2015-07-24 17:00:00

வளம்கொழிக்கும் மனித வர்த்தகம் தொடர்ந்து அதிகரிப்பு


ஜூலை,24,2015. மனிதர்களை வர்த்தகத் தொழிலால், ஆண்டுக்கு 700 கோடி டாலர் முதல், ஆயிரம் கோடி டாலர் வரை வருவாய் கிடைக்கின்றது, உலகளாவிய பாலியல் வர்த்தகத்தில் ஏறக்குறைய இருபது இலட்சம் சிறார் கட்டாயமாக ஈடுபடுத்தப்படுகின்றனர் என்று திருஅவை அமைப்பு ஒன்று குறை கூறுகிறது.

ஜூலை 30ம் தேதி கடைப்பிடிக்கப்படும் மனித வர்த்தகத்திற்கெதிரான உலக நாளை முன்னிட்டு, SJM என்ற இயேசு சபை குடிபெயர்வோர் பணி அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், மனித வர்த்தகத்தில் 2 கோடியே 90 ஆயிரம் பேர் கட்டாயத் தொழிலுக்கு உட்படுத்தப்படுகின்றனர், இவர்களில் 55 விழுக்காட்டினர் பெண்கள் என்று கூறப்பட்டுள்ளது.

உலகளாவியப் பொருளாதாரத்தில் மனித வர்த்தகம், வளம்கொழிக்கும் வர்த்தகமாகத் தொடர்ந்து பரவி வருகிறது என்று கூறும் SJM அமைப்பின் அறிக்கை, ஒவ்வோர் ஆண்டும் குறைந்தது நாற்பது இலட்சம் பேர் மனித வர்த்தகத்தில் ஈடுபடுத்தப்படுகின்றனர் என்ற ஐ.நா. புள்ளி விபரங்களையும் வெளியிட்டுள்ளது.

மேலும், தாய்லாந்து பாலியல் தொழில் விடுதிகளில் பெரும்பாலும் பாலியல் அடிமைகளாகப் பயன்படுத்தப்படும் பெண்களில் பெரும்பகுதியினர், மியான்மார், கம்போடியா, லாவோஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று ஒரு புள்ளி விபரம் கூறுகிறது.

13 வயதுக்கும் 20 வயதுக்கும் உட்பட்ட சிறுமிகள், தாய்லாந்தில் வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றப்பட்டு தாய்லாந்தின் Suphanburi மாநிலத்திலுள்ள பாலியல் தொழில் விடுதிகளில் மாதக்கணக்கில் சுகாதாரமற்ற சூழல்களில் கட்டாயமாக தங்க வைக்கப்படுகின்றனர் என்றும் பீதெஸ் செய்திக் குறிப்பு கூறுகிறது.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.