2015-07-25 15:57:00

பொதுக் காலம் 17ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை


ஜூலை,25,2015. ஜூலை 14ம் தேதி, விண்வெளிப் பயணத்தில் மற்றொரு மைல்கல் நாட்டப்பட்டது. அமெரிக்க ஐக்கிய நாட்டின் விண்வெளி ஆய்வு மையம், NASA ஏவிய ஒரு விண்கலம்,

மணிக்கு, ஏறத்தாழ 50,000 கி.மீ. வேகத்தில் 9 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயணித்து, சூரியக் குடும்பத்தின் தூரத்து உறவினரைத் தொட்டுவிட்டது. பூமிக்கும், புளுட்டோவுக்கும் இடையே உள்ள தூரம் ஏறத்தாழ 600 கோடி கி.மீட்டர்கள் என்று கூறப்படுகிறது.

பூமிக்கும், புளுட்டோவுக்கும் இடைப்பட்ட தூரத்தில், பல கோளங்கள், பல்லாயிரம் செயற்கைக் கோள்கள், இன்னும் பலகோடி விண்மீன் பாறைகள் ஆகியவை விண்வெளியில் தாறுமாறாக உலவுகின்றன. மணிக்கு 50,000 கி.மீ. வேகத்தில் பயணித்த அந்த விண்கலம், இவற்றில் எதனுடனும் மோதாமல், 600 கோடி கி.மீட்டர் தூரத்தைக் கடந்தது, உண்மையிலேயே ஒரு மாபெரும் வெற்றிதான்.

'புதியத் தொடுவானங்கள்' என்ற விண்கலம் புளுட்டோவை நெருங்கிய அதே ஜூலை 14, 15 ஆகிய நாட்களில், வியென்னா நகரில், ஈரான் நாட்டுடன் அணு ஒப்பந்தம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டது. மனித சமுதாயம் அணு ஆயுதங்களின் ஆபத்திலிருந்து பாதுகாப்பு பெறும் என்பதை இந்த ஒப்பந்தம் ஓரளவு உறுதி செய்துள்ளது என்ற நிம்மதிப் பெருமூச்சு வெளியேறினாலும், இவ்வுலகம் பாதுகாப்பின்றி உள்ளது என்பதை நம் ஊடகங்கள் ஒவ்வொரு நாளும் இடித்துரைக்கின்றன.

புளுட்டோவைத் தொட்ட விண்கலம், ஈரான் அணு ஒப்பந்தம் இரண்டையும் இணைத்துச் சிந்திக்கும்போது, ஓர் ஏக்கம் எழுகிறது. மோதல்களும், பிரச்சனைகளும் இன்றி, விண்வெளியில் பலகோடி மைல்களைக் கடக்கும் வழிகளை கண்டுபிடித்த நாம், பக்கத்து நாடுகளுடன், பக்கத்து ஊர்களுடன் மோதல்கள் இன்றி வாழும் வழிகளை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் எழுகிறது. விண்வெளியை வெல்லும் நாம், நம் மனவெளியை வெல்ல முடியவில்லையே என்ற நெருடல் எழுகிறது.

"நமது காலத்தின் புதிர் / முரண்பாடு" (The Paradox of Our Time) என்ற தலைப்பில், பல ஆண்டுகளுக்கு முன், என்னை வந்து சேர்ந்த ஒரு மின்னஞ்சலில் நான் வாசித்த வரிகள், இந்த நெருடலை வெளிப்படுத்துகின்றன:

பெரும் முயற்சிகள் எடுத்து, விண்வெளியைக் கடந்து, நாம் நிலவைத் தொட்டுவிட்டு வந்துள்ளோம்; ஆனால், தெருவைக் கடந்து, அடுத்தவீட்டுக் காரரைச் சந்திக்க, நாம் தயங்குகிறோம். வெளி மண்டலத்தை வென்றுவிட்டோம், ஆனால், உள்மண்டலத்தை வெல்லவில்லை.

உலகமனைத்தையும், வான்வெளி அனைத்தையும் வென்று, அதே நேரம் ஆன்மாவை இழந்து தவிக்கும் (மத். 16:26; மாற். 8:36; லூக். 9:25) நாம், எந்த நேரத்தில், எவ்விடத்திலிருந்து, எவ்வகையில் வன்முறைகள் வெடிக்கும் என்பது தெரியாமல் வாழ்ந்து வருகிறோம். இன்றைய நமது சமுதாயத்தை ஒவ்வொரு நாளும் சிதைக்கும் ஒரு பெரும் பிரச்சனை, பாதுகாப்பின்மை.

பாதுகாப்புடன் வாழவேண்டும் என்பது மனிதராய்ப் பிறந்த ஒவ்வொருவரின் அடிப்படை வேட்கை. அண்மையக் காலங்களில் ‘பாதுகாப்பு’ என்று நாம் பேசும்போது, மனித பாதுகாப்பை மட்டும் நாம் எண்ணிப் பார்ப்பதில்லை. நம்மைச் சுற்றியுள்ள சுற்றுச்சூழலையும் பாதுகாக்கவேண்டும் என்று எண்ணிப் பார்க்கிறோம். நாமும், நமது சுற்றுச்சூழலும் பாதுகாப்பின்றி போனதற்கு காரணம் என்ன? நமது சுயநலமும், பேராசையும், இந்த பாதுகாப்பற்ற நிலைக்கு, நம்மைத் தள்ளிவிட்டுள்ளன. இந்த எண்ணத்தை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அண்மையில் வெளியிட்ட, "இறைவா உமக்கே புகழ்" என்ற திருமடலில் அழுத்தந்திருத்தமாகக் கூறியுள்ளார்.

இன்றைய உலக நிலை, நிலையற்ற, உறுதியற்ற உணர்வை உருவாக்குகிறது. இது, தன்னலம் வளர்வதற்கு விளைநிலமாக மாறுகிறது. மக்கள் தங்களை மையப்படுத்தி, தங்களுக்குள் புதைந்துபோகும்போது, அவர்களது பேராசை பெருகுகிறது.

சுயநலமும், பேராசையும் கட்டுப்பாடின்றி வளர்ந்துவிட்டதால், இருப்பவர்கள் தேவைக்கும் மிகமிக அதிகமாகச் சேர்த்துக்கொண்டே உள்ளனர். இதனால், இல்லாதவர்கள் தங்கள் அடிப்படைத் தேவைகளையும் இழந்து தவிக்கின்றனர். இருப்பவர்களுக்கும், இல்லாதவர்களுக்கும் இடையே நினைத்துப் பார்க்கவும் முடியாத ஒரு பெரும் பாதாளம் உருவாகிவிட்டது.

நாடுகளுக்கிடையில், சமுதாயங்களுக்கிடையில், தனி மனிதர்களுக்கிடையில் வெடிக்கும் வன்முறைகளை, அதனால் உருவாகியுள்ள பாதுகாப்பற்ற நிலையை ஆழமாக ஆய்வு செய்தால், இந்த நிலையின் ஆணிவேராக நாம் காண்பது... இருப்பவர் - இல்லாதவர் என்ற இணைக்கமுடியாத இருவேறு உலகங்கள்.

பிளவுபட்டு நிற்கும் இந்த உலகங்களை இணைக்கும் வழிகளைத் தேடுவதற்குப் பதிலாக, இல்லாதவரின் உலகிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள, இருப்பவரின் உலகம், ஆயுதங்களையும், அரசியல் தந்திரங்களையும் நம்பி வாழ்கிறது. இந்தப் பிரச்சனையைத் தீர்க்க ஒரே வழி... பகிர்வு.

இருப்பதை இல்லாதாரோடு பகிர்ந்தால், இந்த உலகம் அதிகப் பாதுக்காப்பில் வளர்ந்து, பல புதுமைகளைக் காணமுடியும் என்பதை நமக்கு இன்றைய வாசங்கள் நினைவுறுத்துகின்றன.

மக்களின் பசியைப் போக்க, தங்களிடம் இருக்கும் உணவு போதுமா என்ற கேள்வி அரசர்கள் இரண்டாம் நூலிலும், யோவான் நற்செய்தியிலும் எழுப்பப்படுகிறது. இருந்தாலும், இறைவனை நம்பி உணவு பரிமாற்றம் ஆரம்பமாகிறது. இறுதியில், மக்கள் வயிறார உண்ட பின்னர், மீதம் உணவும் இருக்கிறது.

இவ்விரு நிகழ்வுகளையும் மேலோட்டமாகச் சிந்திக்கும்போது, ஓர் எண்ணம் தோன்ற வாய்ப்புண்டு. அதாவது, உலகின் பசியைப் போக்க, இல்லாதவர்களின் குறையைப் போக்க இறைவன் நேரில் வந்து ஏதாவது புதுமைகள் செய்யவேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுவதற்கு வாய்ப்புண்டு. ஆயினும், இந்த இரு வாசகங்களையும் இன்னும் ஆழமாக ஆராய்ந்தால், ஓர் உண்மை தெளிவாகும். இறைவன் இந்த உணவை ஒன்றுமில்லாமையிலிருந்து உருவாக்கி, பலுகிப் பெருகச் செய்யவில்லை. கூட்டத்தில் ஒருவர் கொண்டுவந்து கொடுத்த உணவே இந்தப் புதுமையின் அடித்தளமாக அமைந்ததைப் பார்க்கலாம்.

அரசர்கள் - இரண்டாம் நூல் 4: 42

பாகால் சாலிசாவைச் சார்ந்த ஒரு மனிதர் புது தானியத்தில் செய்யப்பட்ட இருபது வாற்கோதுமை அப்பங்களையும், தம் கோணிப் பையில் முற்றிய தானியக் கதிர்களையும் கடவுளின் அடியவரான எலிசாவிடம் கொண்டு வந்தார்.

என்று இன்றைய முதல் வாசகம் ஆரம்பமாகிறது. ஒருவர் மனமுவந்து தந்த அந்த உணவு ஒரு நூறு பேருக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது.

பகிர்வைப் பற்றிய அழகியதொரு பாடத்தை, இன்றைய நற்செய்தியில் இயேசு சொல்லித் தருகிறார். பாலை நிலத்தில் தன்னைத் தேடிவந்த மக்களைக் கண்டதும், அவர்களுக்கு விருந்து பரிமாறச் சொல்கிறார் இயேசு. இயேசுவின் அந்த ஆர்வத்திற்கு எதிராக, கேள்விகள் எழுகின்றன, ஒரு சிறுவனிடம் உணவு உள்ளதென்று சொல்லப்படுகிறது. அந்தச் சிறுவன் தந்த உணவு அங்கு நிகழ்ந்த அற்புதத்தைத் துவக்கிவைத்தது. சிறுவன் தந்த ஐந்து அப்பம், இரண்டு மீன், இறைமகன் ஆசீர்... ஐயாயிரம் பேர் வயிறார உண்டனர்... மீதியும் இருந்தது.

இந்தப் புதுமையை இருவேறு கண்ணோட்டங்களில் சிந்திக்கலாம். இயேசு தனி ஒருவராய் உணவைப் பலுகச்செய்தார் என்று சிந்திப்பது ஒரு கண்ணோட்டம். மற்றொரு கண்ணோட்டம் - ஒரு சில விவிலிய ஆய்வாளர்கள் சொல்லும் கருத்து. 'பகிர்தல்' என்ற புதுமையை, இயேசு பாலைநிலத்தில் துவக்கிவைத்தார் என்பது இரண்டாவது கண்ணோட்டம். இந்தக் கண்ணோட்டத்தில் நம் சிந்தனைகளைத் துவக்கிவைப்பது ஒரு கேள்வி: சிறுவன் எதற்காக உணவுகொண்டு வந்திருந்தான்? பொதுவாக, வெளியூர் செல்லும்போது, முன்னேற்பாடாக உணவு எடுத்துச் செல்லவேண்டும் என்று குழந்தைகளோ, சிறுவர்களோ எண்ணிப் பார்ப்பதில்லை. அவர்களுக்குத் தேவையான உணவை தயாரித்து, எடுத்துச்செல்வது... பெற்றோரே. யூதர்கள் மத்தியில் இதுபோன்ற முன்னேற்பாடுகள் கூடுதலாகவே இருந்தன. காரணம் என்ன?

பல தலைமுறைகளாய், யூதர்கள் அடிமை வாழ்வு வாழ்ந்ததால் உணவின்றி தவித்தவர்கள். எனவே, அவர்கள் வீட்டைவிட்டு வெளியேறும்போது மடியில் கொஞ்சம் உணவு எடுத்துச் செல்வது அவர்கள் வழக்கம். அன்றும், பாலைநிலத்திற்கு இயேசுவைத் தேடிச்சென்ற அந்தக் கூட்டத்தில், ஒரு குடும்பம் இருந்தது. தாங்கள் செல்வது பாலைநிலம் என்பதால், குடும்பத்தலைவி முன்மதியோடு செயல்பட்டார். குடும்பமாய்ச் சென்ற தங்களுக்குத் தேவையான ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் தயாரித்திருந்தார். அந்த உணவு பொட்டலத்தை சிறுவன் சுமந்து வந்திருந்தான்.

மாலை ஆனதும் பசி வயிற்றைக் கிள்ள ஆரம்பித்தது. உணவுப் பொட்டலங்களை யார் முதலில் பிரிப்பது? பிரித்தால், பகிர வேண்டுமே என்ற எண்ணங்கள் அந்த பாலை நிலத்தில் வலம் வந்தன! இயேசுவின் போதனைகளில் பகிர்வைப் பற்றி பேசினார்… சரிதான். ஆனால் எப்படி இத்தனை பேருக்குப் பகிரமுடியும்? இது நடக்கக்கூடிய காரியம்தானா? நமக்கேனக் கொண்டுவந்திருப்பதைக் கொடுத்துவிட்டால் நாம் என்ன செய்வது? போன்ற கேள்விகளில் பெரியவர்களும், இயேசுவின் சீடர்களும் முழ்கி இருந்தனர். பொதுவாக, குழந்தைகளின் எண்ண ஓட்டங்கள், பெரியவர்களின் எண்ண ஓட்டங்களைப் போல் இருக்காது. அதனால், அந்தப் புதுமை நிகழ்ந்தது.

மக்களுக்கு உணவளிப்பது பற்றி இயேசு சீடர்களிடம் பேசுவதைக் கேட்ட அந்தச் சிறுவன், அம்மா தன்னிடம் கொடுத்திருந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் இயேசுவிடம் கொண்டு வந்து கொடுத்தான். பின்விளைவுகளைச் சிறிதும் கணக்கு பார்க்காமல், கள்ளம் கபடமற்ற ஒரு புன்னகையுடன் அந்தச் சிறுவன் இயேசுவிடம் வந்து, தன்னிடம் இருந்ததையெல்லாம் பெருமையுடன் தந்ததை நாம் கற்பனை செய்து பார்க்கலாம். அந்தக் குழந்தையின் செயலால் தூண்டப்பட்ட மற்றவர்களும், தாங்கள் கொண்டுவந்திருந்த உணவைப் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தனர். ஆரம்பமானது ஓர் அற்புத விருந்து. இயேசு அன்று நிகழ்த்தியது, ஒரு பகிர்வின் புதுமை. இது இரண்டாவது கண்ணோட்டம்.

தனியொருவராய் இயேசு அப்பங்களைப்  பலுகச் செய்தார் என்பது, புதுமைதான். ஆனால், அதைவிட, இயேசு, மக்களைப் பகிரச் செய்தார் என்பதை, நான் மாபெரும் ஒரு புதுமையாகப் பார்க்கிறேன்.

நாம் வாழும் இன்றைய உலகில் இந்தப் பகிர்வுப் புதுமை அதிகம் தேவைப்படுகிறது. வளங்கள் பலவும் நிறைந்த இன்றைய உலகில் இன்னும் கோடான கோடி மக்கள் பசியிலும் பட்டினியிலும் மடிகின்றார்கள்.

Huffington Post என்ற நாளிதழில், 2014, டிசம்பர் வெளியான ஒரு செய்தியின் தலைப்பு: We Already Grow Enough Food For 10 Billion People -- and Still Can't End Hunger - அதாவது, "1000 கோடி மக்களுக்குத் தேவையான உணவை நாம் உற்பத்தி செய்கிறோம் - இருப்பினும், பட்டினியை ஒழிக்க முடியவில்லை"

ஊடகங்களில் வெளியான ஒரு புள்ளிவிவரத்தின்படி, ஒவ்வொரு நாளும் 3.6 நொடிக்கு ஒருவர் பட்டினியால் இறக்கின்றார். இதில் என்ன கொடுமை என்றால், இந்த மரணங்கள் தேவையற்றவை. உலகத்தின் இன்றைய மக்கள் தொகை 730 கோடி. உலகில் தினம் தினம் 750 கோடி மக்கள் உண்பதற்குத் தேவையான அளவு உணவு உற்பத்தியாகிறது. இருந்தாலும், 140 கோடிக்கும் மேலான மக்கள் பட்டினியில் வாடுகின்றனர். கணக்கிட்டுப் பார்த்தால், ஒவ்வொரு நாளும் 160 கோடி மக்களுக்குப் போய் சேரவேண்டிய உணவு, ஒவ்வொரு நாளும் வீணாகக் குப்பையில் எறியப்படுகிறது. இது வேதனை தரும் உண்மை. இந்த நிலையால், ஒவ்வோர் ஆண்டும் 30 லட்சம் மக்கள் பட்டினியால் இறக்கின்றனர். இவர்களில் பெரும்பாலோனோர் குழந்தைகள்.

இந்தத் தேவையற்ற மரணங்கள் நிறுத்தப்பட வேண்டுமானால், இயேசு அன்று ஆற்றிய பகிர்வுப் புதுமை மீண்டும் உலகமெல்லாம் நடக்கவேண்டும்.

வானிலிருந்து இறைவன் இறங்கி வந்து புதுமை செய்தால்தான் இவ்வுலகின் பசியைப் போக்க முடியும்; சக்திவாய்ந்த அரசுகள் மனது வைத்தால்தான் இந்தக் கொடுமை தீரும்; இருப்பவர்கள் பகிர்ந்து கொண்டால்தான் இல்லாதவர் நிலை உயரும் என்றெல்லாம் எதிர்பார்த்து காத்திருப்பதை விட்டுவிட்டு, பகிர்வு என்ற புதுமையை அந்தச் சிறுவனைப் போல் நம்மில் யாரும் ஆரம்பித்து வைக்கலாம்.

பகிர்வதால், பாசம் வளரும், பாதுகாப்பும் உலகில் பெருகும். பகிர்வுக்குப் பதில், சுயநலக் கோட்டைகள் பிரம்மாண்டமாக எழுந்தால், அந்தக் கோட்டைகளைக் காக்க இன்னும் தீவிரமான பாதுகாப்புத் திட்டங்கள் தேவைப்படும். நற்செய்தியில், சிறுவன் வழியாக, இயேசு சொல்லித்தரும் பகிர்வுப் பாடங்களைக் கற்றுக்கொள்ள நமக்கு இறைவன் பணிவான மனதைத் தரவேண்டுமென்று மன்றாடுவோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.