2015-07-22 16:09:00

அமெரிக்கா, கியூபாவுக்கிடையே தூதரக உறவுகள் துவக்கம்


ஜூலை,22,2015. அமெரிக்க ஐக்கிய நாடு, மற்றும் கியூபா ஆகிய நாடுகளில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொள்ளவிருக்கும் திருத்தூது பயணம், இவ்விரு நாடுகளையும் இன்னும் நெருங்கிவரச் செய்யும் என்று அமெரிக்க ஆயர் Oscar Cantú அவர்கள் கூறினார்.

ஜூலை 20ம் தேதியன்று, அமெரிக்க ஐக்கிய நாடு, மற்றும் கியூபா ஆகிய நாடுகளிடையே தூதரக உறவுகள் துவங்கியதையடுத்து, இவ்விரு நாடுகளிடையே இன்னும் பல்வேறு துறைகளில் கூட்டுறவு முயற்சிகள் ஏற்படுவது குறித்து பேசிய, அமெரிக்க ஆயர்கள் பேரவையின் பன்னாட்டு நீதி, அமைதி பணிக்குழுவின் தலைவர் ஆயர் Cantú அவர்கள், இவ்வாறு கூறியுள்ளார்.

இவ்விரு நாடுகளும் உண்மையான ஆர்வத்துடன் செயல்பாடுகளில் இறங்குவது, இரு நாடுகளுக்கும் உதவியாக இருக்கும் என்று அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்களும், கியூபா ஆயர்களும் நம்பிக்கை தெரிவித்திருப்பதை, ஆயர் Cantú அவர்கள் குறிப்பிட்டார்.

1961ம் ஆண்டு, இவ்விரு நாடுகளிடையே துண்டிக்கப்பட்ட உறவுகள், மீண்டும் துவங்கவேண்டுமென திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அரசுத் தலைவர்கள் Barack Obama மற்றும் Raul Castro இருவருக்கும் சிறப்பான அழைப்புக்கள் விடுத்ததும், இவ்விரு நாடுகளின் இறுதி ஒப்பந்தக் கூட்டம் வத்திக்கானில் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கன.

ஆதாரம் : CNA/EWTN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.