2015-07-24 16:55:00

நைஜீரியா-ஊழலுக்கு எதிரான நடவடிக்கையில் கவனம் தேவை


ஜூலை,24,2015. நைஜீரியாவில் அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுத்தலைவர் Muhammadu Buhari அவர்கள், நாட்டில் ஊழலை ஒழிப்பதற்கு எடுத்துவரும் நடவடிக்கைகளைத் துரிதமாக ஆற்ற வேண்டாமென பரிந்துரைத்துள்ளார் அந்நாட்டுத் தலத்திருஅவைத் தலைவர்.

அரசுத்தலைவர் எடுத்துவரும் ஊழலுக்கு எதிரான செயல்பாடுகளை, அடக்குமுறை என்று பொதுமக்கள் முத்திரை குத்திவிடாதபடிக்கு அவற்றை மெல்ல மெல்ல ஆற்றுமாறு கூறியுள்ளார் அபுஜா கர்தினால் John Onaiyekan.

ஒளிவுமறைவில்லாத தன்மை, நீதி மற்றும் நேர்மையினாலேயே ஊழலுக்கு எதிரான   நடவடிக்கைகளில் வெற்றியடைய முடியும் என்று, கத்தோலிக்க அரசியல்வாதிகளுக்கு அபுஜா விண்ணோற்பு ஆலயத்தில் அளிக்கப்பட்ட விருந்தில் கூறினார் கர்தினால் Onaiyekan.

ஊழல் ஒழிப்பு நடவடிக்கை, அங்கொன்றும், இங்கொன்றுமாக சிலரைக் கைதுசெய்வதையும் தாண்டிச் செல்ல வேண்டியது என்றும், இந்த நடவடிக்கைகள் மனித உரிமைகளை மீறுவதாகவும், இதில் சிலரை மட்டுமே ஈடுபடுத்துவதாகவும் அமையக் கூடாது என்றும் கூறினார் கர்தினால் Onaiyekan.

நாட்டின் அனைத்து அரசியல், இன மற்றும் சயக் குழுக்கள் ஒன்று சேர்ந்து கைகோர்த்து செயல்படுவதால் மட்டுமே நைஜீரியாவில் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியும்  என்றும் உறுதிபடக் கூறினார் அபுஜா கர்தினால் Onaiyekan.   

ஆதாரம் : CNS / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.