2015-08-01 15:02:00

பொதுக்காலம் 18ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை


ஜூலை 27, கடந்த திங்களன்று, அப்துல் கலாம் என்ற ஓர் உன்னத மனிதர், இவ்வுலகிலிருந்து விடைபெற்றுச் சென்றார். அவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோமே என்ற பெருமை, என் உள்ளத்தை நிறைப்பதுபோல், பல கோடி இந்தியர்களின் உள்ளங்களை நிறைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை. இந்தியாவின் தென் கோடியில் அமைந்துள்ள இராமேஸ்வரத்தில், ஓர் எளிய குடும்பத்தில் பிறந்து, உலகின் மிகப் பெரும் குடியரசின் தலைவராக உயர்ந்தவர், அப்துல் கலாம் அவர்கள். குடியரசுத் தலைவர் என்ற நிலைக்கு அவர் உயர்ந்தார் என்பதை விட, குடியரசு தலைவர் என்ற நிலைக்கு அவர் உயர்வைத் தந்தார் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்.

குடியரசுத் தலைவர் என்ற அடையாளத்தைவிட, ஓர் அறிவியல் மேதையாக, ஆசானாக, வழிகாட்டியாக, இளையத் தலைமுறையினரின் உள்ளங்களில் கனவுகளை விதைப்பவராக அவரை எண்ணிப் பார்ப்பதே பொருத்தமாகத் தெரிகிறது. மேகாலயா மாநிலத்தின் தலைநகர், ஷில்லாங் நோக்கி அவர் இறுதிப் பயணம் செய்தபோது, அவரோடு பயணம் செய்த Srijan Pal Singh என்ற இளையவர், அப்துல் கலாம் அவர்களிடம், "குடியரசுத் தலைவர், அறிவியல் ஆய்வாளர், ஏவுகணை பொறுப்பாளர், ஆசிரியர், எழுத்தாளர், பேச்சாளர் என்று பலவாறு நீங்கள் அடையாளம் பெற்றுள்ளீர்கள். இவற்றில் உங்களுக்குப் பிடித்த அடையாளம் எது?" என்று கேட்டதும், எவ்விதத் தயக்கமும் இன்றி, "ஆசிரியர்" என்று உடனே பதிலளித்தார், அப்துல் கலாம் அவர்கள்.

அறிவியல் உலகம் என்ற வரைபடத்தில், மதிப்பு மிக்க ஒரு தனியிடத்தை, இந்தியாவுக்குப் பெற்றுத்தந்தவர், அப்துல் கலாம் அவர்கள். 2020ல் இந்திய நாடு, உலக அரங்கில் வளர்ச்சியடைந்த ஒரு நாடாக திகழவேண்டும் என்ற கனவை இளையோர் உள்ளத்தில் ஆழப் பதித்தவர், இவர்.

குடியரசுத் தலைவராக கனவுகளை விதைக்க ஆரம்பித்த இவர், அப்பொறுப்பிலிருந்து விலகிய பின்னரும், இளையோரைச் சந்தித்து அவர்களுக்கு ஊக்கமளிக்கும் பணியைத் தொடர்ந்தார். அத்தகையதொரு பணியில் ஈடுபட்டிருந்தபோது, அதாவது, மேகாலயா மாநிலத்தின் தலைநகர், ஷில்லாங்கில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தில், இளையோரிடம் உரையாற்றிய வேளையில், அவரது உயிர் பிரிந்தது என்பது, அவரது வாழ்விற்கு அர்த்தம் தரும் முத்தாய்ப்பாக அமைந்தது. ஏனெனில் அவர், இரு வாரங்களுக்கு முன்னதாக, இளையவர் Srijan Pal Singh அவர்களிடம் பரிமாறிக் கொண்ட ஒரு கருத்து இது:    

“பணி செய்தவாறே இறப்பது, உண்மையிலேயே ஓர் ஆசீர்வாதம். நீண்ட காலம் நோயுற்று, இறப்பதைவிட, நின்றபடியே இறப்பது மேல். நாம் விடைபெறுவது,  குறுகிய காலத்தில், மிகக் குறுகிய காலத்தில் நடைபெற வேண்டும்.”

“... One is blessed if one can die working, standing tall without any long drawn ailing. Goodbyes should be short, really short.”

அறிவியல் மேதையாக, தலைசிறந்த ஆசானாக வாழ்ந்து மறைந்த அப்துல் கலாம் அவர்களைப் பற்றி, ஆயிரமாயிரம் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளலாம். அவர் கலந்துகொண்ட அந்த இறுதி நிகழ்வில், அவர் பேசவிருந்த தலைப்பை மையமாகக் கொண்டு, இன்று, நம் சிந்தனைகளை எழுப்புவோம். ஷில்லாங் இந்திய மேலாண்மை நிறுவனத்தில் பயிலும் மாணவர்களிடம், "Liveable Planet Earth" அதாவது, "வாழத் தகுந்த பூமிக் கோளம்" என்ற தலைப்பில், உரையாற்றச் சென்ற அப்துல் கலாம் அவர்கள், தன் உரையைத் துவங்கிய சில நிமிடங்களில், இவ்வுலகிலிருந்து விடைபெற்றுச் சென்றார்.

அணுசக்தியைக் கொண்டு இந்தியா எவ்விதம் முன்னேற முடியும் என்பதை, அப்துல் கலாம் அவர்கள் அடிக்கடி பேசிவந்துள்ளார். அணு சக்தி மீது அவர் கொண்டிருந்த ஆர்வம், பற்று, ஆகியவை, எனக்குள் பல நேரங்களில் கேள்விகளை எழுப்பியுள்ளன. அவர் எண்ணங்களை ஆமோதிக்கவோ, ஆதரிக்கவோ இயலாத நிலையில் நான் இருக்கிறேன். "வாழத் தகுந்த பூமிக் கோளம்" என்ற தலைப்பில் அவர் உரை வழங்கச் சென்றார் என்று கேள்விபட்டபோது, எனக்குள் ஓர் எண்ணம் எழுந்தது. அணு சக்தியோ, வேறு எந்த சக்தியோ, அதை, தகுந்த முறையில் பயன்படுத்தினால், இந்த பூமிக் கோளத்தை வாழத் தகுந்த இடமாக மாற்றமுடியும் என்பதை, அவர் தன் இறுதி உரையாக வழங்கச் சென்றாரோ என்ற எண்ணம் அது.

"வாழத் தகுந்த பூமிக் கோளம்" என்ற வார்த்தைகள், நம்பிக்கை தரும் வார்த்தைகள்; ஆனால், அதேநேரம், எச்சரிக்கை வார்த்தைகளாகவும் அவை ஒலிக்கின்றன. அறிவியல் மேதை, அப்துல் கலாம் அவர்கள், இத்தகையதோர் எச்சரிக்கையை ஜூலை மாத இறுதியில், நமக்கு விட்டுச் சென்றுள்ளது, பொருத்தமாகத் தெரிகிறது. ஏனெனில், இந்தப் பூமிக் கோளத்தை வாழத் தகுதியற்றதாக மனிதர்கள் மாற்றக்கூடும் என்ற அதிர்ச்சி தரும் உண்மை, 70 ஆண்டுகளுக்கு முன், ஆகஸ்ட் மாதத்தின் ஆரம்ப நாட்களில் நமக்கு வழங்கப்பட்டது.

ஆகஸ்ட் மாதம் ஆரம்பமானதும், நம் நினைவுகளை ஆக்கிரமிப்பது அணுகுண்டுத் தாக்குதல்கள். ஆம், 70 ஆண்டுகளுக்கு முன், 1945ம் ஆண்டு, ஆகஸ்ட் 6, 9 ஆகிய இரு நாட்கள், ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய இரு நகரங்களில், அணுகுண்டு தாக்குதல்களை நிகழ்த்தியது, அமெரிக்க ஐக்கிய நாடு. இத்தாக்குதல்களால் ஏற்பட்ட அழிவுகளைப்பற்றி, நாம் பக்கம்பக்கமாக வாசித்துவிட்டோம். எனவே புள்ளிவிவரங்களில் நாம் நேரத்தைச் செலவழிக்க வேண்டாம். அணுசக்தியின் பாதகமான விளைவுகளை நாம் இன்னும் சரியாகப் புரிந்துகொண்டுள்ளோமா என்பதே நம் கவலை. ஹிரோஷிமா அணுகுண்டு அழிவு முதல், ஃபுகுஷிமா (Fukushima) அணுஉலை விபத்து வரை, மனிதகுலம் அணுசக்தியை இன்னும் நம்பி வாழ்கிறதே என்ற கவலையை இறைவனிடம் எடுத்துச்சொல்லும் கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.

அணுசக்தியைப் பற்றி, அணுஉலைகளைப் பற்றி பல கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ள முடியும். இரு எண்ணங்களை நாம் இன்று அலசுவது, ஓரளவு பயனளிக்கும் என்று கருதுகிறேன். ஒரு ஞாயிறு வழிபாட்டிற்கு இந்த எண்ணங்கள் தேவைதானா என்ற கேள்வி எழலாம். நம் வாழ்வை இன்று பெருமளவில் பாதிக்கும் ஓர் உண்மையை, கிறிஸ்தவர்கள் என்ற முறையில் விசுவாசக் கண்ணோட்டத்துடன் காண்பதற்கு, ஞாயிறு வழிபாடு நல்லதொரு தருணம் என்று எண்ணுகிறேன்.

அணு சக்தியை காப்பாற்ற, பொய்மையில் நாம் வாழ வேண்டியுள்ளது என்பது முதல் எண்ணம். அணுசக்தியின் உண்மைக் கதைகள் எப்போதும் மக்களிடமிருந்து மறைக்கப்பட்டுள்ளன என்பதற்கு வரலாற்றில் பல வலுவான சான்றுகள் உண்டு. ஹிரோஷிமா, நாகசாகியில் அமெரிக்கா அணுகுண்டுகளை வீசியபோது, மனசாட்சியுள்ள பல்லாயிரம் அமெரிக்க மக்கள் சங்கடமான கேள்விகளை எழுப்பினார்கள்.

அவர்களது குரலை அடக்கியவர்கள், James Conant, Harvey Bundy, Henry Stimson என்ற மூவர். இரண்டாம் உலகப்போரை முடிவுக்குக் கொண்டுவர அணுகுண்டு தாக்குதல்கள் தேவைப்பட்டன என்று இவர்கள் அமெரிக்க அரசின் சார்பில் பேசி, மக்களை நம்பச்செய்தனர். ஆயினும், அன்றுமுதல் இன்றுவரை அமெரிக்கச் சமுதாயம் அந்தப் பொய்யைச் சீரணிக்க முடியாமல் தவிக்கிறது. இதில் கூடுதலான ஓர் எண்ணம் என்னவெனில், ஆகஸ்ட் 6ம் தேதி காலை 8.15 மணிக்கு, ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசப்பட்டபோது, அமெரிக்காவில் இரவு நேரம். மக்கள் உறங்கிக் கொண்டிருந்தனர். அந்த இரவிலிருந்து, பொய்யிலிருந்து, உறக்கத்திலிருந்து அவர்கள் இன்னும் மீளவில்லை என்பது, கசப்பான உண்மை.

ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் மாதம் துவங்கியதும், உலகின் பல நாடுகள், குறிப்பாக, ஜப்பானும், அமெரிக்க ஐக்கிய நாடும், அணுகுண்டு வீசப்பட்டதன் கசப்பான, துயரமான நினைவுகளை கடைப்பிடித்து வருகின்றன. மூன்று ஆண்டுகளுக்கு முன், நியூயார்க் நகரில் Pax Christi என்ற கிறிஸ்தவ பிறரன்பு அமைப்பு, ஒரு கருத்தரங்கையும், ஊர்வலத்தையும் நடத்தியது. இந்தக் கருத்தரங்கின் தலைப்பு: 'Nuclear Lies, Nuclear Truths' "அணுசக்தி சார்ந்த பொய்களும், உண்மைகளும்".

அணுகுண்டு தாக்குதல்களைப் பற்றி பொய்கள் சொல்லப்பட்டதுபோல், உலகில் உள்ள அணுஆயுதங்களைப் பற்றியும் பல பொய்கள் நம்மிடையே உலவி வருகின்றன. ஒவ்வொரு நாடும் பதுக்கிவைத்திருக்கும் அணு ஆயுதங்களைப்பற்றி, அரசுகள் அவ்வப்போது சொல்லும் புள்ளிவிவரங்கள் பலவும் பொய்களே. உலகில் உள்ள அணு ஆயுதங்களைப் பயன்படுத்தினால், இந்த உலகை ஐந்து முறைக்கும் அதிகமாக நாம் அழிக்கலாம் என்று கூறப்படுகிறது.

உலகை அழிப்பதற்கு அணு ஆயுதங்கள் மட்டும் போதாதென்று, உலகின் பெரும்பாலான நாடுகள், அணு உலைகளை நம்பி வாழ்கின்றன. நாடுகள் அமைத்துவரும் அணு உலைகளைப் பற்றியும், இதுவரை அணு உலைகளால் ஏற்பட்டுள்ள ஆபத்துக்களைப் பற்றியும் ஏகப்பட்ட பொய்கள் தொடர்ந்து கூறப்படுகின்றன. தமிழ்நாட்டின் கூடங்குளத்தில் உருவாக்கப்பட்ட அணுமின் நிலையத்தைப்பற்றிய முழு விவரங்களையும் வெளிப்படையாகச் சொல்லுங்கள் என்று மக்கள் போராடி வந்தாலும், முழு விவரங்களும் இதுவரைச் சொல்லப்படவில்லை. கூடங்குளத்தில் மட்டுமல்ல, உலகின் அனைத்து நாடுகளிலுமே அணு உலைகளைப்பற்றிய முழு உண்மைகள், மக்களிடமிருந்து மறைக்கப்பட்டுள்ளன. அணுசக்தியை உலகில் காப்பாற்ற வேண்டுமெனில், பொய்யையும் நாம் கண்ணும்கருத்துமாய் காப்பாற்ற வேண்டியிருக்கும். இது நமக்குத் தேவையா? ஏற்புடையதா?

இவ்வளவு ஆபத்தான அணுசக்திக்கு மாற்றாக, ஏனைய சக்திகளை நாம் பயன்படுத்த முடியாதா? என்ற கேள்வி, நமது இரண்டாவது சிந்தனையை ஆரம்பித்து வைக்கின்றது. இன்றைய உலகின் கழுத்தை நெரித்துக்கொண்டிருக்கும் இரும்புக் கரங்கள், பாதுகாப்பின்மை என்ற பிரச்சனை. இந்தப் பிரச்சனையின் ஆணிவேராக இருப்பது, சுயநலமும், பேராசையும் என்று சென்ற ஞாயிறு சிந்தித்தோம். இந்தப் பாதுகாப்பின்மையை இன்னும் பன்மடங்காக்கும் அணு ஆயுதங்களுக்கும், அணு உலைகளுக்கும் ஆணிவேராக அமைவது, அதே சுயநலமும் பேராசையும்தான்.

அணுசக்திக்கு மாற்றாக எத்தனையோ வகை இயற்கைச் சக்திகளை நாம் பயன்படுத்த முடியும். நீர், காற்று, சூரியஒளி என்ற அனைத்தையுமே நாம் சக்திகளாக மாற்றமுடியும். அப்படி நாம் மாற்றும் இயற்கைச் சக்திகளைக்கொண்டு நமது தேவைகளைப் போதுமான அளவு நிறைவு செய்துகொள்ளலாம். அதில் சந்தேகமேயில்லை. ஆனால், கட்டுக்கடங்காமல் வளர்ந்திருக்கும் நமது சுயநலத்தையும், பேராசைகளையும் நிறைவு செய்யும் ஆற்றல் இந்த இயற்கை சக்திகளுக்குக் கிடையாது. இதுதான் பிரச்சனை.

தேவைகளை மட்டும் நிறைவு செய்யும் வாழ்வை ஒவ்வொருவரும் மேற்கொண்டால், நமக்கு இத்தனை பொருட்கள் தேவையில்லை. மிகுதியான அந்தப் பொருட்களை உருவாக்கும் பிரம்மாண்டமான தொழிற்சாலைகளும், அத்தொழிற்சாலைகளை இயக்கும் அணுசக்தியும் தேவையில்லை. எப்போது நாம் தேவைகளைத் தாண்டி ஆசைகளையும், பேராசைகளையும்... வெறிகளாக வளர்த்துக்கொண்டோமோ, அப்போது அந்த வெறிகளை நிறைவுசெய்ய, இயற்கைச் சக்திகளைத் தாண்டி, அணுசக்தியைத் தேடினோம். பேராசை வெறியால் நாம் சேர்த்துவைத்துள்ள செல்வங்களைக் காக்க, அணு ஆயுதங்களையும் உருவாக்கினோம்.

அணு உலைகள் என்ற கோவில்களைக் கட்டி, அணுசக்தியை வழிபடும் நமது ஆசைகளையும், பேராசை வெறிகளையும் நீக்கிவிட்டு, நமக்கும், அடுத்தவருக்கும் உள்ள உண்மையானத் தேவைகளை நிறைவேற்றும் வாழ்வை நாம் அமைத்துக் கொள்ளவேண்டும் என்று கனவு காண்பதில் தவறில்லையே... இந்தக் கனவை எனக்குள் விதைத்தவை, இன்றைய வாசகங்கள்.

எல்லா உயிரினங்களுக்கும் அடிப்படைத் தேவையாக இருக்கும் பசியைப்பற்றி முதல் வாசகமும், நற்செய்தியும் பேசுகின்றன. எல்லா உயிரினங்களுக்கும் பசி என்பது பொதுவென்றாலும், மனிதரும், மற்ற உயிர்களும் இந்த அடிப்படைத் தேவையை நிறைவு செய்வதில்தான் எத்தனை, எத்தனை வேறுபாடுகள்!!!

பசியால் வாடும் இஸ்ரயேல் மக்கள், இறைவனையும், மோசேவையும் எதிர்த்து முணுமுணுக்கின்றனர். இறைவன், மோசே வழியாக, அவர்களுக்குத் தரும் பதிலுரையை இன்றைய முதல் வாசகத்தில் இவ்வாறு வாசிக்கிறோம்:

விடுதலைப்பயண நூல் 16: 4

“இதோ பார்! நான் உங்களுக்காக வானத்திலிருந்து அப்பத்தைப் பொழியப் போகிறேன். மக்கள் வெளியே போய்த் தேவையானதை அன்றன்று சேகரித்துக்கொள்ள வேண்டும். என் கட்டளைப்படி நடப்பார்களா இல்லையா என்பதை நான் இவ்வாறு சோதித்தறியப் போகிறேன்.”

இறைவனின்  இந்தக் கூற்றில் ஒரு பகுதி என் நெஞ்சில் 'பளீர்' என, சாட்டையடிபோல் விழுந்தது. தேவையானதை அன்றன்று சேகரித்துக் கொள்ள வேண்டும். அடிமைகளாக இருந்த இஸ்ரயேல் மக்கள் ஒரு நாட்டை உருவாக்கும் மக்களாக மாறுவதற்கு இறைவன் பாடங்கள் சொல்லித் தந்தார். பாடங்களை அவர்கள் பயின்றனரா என்பதைப் பரிசோதிக்க, தேர்வும் வைத்தார். ஒவ்வொருவரும் அவரவருக்குத் தேவையானதை அன்றன்று சேகரித்துக் கொள்ள வேண்டும். இம்மக்கள் தங்கள் தேவைகளை மட்டும் நிறைவுசெய்து வாழும் மக்களாக இருப்பார்களா அல்லது பேராசையில் அதிகம் சேர்த்துவைக்கும் மக்களாக இருப்பார்களா என்பதே, இறைவன் அவர்களுக்குத் தந்த முதல் சோதனை. அந்தச் சோதனையில் வென்றவரும் உண்டு, தோற்றவரும் உண்டு. அடுத்த நாளுக்குச் சேர்த்தவர்களின் உணவு, புழுவைத்து நாற்றமெடுத்தது என்று, 16ம் பிரிவின் பிற்பகுதியில் (வி.ப. 16: 20) நாம் வாசிக்கிறோம்.

அன்றும் சரி, இன்றும் சரி... தேவைக்கும் அதிகமாகச் சேர்த்துவைப்பது, பேராசை கொண்ட மனிதர்கள் மத்தியில் ஒரு நோயாக உருவெடுத்துள்ளது. சேர்த்துவைப்பதை ஒரு நோய் என்று சொன்னால், மலைபோல் குவித்துவைப்பதை என்னென்று சொல்வது? குவித்துவைக்கும் தீராத நோயில் சிக்கித்தவிக்கும் பலரைப்பற்றி நாம் கேட்கும் செய்திகள், நம்மை வியப்பிலும், வேதனையிலும் ஆழ்த்துகின்றன.

ஆயிரம் சோடி காலணிகளை ஒரு கண்காட்சி போல் சேர்த்து வைத்திருந்த ஒரு நாட்டின் தலைவி, நகைகளை, புடவைகளைக் குவித்து வைத்திருந்த ஒரு மாநிலத் தலைவி, பஞ்சு மெத்தையில், பஞ்சுக்குப் பதிலாக, பணக்கட்டுக்களைப் பதுக்கி வைத்திருந்த அமைச்சர், குளிக்கும் தொட்டியைத் தங்கத்தால் செய்திருந்த ஓர் அரசுத் தலைவர், நூறு கோடி டாலர்கள், அதாவது, 6400 கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டைக் கட்டியுள்ள ஒரு செல்வந்தர்... இந்த பட்டியலை இன்று முழுவதும் நம்மால் வாசிக்கமுடியும். இத்தகையோரின் பேராசை நோயினால், அந்நாட்டு மக்கள், முக்கியமாக வறியோர், அடிப்படைத் தேவைகளையும் இழந்து, அடையும் துன்பங்கள் ஏராளம்.

சேகரித்து வைக்கும் பேராசை நோய், பல்வேறு அளவுகளில் நம் ஒவ்வொருவரிலும் உள்ளது. இந்த நோயின் பக்கநோயாக இருப்பது, குறுக்கு வழியைத் தேடுவது. இந்த நோயைப்பற்றி இன்றைய நற்செய்தியில் நாம் வாசிக்கிறோம். தன்னைத் தேடிவந்த மக்களைப்பார்த்து இயேசு கூறும் வார்த்தைகள், நாம் அனைவரும் குறுக்கு வழி விரும்பிகள் என்பதை நமக்கு நினைவுறுத்துகிறது.

யோவான் நற்செய்தி 6: 24-26

அக்காலத்தில், இயேசுவும் அவருடைய சீடரும் அங்கு இல்லை என்பதைக் கண்ட மக்கள் கூட்டமாய் அப்படகுகளில் ஏறி இயேசுவைத் தேடிக் கப்பர்நாகுமுக்குச் சென்றனர். அங்கு கடற்கரையில் அவர்கள் அவரைக் கண்டு, “ரபி, எப்போது இங்கு வந்தீர்?” என்று கேட்டார்கள். இயேசு மறுமொழியாக, “நீங்கள் அரும் அடையாளங்களைக் கண்டதால் அல்ல, மாறாக, அப்பங்களை வயிறார உண்டதால்தான் என்னைத் தேடுகிறீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார்.

குறுக்கு வழிகள் என்ற மாயையையும், பேராசை வெறிகளையும் போக்குவதற்கு இயேசு சொல்லும் ஒரு வழி:

யோவான் நற்செய்தி 6: 27

அழிந்துபோகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள். அவ்வுணவை மானிடமகன் உங்களுக்குக் கொடுப்பார்.

தேவைகளைப் பெருக்கி, பேராசை வெறியர்களாக நாம் மாறினால், ஆண்டவனை ஒதுக்கிவிட்டு, அணுசக்திக்குக் கோவில் கட்டி கும்பிட வேண்டியிருக்கும், எச்சரிக்கை!!! பேராசை வெறிகளைக் களைந்து, தேவைகளை நிறைவேற்றும் மனதை வளர்த்துக்கொள்ளவும், அத்தகைய மனநிலையால், 'வாழத் தகுந்த பூமிக் கோளத்தை' நாம் உருவாக்கி, நமது அடுத்த தலைமுறைக்கு அதனை, அழகான ஓர் உறைவிடமாக விட்டுச் செல்லவும், இறைவன் நமக்கு நல்வழி காட்டவேண்டும் என்று இந்த ஞாயிறு வழிபாட்டில் உருக்கமாக மன்றாடுவோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.