2015-07-29 16:58:00

சிரியா-மிதவாதிகளுக்கு அனுப்பப்படும் உதவிகள் தீவிரவாதிகளிடம்


ஜூலை,29,2015. சிரியாவில் போரிடும் குழுக்களில், மிதவாத எதிர்தரப்புகள் என்று அழைக்கப்படும் குழுக்களுக்கு, மேற்குப் பகுதி நாடுகளிலிருந்து கிடைக்கும் உதவிகள் ஐ.எஸ்.ஐ.எஸ். இஸ்லாமிய தீவிரவாதிகள் மற்றும் பிற தீவிரவாதிகளைச் சென்றடைகின்றன என்று சிரியா முதுபெரும் தந்தை கவலை தெரிவித்தார்.

சிரியாவில் பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு செல்வதாக, Aid to the Church in Need கத்தோலிக்கப் பிறரன்பு நிறுவனத்திடம் தெரிவித்த, சிரியாவின் மெல்கிதே கிரேக்க கத்தோலிக்க வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை 3ம் Gregorios அவர்கள் கூறினார்.

சிரியா அரசுத்தலைவர் பாஷர் அல்-அசாத் அவர்களுக்கு எதிரான சண்டையில் போரிடும் மிதவாதக் குழுக்களுக்கு வழங்கப்படும் பணமும், ஆயுதங்களும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளால் பயன்படுத்தப்படுகின்றன என்று கூறினார் முதுபெரும் தந்தை 3ம் Gregorios.

சிரியாவில் போரிடும் மிதவாதிகளுக்கு மேற்கிலுள்ள நாடுகள் நேரிடையாக செய்யும் உதவி, மறைமுகமாக ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுக்குச் செய்வதாக உள்ளது என்றும் கூறினார் முதுபெரும் தந்தை 3ம் Gregorios.

சிரியாவின் குறைந்தது 4 இலட்சத்து 50 ஆயிரம் கிறிஸ்தவர்கள், நாட்டுக்குள்ளே புலம்பெயர்ந்துள்ளனர் அல்லது அகதிகளாக வெளிநாடுகளில் வாழ்கின்றனர் என்றும், தற்போது நாற்பதாயிரம் கிறிஸ்தவர்கள் ஜெர்மனியிலும், ஐம்பதாயிரம் கிறிஸ்தவர்கள் சுவீடனிலும் வாழ்கின்றனர் என்றும் முதுபெரும் தந்தை 3ம் Gregorios அவர்கள் தெரிவித்தார்.

ஆதாரம் : Zenit / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.