2015-07-30 16:09:00

மண்ணின் மகன் அப்துல் கலாம் அவர்களுக்கு அஞ்சலி


ஜூலை,30,2015. இந்தியத் தாயின் பாதத்தில் பிறந்து இந்தியத் தாயின் சிகரத்தைத் தொட்டு இந்தியத் தாய்க்கு மகுடம் சூட்டிய மாபெரும் மனிதர் நம் கலாம் ஐயா அவர்களுக்கு அஞ்சலியாக இந்நிகழ்ச்சியை அர்ப்பணிக்கின்றோம். நாட்டின் தலைமகனாக ஆட்சி செய்த போதும் எளிமையாய் வாழ்ந்து, மக்களின் ஜனாதிபதி என்று புகழப்படும் உன்னத மனிதர் கலாம் அவர்களின் உடல் மண்ணில் நல்லடக்கம் செய்யப்பட்டுவிட்டது. தாய் நாட்டை இரசித்து வந்த நட்சத்திர நாயகன் கலாம் அவர்களின் உடலுக்கு, வழியெங்கும் சாலையின் இரு பக்கங்களிலும் மக்கள் கண்ணீர் மல்க தங்களது இறுதி அஞ்சலி செலுத்தினர். அவரது உடல், நாட்டின் முழு இராணுவ மரியாதையுடன் 21 குண்டுகள் முழக்கத்துடன், பேய்க்கரும்பு என்ற பகுதியில் இஸ்லாமிய வழக்கப்படி இறுதி மரியாதை செய்யப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

நடிகர் சிவகுமார் அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்னர், சன் தொலைக்காட்சிக்காக, நம் அப்துல் கலாம் அவர்களைப் பேட்டி கண்டுள்ளார். இதில் கலாம் அவர்கள் தனது இளமைப்பருவம், குடும்பம் என பலவற்றை மிக எளிமையுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில், அவரின் குடும்பம் குறித்தும், அக்காலத்தில் அவர் பகுதியில் நிலவிய மத நல்லிணக்கம் குறித்தும் கூறுவதைக் கேட்போம்,

மக்கள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்கள், தன் வாழ்நாளில் ஒருபோதும் அன்பளிப்புகளை ஏற்காத அற்புத மனிதர். தன்னைப் பார்க்க வருபவர்கள் யாரும் அன்பளிப்புகள் தர வேண்டாம் என கூறி வைத்திருந்தார். அதையும் மீறித் தந்தாலும், அவற்றை அந்த இடத்திலேயே விட்டுவிடுவார். குடியரசுத் தலைவராக இருந்த காலகட்டத்தில் தனக்கு வந்த எந்த அன்பளிப்பையும், ஓய்வு பெற்ற பிறகு அவர் எடுத்துச் செல்லவில்லை. குடியரசுத் தலைவர் மாளிகைக்கு முதலில் அவர் சென்றபோது தன்னுடன் கொண்டு இரண்டு சூட்கேஸ்களில், அவர் ஓய்வு பெற்ற பிறகும் தனது உடை மற்றும் புத்தகங்களை (தான் பணம் கொடுத்து வாங்கியவற்றை மட்டும்) எடுத்துக் கொண்டு வெளியேறினார். சிவானாந்த பள்ளி மாணவர்களுக்கு ஒருமுறை கலாம் அவர்கள் உரையாற்றி மாணவர்களின் கேள்விகளுக்கும் பதில் சொன்னார். தன் வாழ்வின் மிக மகிழ்ச்சியான தருணம் எது எனக் குறிப்பிடுகிறார். அதைக் கேட்போம்.

இந்தியாவின் ஏவுகணை தந்தை என்று புகழப்படும் கலாம் ஐயா அவர்கள், நல்ல ஆசிரியராகத் திகழ்ந்தவர். அதேசமயம் தனது ஆசிரியர்களை அவர் ஒருபோதும் மறந்ததில்லை. ஆண்டுதோறும் செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினத்தன்று தனது ஆசிரியர்களுக்கு வாழ்த்து அட்டை அனுப்பி வந்தவர் கலாம். இவர் பெருமையுடன் குறிப்பிடும் ஆசிரியர்களில் ஒருவர், திருச்சி புனித வளனார் கல்லூரியில் அவருக்கு இயற்பியல் கற்பித்த இயேசு சபை அருள்பணியாளர் சின்னத்துரை அவர்கள். 93 வயதாகும் அருள்பணியாளர் சின்னத்துரை அவர்களை தொலைபேசியில் அழைத்து தனது மாணவர் பற்றிக் கேட்டோம். 60 ஆண்டுகள் தாண்டியும், இன்னும் தன் மாணவர் தன்னிடம் நன்றியுணர்வுடன் இருந்தாரே என்று பெருமையுடன் கூறினார் அருள்பணி சின்னதுரை.

அப்துல் கலாம் அவர்கள் இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவராகப் பணியாற்றியபோது ஐரோப்பிய ஒன்றிய அவையில் உரையாற்றினார். அப்போது புறநானூற்றிலிருந்து ஒரு மேற்கோளை தமிழிலே கூறினார். இவரின் உரையைக் கேட்ட அவையினர் கரகோஷம் எழுப்பி கைதட்டினர். அந்நிகழ்வின் இறுதியில் அவைத் தலைவர் எழுந்து, இப்படிப்பட்ட சிறந்த உரையை இதுவரை நாம் கேட்டதில்லை என்று பாராட்டினார்.

கலாம் அவர்கள், குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றவுடன் முதன் முறையாக கேரளாவுக்குச் சென்றார். அங்கு தன்னுடைய விருந்தாளிகளாக யாரை அழைத்தார் தெரியுமா? செருப்புத் தைப்பவர் ஒருவரையும், ஒரு சிறிய உணவு விடுதியின் உரிமையாளரையும்தான். திருவனந்தபுரத்தில் தான் அறிவியலாளராகப் பணியாற்றிய காலத்தில் தனக்கு அறிமுகமான இந்த எளியவர்களை தனது விருந்தாளிகளாக அழைத்ததன் மூலம் கலாம் எத்தகைய பண்பாளர் என்பது தெரிய வருகிறது.

கலாம் அவர்கள் பற்றி கவிஞர் வைரமுத்து அவர்களின் சில வார்த்தைகள்

இப்படி நம் தலைமகன், மண்ணின் மைந்தர் அப்துல் கலாம் அவர்கள் பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் நாம் அவரின் வாழ்வை எடுத்துக்காட்டாகப் பின்பற்றி, அவரின் கனவை நனவாக்குவதே நாம் அவருக்குச் செலுத்தும் உன்னத உண்மையான அஞ்சலியாக அமையும். இந்தக் கனவு நாயகன் விதைத்த விதை விருச்சமாக விரைந்தெழுந்து மாணவர்களின், இளைஞர்களின் எழுச்சிக்கு தொடர்ந்து வித்திடும் என்பது உறுதி. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.