2015-07-22 15:11:00

அமைதி ஆர்வலர்கள் : 1990ல் நொபெல் அமைதி விருது


ஜூலை,22,2015. “நான் செய்யாவிட்டால் வேறு யார் செய்வார்? இப்பொழுது செய்யாவிட்டால் பின்னர் எப்பொழுது?”. இந்தப் புகழ்பெற்ற கூற்றின் உரிமையாளருக்குத்தான் 1990ம் ஆண்டின் நொபெல் அமைதி விருது வழங்கப்பட்டது. முன்னாள் சோவியத் யூனியனின் முதல் அரசுத்தலைவர், உலகில் பனிப்போரை முடிவுக்குக் கொண்டு வந்ததில் தனிமுத்திரை பதித்தவர் மற்றும் அமைதியான அனைத்துலக உறவுகளை ஊக்குவித்தவர் என்று பாராட்டப்படும் Mikhail Sergeyevich Gorbachev அவர்களே 1990ம் ஆண்டின் நொபெல் அமைதி விருதைப் பெற்றவர். இவ்விருது அறிவிக்கப்பட்டபோது, மேற்கத்திய நாடுகளின் பாராட்டு மழையில் இவர் நனைந்தார். “கோர்பஷேவ் அவர்கள், சோவியத் யூனியனுக்கும், கிழக்கு ஐரோப்பாவுக்கும் அரசியலிலும், பொருளாதாரத்திலும் வரலாற்றுச் சிறப்புமிக்க குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளார்” என்று, அப்போதைய அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர் புஷ் அவர்கள் வாழ்த்துத் தெரிவித்தார். பிரான்ஸ் அரசுத்தலைவர் மித்தெரான்ட் அவர்கள், “உலகில், குறிப்பாக, ஐரோப்பாவில் பதட்டநிலைகளைக் குறைப்பதற்கு ஒரு தீர்மானமான கருவியாக, கோர்பஷேவ் அவர்களின் செயல்கள் இருந்தன” என்று பாராட்டினார். இங்கிலாந்து பிரதமர் மார்கிரேட் தாட்சர் அவர்கள், “இந்த நொபெல் அமைதி விருது அபாரமானது” என்று வாழ்த்தினார். மேலும், நார்வே நொபெல் விருதுக் குழுவும், “முரண்பாடுகள் இருந்த இடம் பேச்சுவார்த்தைகளால் நிரம்பியது, பழைய ஐரோப்பிய நாடுகள் மீண்டும் சுதந்திரத்தைப் பெற்றன, உலகில் ஆயுதப் போட்டி குறைந்துள்ளது, ஆயுதக் கட்டுப்பாடும், ஆயுதக் களைவும் சரியான பாதையை நோக்கிச் செல்லத் தொடங்கியுள்ளன, ஐக்கிய நாடுகள் நிறுவனம், தனது பங்கை ஆற்றத் தொடங்கியுள்ளது” என்று தெரிவித்தது. 1990ம் ஆண்டில் சோவியத்தின் முதல் அரசுத் தலைவராகப் பொறுப்பேற்ற மிகயேல் கோர்பஷேவ் அவர்கள், அரசியல் காரணங்களுக்காக 1991ம் ஆண்டில் அப்பதவியிலிருந்து விலகினார். அதன்பின்னர் கோர்பஷேவ் நிறுவனத்தை ஆரம்பித்து, சமூக மற்றும் அரசியல் விவகாரங்களில் உயிர்த்துடிப்புடன் செயல்பட்டு வருகிறார் 84 வயது மிகயேல் கோர்பஷேவ்.

மிகயேல் கோர்பஷேவ் அவர்கள், 1931ம் ஆண்டு மார்ச் 2ம் தேதி, இரஷ்யாவின் தெற்கிலுள்ள Krasnogvardeisky மாவட்டத்தில், Privolnoye என்ற கிராமத்தில் இரஷ்ய-உக்ரேய்ன் பெற்றோருக்குப் பிறந்தவர். இவரது பெற்றோர் விவசாயிகள். 1933ம் ஆண்டில் தென் இரஷ்யாவில் கடும் வறட்சி ஏற்பட்டது. விவசாயத்தை நம்பி வாழ்ந்த இந்தப் பகுதி மக்களை கடும் வறுமை வாட்டியது. பலர் பசியால் மடிந்தனர். மிகயேல் கோர்பஷேவ் அவர்களின் குடும்பத்திலும் பசிச்சாவுகள் இடம்பெற்றன. 1941ம் ஆண்டில் சோவியத் யூனியனை நாத்சிப் படைகள் ஆக்ரமித்தபோது இவரது தந்தை Sergei அவர்கள் இரஷ்யப் படையில் இருந்தார். அச்சமயத்தில் இடம்பெற்ற தாக்குதலில் காயமடைந்து மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் வீடு திரும்பினார். பின்னர் விவசாயக் கருவிகளைக் கொண்டு  விவசாயம் செய்யத் தொடங்கிய Sergei அவர்கள், விவசாய தொழில் நுட்பத்தை தனது இளைய மகன் மிகயேல் கோர்பஷேவுக்குச் சொல்லிக் கொடுத்தார். கோர்பஷேவும், இளவயதில் பண்ணைகளில் டிராக்டர் ஓட்டி தனது குடும்பத்திற்குப் பொருளாதார அளவில் உதவி செய்தார். இவர் கடின உழைப்பாளி. எனவே இவர் தனது 17வது வயதில் Order of the Red Banner of Labour என்ற கம்யூனிச அரசின் விருதையும் பெற்றார். இளம்வயதில் இவ்விருதைப் பெற்ற பெருமையும் இவருக்கு உண்டு. உற்பத்தி, அறிவியல், கலாச்சாரம், இலக்கியம், கலை, கல்வி, நலவாழ்வு, சமூக மற்றும் பிற தொழில் நடவடிக்கைகளில் சிறப்பான பங்காற்றியவர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டது.

சிறுவயதிலிருந்தே கற்பதில் மிகவும் ஆர்வம் கொண்டிருந்த கோர்பஷேவ் அவர்கள், 1950ம் ஆண்டில் உயர்நிலைப்பள்ளிப் படிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்றார். எனவே இவரது தந்தை இவரை ஊக்கப்படுத்தி மாஸ்கோ பல்கலைக்கழகத்தில் சேர்த்துவிட்டார். நுழைவுத் தேர்வு இல்லாமலும், விடுதியில் இலவசமாகத் தங்கிப் படிக்கும் வாய்ப்பையும் பெற்றார் இவர். 1955ம் ஆண்டில் சட்டக் கல்விப் பட்டயப் படிப்பில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று தனது கிராமத்திற்குத் திரும்பினார் கோர்பஷேவ். வழக்கறிஞர் தொழிலையும் பயிற்சி செய்யத் தொடங்கினார் இவர். இந்த வேலையை இவர் செய்துகொண்டிருந்தபோது இவருடைய பழைய நண்பர்கள், இவர் உயர்நிலைப்பள்ளியில் இளைஞர் கம்யூனிசக் கழகத்தில் ஈடுபாடு காட்டியதை நினைவுகூர்ந்தனர். எனவே கோர்பஷேவ் அவர்களுக்கு இளைஞர் கம்யூனிசக் கழகத்தில் புதிய பொறுப்பு அளிக்கப்பட்டது. எனவே, வழக்கறிஞர் வேலையைத் தொடங்கிய பத்து நாள்களுக்குள் அதைக் கைவிட்டு கழகப் பணிகளில் முழுவீச்சுடன் ஈடுபட்டார். கோர்பஷேவ் அவர்கள், ஜோசப் ஸ்டாலின் ஆட்சி காலத்தில் வளர்ந்தவர். சோவியத் கம்யூனிசக் கட்சியில் படிப்படியாக பதவி உயர்வு பெற்ற இவர், 1960களில் அரசியல் களத்தில் முன்னேறியது மட்டுமல்லாமல், வேளாண்மை மற்றும் பொருளாதாரத்திலும்  தனது அறிவை வளர்த்துக் கொண்டார். 1980ல், கம்யூனிசக் கட்சியின் அரசியல் பிரிவில் முழு உறுப்பினரானார்.

இரஷ்ய கூட்டமைப்பு அரசின் மையமான Kremlinல், கோர்பஷேவ் அவர்களின் ஆலோசகரும், கம்யூனிசக் கட்சியின் பொதுச் செயலருமான Yuri Andropov அவர்கள் 1984ம் ஆண்டில் மரணமடைந்தார். இதே ஆண்டில்தான் இங்கிலாந்து பிரதமர் மார்கிரேட் தாட்சர் அவர்களைச் சந்தித்து அவரோடு வலுவான உறவை வளர்த்துக் கொண்டார் கோர்பஷேவ். Andropovவுக்குப் பதிலாக நியமிக்கபட்ட Konstantin Chernenko அவர்களும் 1985ம் ஆண்டில் இறந்தார். எனவே மிகயேல் கோர்பஷேவ் அவர்கள், 1985ம் ஆண்டில் கம்யூனிசக் கட்சியின் பொதுச் செயலராக நியமிக்கப்பட்டார். அணு ஆயுதங்களைக் குவிப்பதில் அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர் ரோனல்டு ரேகன் அவர்களுடன் போட்டியிட வேண்டியிருந்தது. இந்த விலையுயர்ந்த போட்டியில், ஏற்கனவே நலிவடைந்திருந்த சோவியத் பொருளாதாரம் மேலும் பாதிக்கப்பட்டது. அதேநேரம், சோவியத் மக்களுக்கு அதிக சுதந்திரம் மற்றும் சனநாயக வாழ்வை வழங்கி, சோவியத் மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றினார். திறந்த மனம் மற்றும் மறுசீரமைப்பை நோக்கி சோவியத்தை நடத்திச் சென்றார். பொதுவுடமைக் கொள்கையுடைய பொருளாதாரச் சந்தையை உருவாக்கினார். இவரின் சீர்திருத்த நடவடிக்கைகள், உற்பத்தியைப் பெருக்கின மற்றும் பொருள்கள் வீணாய்ப் போவதைக் குறைத்தன.

மிகயேல் கோர்பஷேவ் அவர்கள், கம்யூனிசக் கட்சியின் பொதுச் செயலராக நியமிக்கப்படுவதற்கு முன்னரே, மேற்கத்திய தலைவர்களுடன் உறவை மேம்படுத்த முயற்சித்தார். ரோனல்டு ரேகன் அவர்கள் முதலில் கோர்பஷேவ் மீது நம்பிக்கையின்றி இருந்தாலும், 1983ம் ஆண்டு நவம்பரில் ஜெனீவாவில் முதல் ஆயுத உச்சி மாநாட்டில் கோர்பஷேவ் அவர்களைச் சந்தித்த பின்னர் அவரது எண்ணம் மாறியது. தாட்சர் அவர்களும், கோர்பஷேவுடன் தொடர்பு வைத்துக் கொள்ளலாம் என்று தெரிவித்தார். மேலும், அப்போதைய மேற்கு ஜெர்மனி பிரதமர் ஹெல்மல்ட் கோல் அவர்களுடனும் கோர்பஷேவ் வலுவான உறவைக் கொண்டிருந்தார். இவர் வத்திக்கானில் புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களையும் சந்தித்துள்ளார். 1989ம் ஆண்டில் சனநாயக தேர்தல் முறையைக் கொண்டு வந்தார். சோவியத்தின் எழுபது ஆண்டு அரசியல் அமைப்பில் இது இவரது முக்கிய அரசியல் சீர்திருத்தமாக அமைந்தது. இத்தேர்தல் கம்யூனிசக் கட்சி வேட்பாளர்கள் பிற கட்சி வேட்பாளர்களுடன் போட்டியிட வாய்ப்பைக் கொடுத்தது. 1990ம் ஆண்டு மார்ச் 15ம் தேதி, சோவியத்தின் நாடாளுமன்றம் இவரை முதல் அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுத்தது. அதற்கு அடுத்த ஆண்டில் போரிஸ் யெல்ஸ்டின் அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் கோர்பஷேவ் இப்பதவியை விட்டு விலகினார்.

1989ம் ஆண்டில் பெர்லின் சுவர் இடிக்கப்பட்டதிலும் மிகயேல் கோர்பஷேவ் அவர்களின் பங்கு முக்கியமானது. நான் செய்யாவிட்டால் வேறு யார் செய்வார்? இப்பொழுது செய்யாவிட்டால் பின்னர் எப்பொழுது?” என்ற இவரின் கூற்று நம் ஒவ்வொருவரையுமே சிந்திக்க வைக்கிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.