2015-07-31 16:25:00

பாகிஸ்தானில் மரணதண்டனைகள் இரத்து செய்யப்பட வலியுறுத்தல்


ஜூலை,31,2015. பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் ஜூலை 29, இப்புதனன்று எட்டுக் கைதிகளுக்கு மரணதண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளவேளை, அந்நாட்டில் மரணதண்டனைகள் மீண்டும் இரத்து செய்யப்பட வேண்டுமென, கத்தோலிக்க தலத்திருஅவை அரசை கேட்டுள்ளது.

பாகிஸ்தானில் மரணதண்டனை நிறைவேற்றும் நடைமுறை, கடந்த ஆண்டு டிசம்பரில் மீண்டும் அமல்படுத்தப்பட்டதிலிருந்து, அந்நாட்டில் ஏறக்குறைய 188 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் அரசின் இந்நடவடிக்கையை குறை கூறியுள்ள மனித உரிமை குழுக்கள், ஐ.நா. நிறுவனம் மற்றும் திருஅவை, மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ள பலருக்கு விசாரணைகள் சரியான வழியில் இடம்பெறவில்லை என்று கூறியுள்ளன.

கத்தோலிக்கத் திருஅவை, மனித வாழ்வின் புனிதத்தை மதிக்கின்றது மற்றும் ஒருவரின் உயிரைப் பறிப்பதற்கு எவருக்கும் உரிமை கிடையாது என்று, பாகிஸ்தான் ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதி அவை கூறியது. 

பாகிஸ்தான் சிறைகளில் தற்சமயம் எட்டாயிரத்திற்கு மேற்பட்ட மரண தண்டனை கைதிகள் உள்ளனர் எனக் கூறப்படுகின்றது.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.