2015-07-22 15:31:00

கடுகு சிறுத்தாலும்.... : யார் உண்மையான பக்தர்?


ஒரு நாள் இரண்டு தேவதைகளுக்கு சந்தேகம் வந்தது. உண்மையான பக்தி உடையவர் யார் என்பதுதான் அது.  நேராக இறைவனிடம் சென்று தங்கள் சந்தேகத்தைக் கேட்டன. அப்போது இறைவன், "தேவதைகளே! இந்த ஊரில் போய் யார் எனது உண்மையான பக்தர் என்பதை விசாரித்து வாருங்கள்" என்றார். உடனே தேவதைகள் புறப்பட்டு பலரிடமும் சென்று விசாரித்தன. ஒருவர், "நான் கோவிலுக்குப் போகாத நாளே இல்லை... தினமும் மூன்று வேளை கடவுளை வணங்குகிறேன்," என்றார். அடுத்தவரோ, "நான் வெள்ளி, செவ்வாய்க் கிழமைகளில் கோவில் போவேன்," என்றார். மற்றவரோ, "நான் வாரத்தில் ஒரு நாள் நிச்சயம் கோவிலுக்குச் செல்லுவேன்," என்றார். இன்னொருவரோ, "எனக்கு கஷ்டம் வரும் சமயத்தில் கடவுளிடம் முறையிடுவேன்," என்றார். இப்படியாக பலரும் ஏதோ ஒரு சமயத்தில் கடவுளை நினைப்பவராகவே இருக்க, இதில் யார் உண்மையான பக்தர்' எனக் கண்டுபிடிப்பது எப்படி என்ற குழப்பம் தேவதைகளுக்கு ஏற்பட்டது. அப்போது அந்த வழியே அவசரமாகச் சென்று கொண்டிருந்த ஒருவரை நிறுத்தி, "அய்யனே! உனக்கு கடவுள் பக்தி உண்டா? நீ எப்போது கடவுளை வழிபடுவாய்?'' என்று ஒரு தேவதை கேட்டது. அதற்கு அவர், "எனக்குக் கடவுளை நினைக்கவே நேரமில்லை... அவசரமாக சிலருக்கு உதவிசெய்ய வேண்டியிருக்கிறது. நான் போகிறேன்...'' என்று பதில் கூறிவிட்டு ஏழைகளுக்கு உதவிட விரைந்தார். தேவதைகள் கடவுளிடம் திரும்பி வந்து நடந்ததை அப்படியே விவரித்தன. எல்லாவற்றையும் கேட்ட கடவுள் மவுனம் சாதித்தார். "தேவனே... உண்மையான பக்தர் யார் என்று கண்டுபிடித்து விட்டீர்களா?'' என்று கேட்டன. "கண்டுபிடித்துவிட்டேன்!'' என்றார் கடவுள். "யார் பிரபு? தினமும் மூன்று வேளை கோவிலுக்கு வருபவர்தானே?'' என்று கேட்டன தேவதைகள். கடவுள் புன்னகைத்தபடியே, "இல்லை... இல்லை... என்னை நினைக்கக்கூட நேரமில்லாது ஏழைகளுக்கு சேவை செய்ய ஓடின ஒருவரை இறுதியில் சந்தித்தீர்களே... உண்மையில் அவர்தான் எனது உண்மையான பக்தர்,'' என்றார்.

இறைவனின் பணியைச் செய்துகொண்டிருந்த அவர் மட்டுமே உண்மையான பக்தர். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.