2015-07-22 15:41:00

வத்திக்கானில் மாநகர மேயர்களின் கருத்தரங்கு-தீர்மான அறிக்கை


ஜூலை,22,2015. மனித செயல்பாடுகளால் காலநிலை மாற்றங்கள் விளைகின்றன என்பது, அறிவியல் அடிப்படையில் உணரக்கூடிய ஓர் உண்மை, எனவே, இந்த மாற்றங்களைக் கட்டுப்படுத்துவது, மனிதர்களுக்கு உள்ள தார்மீகக் கடமை என்று பாப்பிறை அறிவியல் கழகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

"நவீன அடிமைத்தனமும், காலநிலை மாற்றமும்: மாநகரங்களின் அர்ப்பணிப்பு" என்ற தலைப்பில், ஜூலை 21 மற்றும் 22 ஆகிய இரு நாட்கள், பாப்பிறை அறிவியல் கழகம், வத்திக்கானில் நடத்திய கருத்தரங்கின் இறுதியில், இக்கருத்தரங்கில் கலந்துகொண்ட 65க்கும் மேற்பட்ட மாநகர மேயர்களும், ஏனைய உறுப்பினர்களும் இணைந்து, இப்புதனன்று வெளியிட்ட தீர்மான அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கியுள்ள 'Laduato Si' திருமடலின் அடிப்படையில், இக்கருத்தரங்கில் மேற்கொள்ளப்பட்ட கருத்துப் பரிமாற்றங்கள், சுற்றுச்சூழல் மாற்றங்களுக்கு மனிதர்கள் ஏற்கவேண்டிய தார்மீகப் பொறுப்புக்களை உணர்த்தியது என்று இவ்வறிக்கை கூறுகிறது.

மனிதர்களால் விளைவிக்கப்படும் காலநிலை மாற்றம், பலகோடி மக்கள் மனித சமுதாயத்திலிருந்து ஒதுக்கிவைக்கப்படுதல், மிகக் கடுமையான வறுமை, நவீன அடிமைத்தனம் ஆகிய அனைத்தும், ஒன்றோடொன்று தொடர்புடையவை என்பதையும், கருத்தரங்கின் உறப்பினர்கள் உணர்ந்துள்ளதாக, இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றத்தை உருவாக்குவதில் வறியோரின் பங்கு மிகக் குறைவே எனினும், இந்த மாற்றங்களின் தாக்கங்களால் பெருமளவு பாதிக்கப்படுவது வறியோரே என்று கருத்தரங்கின் தீர்மான அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

இவ்வாண்டின் இறுதியில், பாரிஸ் மாநகரில் நடைபெறவிருக்கும் காலநிலை அகில உலக உச்சிமாநாடு, மனித குலத்திற்கு வழங்கப்பட்டுள்ள ஒரு வாய்ப்பு என்பதை உணர்ந்து, மனிதர்களால் உருவாக்கப்படும் காலநிலை மாற்றத்தை, குறிப்பாக, உலக அளவில் உயர்ந்துவரும் வெப்பநிலையைக் குறைக்க, அனைத்து நாடுகளும் தீர்மானத்துடன் முன்வரவேண்டும் என்று கருத்தரங்கின் தீர்மான அறிக்கை அழைப்பு விடுக்கிறது.

சமுதாயத்தின் எந்தப் பிரிவினரையும் ஒதுக்கிவைக்காமல், அனைத்து மக்களையும் வாழவைக்கும் இடங்களாக உலகின் மாநகரங்களை உருவாக்குவதில், மாநகர மேயர்கள் என்ற முறையில் தங்கள் கடமை அதிகம் என்பதையும் இக்கருத்தரங்கில் கலந்துகொண்ட மேயர்கள் இவ்வறிக்கை வழியே கூறியுள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.