2015-08-01 16:18:00

ஐ.எஸ். அரசின்கீழ் 80 இலட்சம் பேர் பயத்தில் வாழ்கின்றனர்


ஆக.01,2015. சிரியா மற்றும் ஈராக்கில் இடம்பெறும் ஐ.எஸ். இஸ்லாமிய அரசின் திட்டமிட்ட கடும் மனித உரிமை மீறல்களால் ஏறக்குறைய எண்பது இலட்சம் மக்கள் சொந்த இடங்களைவிட்டு கட்டாயமாக வெளியேற அல்லது மரணத்தை எதிர்கொள்ளும் அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றனர் என்று ஐ.நா. வல்லுனர் ஒருவர் தெரிவித்தார்.

இந்த உரிமை மீறல்கள், இனப்படுகொலைகளுக்கும், மனித சமுதாயத்திற்கெதிரான குற்றங்களுக்கும் இட்டுச் செல்லும் என்றுரைத்த ஐ.நா. வல்லுனர் Ben Emmerson அவர்கள், ஐ.எஸ். அரசின் வன்செயல்கள், போர்க் குற்றங்களாகவும், அப்பாவி குடிமக்கள் மீது பரவலான தாக்குதலை நடத்தியதாகவும் கருதப்படக்கூடும் என்று எச்சரித்துள்ளார்.

சிரியா மற்றும் ஈராக்கில், ஐ.எஸ். அரசின் கட்டுப்பாட்டுப் பகுதியில் வாழும் ஏறக்குறைய 80 இலட்சம் பேர், கற்பனைக்கெட்டாத பயச்சூழலில் தொடர்ந்து வாழ்ந்து வருகின்றனர் என்று, மனித உரிமைகளை ஊக்குவித்தல் குறித்த ஐ.நா. சிறப்புத் தொடர்பாளர் Emmerson அவர்கள் தெரிவித்தார்.

எட்டு வயதுச் சிறார்கூட இராணுவப் பயிற்சியளிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றனர் என்றுரைத்த Emmerson அவர்கள், இச்சிறார் பிறரின் தலைகளை வெட்டுவதை காணொளிகளில் ஐ.எஸ். அரசு வெளியிடுவதையும் குறிப்பிட்டார்.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.