அப்துல் கலாம் என்ற ஓர் உன்னத மனிதர், இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோமே என்ற பெருமை, பல கோடி இந்தியர்களின் உள்ளங்களை இந்நாட்களில் நிறைத்து வருகிறது. இந்தியாவின் தென் கோடியில் அமைந்துள்ள இராமேஸ்வரத்தில், ஓர் எளிய குடும்பத்தில் பிறந்து, உலகின் மிகப் பெரும் குடியரசின் தலைவராக உயர்ந்தவர், அப்துல் கலாம் அவர்கள். குடியரசுத் தலைவர் என்ற நிலைக்கு அவர் உயர்ந்தார் என்பதை விட, குடியரசு தலைவர் என்ற நிலைக்கு அவர் உயர்வைத் தந்தார் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். இந்தியாவில் ஒருவர் பெறக்கூடிய மிக உயர்ந்த விருது, 'பாரத இரத்தினா'. இந்தியத் தாயின் மணிமகுடத்தில் ஒளிமிகுந்த ஒரு இரத்தினமாக விளங்கிய அப்துல் கலாம் அவர்களுக்கு, இந்த விருது வழங்கப்பட்டதால், இந்த விருது இன்னும் பொருள் நிறைந்ததானது என்று சொல்வது மிகையல்ல.
அறிவியல் உலகம் என்ற வரைபடத்தில், மதிப்பு மிக்க ஒரு தனியிடத்தை, இந்தியாவுக்குப் பெற்றுத்தந்தவர், மறைந்த மாமனிதர், அப்துல் கலாம் அவர்கள். 2020ல் இந்திய நாடு, உலக அரங்கில் வளர்ச்சியடைந்த ஒரு நாடாக திகழவேண்டும் என்ற கனவை இளையோர் உள்ளத்தில் ஆழப் பதித்தவர், இவர்.
குடியரசுத் தலைவராக கனவுகளை விதைக்க ஆரம்பித்த இவர், அப்பொறுப்பிலிருந்து விலகிய பின்னரும், இளையோரைச் சந்தித்து அவர்களுக்கு ஊக்கமளிக்கும் பணியைத் தொடர்ந்தார். அத்தகையதொரு பணியில் ஈடுபட்டிருந்தபோது, அதாவது, மேகாலயா மாநிலத்தின் தலைநகர், ஷில்லாங்கில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தில், இளையோரிடம் உரையாற்றிய வேளையில், அவரது உயிர் பிரிந்தது என்பது, அவரது வாழ்விற்கு அர்த்தம் தரும் முத்தாய்ப்பாக அமைந்தது. ஏனெனில் அவர், இரு வாரங்களுக்கு முன்னதாக, தன்னுடன் பல பணிகளில் இணைந்து உழைத்துவந்த இளையவர் Srijan Pal Singh அவர்களிடம் பரிமாறிக் கொண்ட ஒரு கருத்து இது:
“பணி செய்தவாறே இறப்பது, உண்மையிலேயே ஓர் ஆசீர்வாதம். நீண்ட காலம் நோயுற்று, இறப்பதைவிட, நின்றபடியே இறப்பது மேல். நாம் விடைபெறுவது, குறுகிய காலத்தில், மிகக் குறுகிய காலத்தில் நடைபெற வேண்டும்.”
“... One is blessed if one can die working, standing tall without any long drawn ailing. Goodbyes should be short, really short.”
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |