆன்மீக விழியிழந்த நிலை குறித்து கவலை கொள்ளவில்லை என்றார். 

இயேசு அப்பத்தைப் பலுகச்செய்து வழங்கியது அவரின் அன்பின் வெளிப்பாடு என்பதை மக்கள் புரிந்துகொள்ளவில்லை என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவைத் தேடிவந்த மக்கள், அவரைவிட அவர் வழங்கிய அப்பத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தனர் என்றார்.

நம் உடல் தேடும் உணவுக்கான பசியை விட மேலான ஒரு பசி உள்ளது, அது முடிவற்ற வாழ்வுக்கானது, அதுவே வாழ்வுதரும் அப்பத்திற்கான பசி என மேலும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

துன்பம் நிறைந்த இவ்வாழ்வின் பாதையில், திருநற்கருணை வழி நாம் பெறும் வாழ்வின் அப்பமே நமக்கு நம்பிக்கையையும் அர்த்தத்தையும் தருகிறது என்ற திருத்தந்தை, மற்றவர்களுக்கான நம் சகோதரத்துவ மற்றும் உதவும் சாட்சிய வாழ்வு மூலம் கிறிஸ்துவையும் அவரின் அன்பையும் மக்களிடையே பிரசன்னமாக்க நம்மால் முடியும் என மேலும் எடுத்துரைத்தார்.

தன் மூவேளை செப உரையின் இறுதியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒப்புரவு அருளடையாளம் மற்றும்  இறைவனின் கருணை குறித்தும் எடுத்துரைத்தார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.