2015-07-22 16:14:00

நைஜீரியா மக்கள், அனைத்திற்கும் அரசைக் குற்றம் கூறுவது தவறு


ஜூலை,22,2015. நைஜீரியா நாட்டில் மக்கள் தங்கள் தனிப்பட்டப் பொறுப்புக்களை சரிவர நிறைவேற்றாமல், அனைத்திற்கும் அரசைக் குற்றம் கூறுவது தவறு என்று, அந்நாட்டு ஆயர் பேரவையின் தலைவர், பேராயர் இக்னேசியஸ் கைகமா அவர்கள் கூறியுள்ளார்.

ஜோஸ் நகரின் புனித மோனிகா ஆலயத்தில் நடைபெற்ற அருள்பணி திருநிலைப்படுத்தும் திருப்பலியில், பேராயர் கைகமா அவர்கள் வழங்கிய மறையுரையில் இவ்வாறு கூறினார்.

நைஜீரியாவின் ஜோஸ் நகரில் அண்மையில் கவிழ்ந்த ஒரு பெட்ரோல் லாரியிலிருந்து கொட்டிய பெட்ரோலை சேகரிக்க, அந்த லாரியைச் சுற்றி கூடிவந்த மக்களைக் குறிப்பிட்டுப் பேசிய பேராயர் கைகமா அவர்கள், இந்தச் சூழலில் விபத்து ஏற்பட்டு, மக்கள் பாதிக்கப்பட்டால், அதற்கு நாட்டின் அரசைக் குறைகூறவும் தயங்கமாட்டார்கள் என்று குறிப்பிட்டார்.

மாற்றம் என்று மக்கள் சிந்திப்பதெல்லாம், சமுதாய, பொருளாதார மாற்றங்களே என்று கூறிய பேராயர் கைகமா அவர்கள், மாற்றங்கள் முதலில் மனதிலிருந்து உருவாகவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மக்கள் எதிர்பார்க்கும் அனைத்து மாற்றங்களையும் அரசு கொணரவேண்டும் என்று எதிர்பார்ப்பதை விடுத்து, மக்கள், அரசுடனும், தலைத்திருஅவையுடனும் இணைந்து மாற்றங்களை உருவாக்கவேண்டும் என்று பேராயர் கைகமா அவர்கள் தன் மறையுரையில் அழைப்பு விடுத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.