2015-07-24 17:11:00

பூமியைவிட 60 மடங்கு பெரிய கோள் கெப்லர் 452பி கண்டுபிடிப்பு


ஜூலை,24,2015. பூமியைவிட 60 மடங்கு பெரிய கோளை நாசா அறிவியலாளர் ஒருவர் கண்டுபிடித்து சாதனைபடைத்துள்ளார்.

1,400 ஒளி ஆண்டு தொலைவில் இருக்கும் அந்தக் கோளை, கெப்லர் செயற்கைக்கோள் கண்டறிந்துள்ளதால், அதற்கு "கெப்லர் 452பி" என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும், குறிப்பிட்ட அந்தக் கோள், பூமி இருக்கும் அதே நட்சத்திரப் பாதையில் இருப்பதாகவும்  நாசா தெரிவித்துள்ளது.

பூமியைவிட 60 மடங்கு பெரிதான இந்தக் கோளம், சூரியனைப் போன்ற அமைப்புடன் இருப்பதாகவும் தெரிகிறது. இந்தப் புதிய கோளை, கெப்லர் தொலைநோக்கி மூலம் நாசா அறிவியலாளர் ஜான் ஜென்கின்ஸ் அவர்கள் கண்டுபிடித்துள்ளார்.

இப்புதிய கோள் தொடர்பாக கெப்லர் ஆய்வாளர் ஜென்கின்ஸ் கூறுகையில், “பூமியைவிட, கெப்லர்-452பி விண்மீனுக்கு அருகில் உள்ளது. எனவே, அங்கு வெளிச்சம் பூமியைவிட அதிகமாகவே இருக்கும். அதேபோல், பூமிக்கு எந்த அளவிற்கு சூரிய ஒளி கிடைக்கிறதோ அதே அளவில் புதிய கோளத்திற்கு கிடைக்கும். வளிமண்டலத்திலும் பெரிய மாற்றங்கள் இருக்காது. ஆனால், புவி ஈர்ப்பு விசை பூமியைவிட இரு மடங்காக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், “கோளப்பாதையை சுற்றிவர புதிய கிரகத்திற்கு 385 நாட்களாகும். இதுவும் பூமிக்கு இணையாகவே உள்ளது. இவற்றை எல்லாம் கூர்ந்து கவனிக்கும் பொழுது, மனிதன் வாழும் சூழல் அங்கு இருப்பதாகவே தோன்றுகிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

பெருகி வரும் மக்கள் தொகையை கருத்தில் கொண்டு, வேற்றுக் கோளத்தில் மனிதர் குடியேறுவது குறித்த ஆய்வில் உலகின் வல்லரசு நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக அமெரிக்காவின் நாசா ஆய்வு நிறுவனம் இது குறித்து பல்வேறு ஆய்வில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் பூமியைப் போன்ற புதிய கோள் அண்டவெளியில் இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : Agencies / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.