2015-07-29 16:45:00

அமெரிக்க திருத்தூதுப் பயணம் பற்றி கர்தினால் Wuerl


ஜூலை,29,2015. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அமெரிக்க ஐக்கிய நாட்டு மக்களுக்கு விடுக்கும் அழைப்பு உண்மையிலேயே மக்களால் மிகுந்த வரவேற்பை பெறும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் நேர்மறைத் தாக்கம் உண்மையானது என்று அமெரிக்க ஐக்கிய நாட்டுத் திருஅவை அதிகாரி ஒருவர் கூறினார்.

வருகிற செப்டம்பரில், அமெரிக்க ஐக்கிய நாட்டின் நியுயார்க், வாஷிங்டன், பிலடெல்பியா ஆகிய நகரங்களுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளவிருப்பதை முன்னிட்டு Rome Reports ஊடகத்திற்குப் பேட்டியளித்த வாஷிங்டன் கர்தினால் Donald Wuerl அவர்கள் இவ்வாறு கூறினார்.

அமெரிக்க ஐக்கிய நாட்டு கத்தோலிக்கரில் பத்துக்கு ஒன்பது பேர் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மீது உடன்பாட்டு உணர்வுகளைக் கொண்டிருக்கின்றனர், அமெரிக்க ஐக்கிய நாட்டில் திருத்தந்தை மிகவும் வரவேற்கப்படுவார் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை என்றும் கூறினார் கர்தினால் Wuerl. 

ஆயினும், ஓரினச் சேர்க்கை திருமணங்கள், திருத்தந்தையின் காலநிலை மாற்றம் குறித்த திருமடல் போன்ற விவகாரங்களில் சில மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன என்பதையும் குறிப்பிட்டார் கர்தினால் Wuerl.

அமெரிக்க ஐக்கிய நாட்டு மக்கள் தொகையில் ஏறக்குறைய 24 விழுக்காட்டினர் கத்தோலிக்கர். அருள்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்படும் குருத்துவ மாணவரின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட இவ்வாண்டில் 25 விழுக்காடு அதிகம் என்பதையும் சுட்டிக்காட்டினார் கர்தினால் Wuerl

ஆதாரம் : Rome Reports / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.