2015-07-29 16:37:00

“ஒருவர் ஒருவருக்கு ஆசிர்வாதம்” அருங்காட்சியகம் திறப்பு


ஜூலை,29,2015. “ஒருவர் ஒருவருக்கு ஆசிர்வாதம்:புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களும் யூதர்களும்” என்ற தலைப்பில் வத்திக்கான் Charlemagne கட்டடத்தில் ஜூலை 29, இப்புதனன்று அருங்காட்சியகம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது.

புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், யூதர்களுடன் கொண்டிருந்த உறவுகளை விளக்கும் இந்த அருங்காட்சியகம், வருகிற செப்டம்பர் 17ம் தேதி வரை திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

இந்த அருங்காட்சியகம், ஏற்கனவே அமெரிக்க ஐக்கிய நாட்டின் பல்வேறு மாநிலங்களின் தலைநகரங்களில் அமைக்கப்பட்டிருந்தது. பத்து இலட்சத்துக்கு மேற்பட்ட மக்களும் அதைப் பார்வையிட்டனர்.

Karol Wojtyla அவர்களின் பிறப்பிடமான போலந்தின் Wadowiceவில் அவரின் குழந்தைப் பருவம் பற்றியும், அவரின் யூத இள நண்பர் Jerzy Kluger அவர்களோடு அவர் வாழ்வு முழுவதும் கொண்டிருந்த நட்புறவு பற்றியும் இந்த அருங்காட்சியகத்தின் முதல் பகுதியில் விளக்கப்பட்டுள்ளது.

இறுதிப் பகுதி, கர்தினால் Wojtyla அவர்கள், திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது, அவர் உரோம் யூதத் தொழுகைக் கூடம் சென்றது, 2000மாம் ஆண்டில் அவரின் இஸ்ரேல் திருத்தூதுப் பயணம் என பல நிகழ்வுகளை விளக்குகிறது.

புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களின் 85வது ஆண்டு பிறந்த நாள் பரிசாக, சின்சினாட்டி சேவியர் பல்கலைக்கழகம், 2005ம் ஆண்டு மே 18ம் தேதி இந்த அருங்காட்சியகத்தை அவருக்கு அளித்தது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.