2015-07-31 16:13:00

பூமியைப் பாதுகாப்பது சமூக விவகாரம், திருப்பீட அதிகாரி


ஜூலை,31,2015. வளரும் சிறிய தீவு நாடுகளுக்கு அதிக அளவில் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமெனில், அத்தீவு நாடுகள் காலநிலை மாற்றத்தால் எதிர்கொள்ளும் எதிர்மறைத் தாக்கங்கள் அகற்றப்பட வேண்டும் என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

“வளரும் சிறிய தீவு நாடுகள் எதிர்கொள்ளும் அமைதி மற்றும் பாதுகாப்புச் சவால்கள்” எனும் தலைப்பில், ஐ.நா. பாதுகாப்பு அவையில் இடம்பெற்ற பொது கலந்துரையாடலில் இவ்வியாழனன்று உரையாற்றிய பேராயர் பெர்னதித்தோ அவுசா அவர்கள் இவ்வாறு கூறினார்.

காலநிலை மாற்றத்தால், கடல் மட்ட உயர்வு, அதிகப்படியான வெப்பமண்டலப் புயல்கள், காற்று மற்றும் கடலின் வெப்பநிலை அதிகரிப்பு, பருவமழைக்காலத்தில் மாற்றம் போன்ற குறிப்பிடத்தக்க சில அச்சுறுத்தல்களை, வளரும் சிறிய தீவு நாடுகள் எதிர்கொள்வதையும் பேராயர் அவுசா அவர்கள் சுட்டிக்காட்டினார்.

இந்த அச்சுறுத்தல்கள், சுற்றுச்சூழல் விவகாரம் அல்லது வளர்ச்சித்திட்ட விவகாரம் என்று சொல்வதைவிட, தீவு நாடுகளின் வாழ்வுக்கே அச்சுறுத்தல் என்றும், கடல்மட்டம் தொடர்ந்து உயர்ந்து கொண்டிருப்பதையும், வெப்பநிலை மாற்றத்தால் எதிர்கொள்ளும் சவால்களையும் தீவு நாடுகளின் மக்களால் மேலும் எதிர்கொள்ள இயலாது என்றும் கூறினார் பேராயர் அவுசா.

பேராயர் பெர்னதித்தோ அவுசா அவர்கள், ஐ.நா.வுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.