2015-07-24 16:33:00

எய்ட்ஸ் நோயாளிகளுக்குச் சிகிச்சையை மேம்படுத்த வேண்டுகோள்


ஜூலை,24,2015. எய்ட்ஸ் நோயாளிகளுக்குச் சிகிச்சை வழங்கும் மற்றும் அவர்களைப் பராமரிக்கும் அனைவரையும் ஊக்கப்படுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கானடாவின் வான்கூவரில் நடந்த 8வது எய்ட்ஸ் அனைத்துலக மாநாட்டிற்கு செய்தி அனுப்பிய திருத்தந்தை, எய்ட்ஸ் நோய்க்கான சிகிச்சை, இந்நோய் குறித்த ஆய்வு, தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவை, ஒவ்வொரு மனிதரின் ஒருங்கிணைந்த வளர்ச்சியை மையப்படுத்தி ஆற்றப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளார்.

HAART சிகிச்சை வழியாக எய்ட்ஸ் நோயாளிகள் பலரின் வாழ்வு காப்பாற்றப்பட்டுள்ளதைக் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, சமுதாயத்தின் அனைத்துத் துறையினரும் ஒன்றுசேர்ந்து செயல்பட்டால், இத்தகைய பலன்கள் கைகூடுவதற்கான வாய்ப்புகளுக்கு நாம் சாட்சிகளாகத் திகழ முடியும் என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பெயரில், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், கானடாவின் British Columbia புனித பவுல் மருத்துவமனையின் HIV/AIDS பிரிவின் இயக்குனர் மருத்துவர் Julio Montaner அவர்களுக்கு இச்செய்தியை அனுப்பியுள்ளார்.

இச்செய்தியைப் பெற்ற மருத்துவர் Montaner அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மீது தான் வைத்திருக்கும் பற்று, இன்னும், திருத்தந்தை எய்ட்ஸ் நோயாளிகள் மீது வைத்திருக்கும் அக்கறை குறித்து ஆனந்தக் கண்ணீர் மல்கப் பேசினார்.

இந்த நான்கு நாள் வான்கூவர் மாநாடு, இப்புதனன்று நிறைவடைந்தது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.