2015-08-01 16:08:00

ஈராக்கில் அமைதிக்காகச் செபிக்க முதுபெரும் தந்தை அழைப்பு


ஆக.01,2015. ஈராக்கின் நினிவே பகுதி ஐ.எஸ். இஸ்லாமிய பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளான ஓராண்டு நிறைவை நினைவுகூர்ந்துள்ள அதேவேளை, அந்நாட்டின் அமைதிக்காகச் செபிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார் ஈராக் கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை இரபேல் லூயிஸ் சாக்கோ.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதிக்கும், 7ம் தேதிக்கும் இடைப்பட்ட இரவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளையும், உடைமைகளையும் கட்டாயத்தின்பேரில் விட்டுவிட்டு, ஈராக்கின் குர்திஸ்தான் பகுதியை நோக்கி நடந்ததை நினைவுகூர்ந்துள்ளார் முதுபெரும் தந்தை சாக்கோ.

இந்தக் கொடுமையையும், இதனை அனுபவித்த கிறிஸ்தவர்களையும் மறக்க வேண்டாமெனக் கேட்டுள்ள முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள், அம்மக்களுக்காகச் செபம் ஒன்றையும் எழுதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், உலகின் ஆயர்களும், செபிக்குமாறு கேட்டுள்ளார். 

2014ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி ஈராக்கின் நினிவே பகுதி கிறிஸ்தவ கிராமங்கள், ஐ.எஸ். இஸ்லாமிய அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்ததைக் குறிப்பிட்டு, ஈராக்கில் நிலையான அமைதி ஏற்பட உலகின் அனைத்துக் கிறிஸ்தவர்களும் செபிக்குமாறு கேட்டுள்ளார் முதுபெரும் தந்தை சாக்கோ.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.