2015-07-24 16:41:00

அனைத்துலக இளம் துறவிகள் மாநாடு செப்டம்பர் 15-19


ஜூலை,24,2015. உலகை விழித்தெழச் செய்யுங்கள் என்ற தலைப்பில் கத்தோலிக்கத் திருஅவையில் சிறப்பிக்கப்பட்டுவரும் அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு ஆண்டின் ஒரு கட்டமாக, வருகிற செப்டம்பர் 15ம் தேதி முதல் 19ம் தேதி வரை இளம் துறவிகளுக்கு அனைத்துலக மாநாடு ஒன்று நடைபெறவுள்ளது.

நற்செய்தி, இறைவாக்கு, நம்பிக்கை ஆகிய மூன்று கூறுகளை மையமாக வைத்து உரோம் நகரில் இந்த அனைத்துலக இளம் துறவிகள் மாநாடு நடைபெறும்.

துறவு சபைகளில் முதல் வார்த்தைப்பாடு கொடுத்து பத்து ஆண்டுகள் நிறைவடையும் அனைத்து இளம் துறவிகளும் இம்மாநாட்டில் பங்கு கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தங்களின் துறவு வாழ்வின் மேன்மையைக் கொண்டாடி அதற்குச் சான்று பகரவும், அர்ப்பண வாழ்வுக்கு அடிப்படையான விவிலிய, இறையியல் மற்றும் திருஅவைக் கூறுகள் பற்றிச் சிந்திக்கவும் இம்மாநாடு உதவும்.

காலை நேரங்களில் வத்திக்கான் ஆறாம் பவுல் அரங்கத்தில் உரைகள் ஆற்றப்படும். பிற்பகலில் மொழி வாரியான குழுக்களில் பகிர்வுகள் இடம்பெறும்.

செப்டம்பர் 15ம் தேதி இரவு 8.30 மணிக்கு வத்திக்கான் வளாகத்திலும், 19ம் தேதி முற்பகல் 11.30 மணிக்கு வத்திக்கான் பசிலிக்காவிலும் நடைபெறும் வழிபாடுகளில் அனைவரும் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.