2015-07-24 16:37:00

திருத்தந்தை கத்தோலிக்கரிடம்-நம்பத்தகுந்த வாழ்க்கை வாழுங்கள்


ஜூலை,24,2015. நம்பத்தகுந்த வாழ்க்கை, ஏழைகள்மீது சிறப்புக் கவனம், சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல், பிற மதங்களிடமிருந்து கற்றுக்கொள்ளல் ஆகியவை வழியாக,  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் சீர்திருத்த நடவடிக்கைகளில் கத்தோலிக்கர் பங்கு கொள்ள இயலும் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

அர்ப்பண வாழ்வும், நற்செய்தி அறிவிப்பும் என்ற தலைப்பில், தாய்லாந்து நாட்டின் Pattayaவில் நடைபெற்றுவரும் கருத்தரங்கில் உரையாற்றிய, துறவிகள் பேராயத் தலைவர் கர்தினால் Joao Braz de Aviz அவர்கள், நம்பத்தகுந்த சாட்சிகளாக நாம் வாழ வேண்டுமென திருத்தந்தை நம்மிடம் கேட்கிறார் என்று கூறினார்.

நாம் பாவிகள் அல்ல என்று நாம் சொல்லவில்லை, ஏனெனில், நான் பாவி அல்ல என்று நினைப்பவர் எவரும் மனிதர் அல்ல என்று திருத்தந்தை சொல்கிறார் என்றும் உரைத்த கர்தினால் de Aviz அவர்கள், இறைவன் பாவியை அன்பு கூர்கிறார் என்றும் கூறினார்.

இது, பல்வேறு மதங்கள் நல்லிணக்கத்துடன் வாழும் ஆசியாவுக்கு மிகவும் முக்கியம் என்றும், எந்த ஒரு மதத்திலும் காணப்படும் அழகும், நன்மையும், உண்மையும் கிறிஸ்தவர்களாகிய நமக்கும் உரியவையே, ஆயினும், இது, இயேசு கிறிஸ்துவுக்குச் சாட்சி பகருவதிலிருந்து நம்மை ஒதுக்கி வைக்கக் கூடாது என்றும் கூறினார் கர்தினால் de Aviz.

ஜூலை 20ம் தேதி தொடங்கிய இக்கருத்தரங்கு, 25ம் தேதி இச்சனிக்கிழமையன்று நிறைவடையும்.

ஆதாரம் : UCAN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.