2015-07-31 16:08:00

சுரங்கத்தொழிற்சாலைகளால் பாதிக்கப்பட்டுள்ள சமூகங்களின் கடிதம்


ஜூலை,31,2015. சுரங்கத் தொழிற்சாலைகளால் பாதிக்கப்பட்டுள்ள சமூகங்களின் கண்ணீர்க் குரலுக்குச் செவிமடுத்து அச்சமூகங்களின் நல்வாழ்வுக்கென கத்தோலிக்கத் திருஅவை தன்னை அர்ப்பணித்திருப்பதற்கு நன்றி தெரிவிக்கும் திறந்த கடிதம் ஒன்றை, திருப்பீட நீதி மற்றும் அமைதி அவை பெற்றுள்ளது.

“இறைவனோடு ஒன்றித்து உங்கள் குரல்களைக் கேட்கிறோம்” என்ற தலைப்பில், ஜூலை 17ம் தேதி முதல் 19ம் தேதி வரை, திருப்பீட நீதி மற்றும் அமைதி அவையும், சுரங்கப் பணியாளர்க்கான இலத்தீன் அமெரிக்க அமைப்பும் இணைந்து உரோமையில் நடத்திய கருத்தரங்கில் கலந்து கொண்ட, இலத்தீன் அமெரிக்க சுரங்கத் தொழிற்சாலைகளால் பாதிக்கப்பட்டுள்ள சமூகங்கள் இணைந்து திறந்த கடிதம் ஒன்றை எழுதியுள்ளன. இக்கருத்தரங்கில், இந்தியா, பிலிப்பைன்ஸ் உட்பட 18 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இக்கருத்தரங்கு குறித்த தங்களின் எண்ணங்களை இக்கடிதம் வழியாகப் பகிர்ந்துகொண்டுள்ள இச்சமூகங்கள், நீதி, அமைதி, அன்பு மற்றும் அழகு நிரம்பிய இறையாட்சி வரும் என்ற நம்பிக்கையில் நாம் தொடர்ந்து நடப்போம் என்று கூறியுள்ளன.

இக்கருத்தரங்கிற்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பிய செய்தி, இன்னும், கர்தினால் பீட்டர் டர்க்சன் உட்பட இக்கருத்தரங்கில் உரையாற்றியவர்கள் வலியுறுத்திய கருத்துக்களையும் இக்கடிதம் குறிப்பிட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.