2015-07-23 16:27:00

ஆசியா பீபியின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு


ஜூலை,23,2015. பாகிஸ்தானில், தேவ நிந்தனைக் குற்றச்சாட்டின்பேரில் கடந்த ஆறு ஆண்டுகளாக சிறையிலுள்ள ஆசியா பீபி அவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.

மூன்று பேர் கொண்ட நீதிபதிகள் குழு இப்புதனன்று ஆசியா பீபி அவர்களின் வழக்கை விசாரித்த பின்னர், அவருக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை நிறுத்தி வைத்துள்ளதோடு, அவரது வழக்கை மறுபரிசீலனை செய்யவும் இசைவு தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, தன்னுடன் வேலை செய்த முஸ்லிம்களின் பாத்திரத்திலிருந்து தண்ணீர் குடித்த பின்னர் தன்மீது குற்றம் சுமத்தப்பட்டதாகவும், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களின் பாத்திரத்திலிருந்து தண்ணீர் குடிக்கக் கூடாது என்று தனக்குச் சொல்லப்பட்டதாகவும் ஆசியா பீபி அவர்கள் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர், தான் இறைவாக்கினர் முகமது அவர்களை இகழ்ந்து பேசியதாக அந்த முஸ்லிம் வேலையாள்கள் மதகுருவிடம் புகார் செய்தனர் என்றும், இதனால் ஆத்திரமடைந்த ஒரு கும்பல் தன்னைத் தாக்கியதாகவும் ஆசியா பீபி அவர்கள் மேலும் கூறியுள்ளார்.

ஆசியா பீபி மீது தேவ நிந்தனைக் குற்றம் சுமத்தப்பட்டு 2010ம் ஆண்டு நவம்பரில் மரணதண்டனை வழங்கப்பட்டார்.

ஐந்து குழந்தைகளுக்குத் தாயான 50 வயது கிறிஸ்தவப் பெண்ணான ஆசியா பீபியின் விடுதலைக்காக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் செபிக்குமாறு BCPA எனும் பிரித்தானிய பாகிஸ்தான் கிறிஸ்தவ அமைப்பு அழைப்பு விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.  

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.