2015-07-22 15:58:00

2015ன் முதல் ஆறு மாதங்கள் இதுவரை காணப்படாத அதிக வெப்பம்


ஜூலை,22,2015. 2015ம் ஆண்டு, சனவரி முதல் ஜூன் முடிய பூமிக்கோளத்தின் நிலப்பரப்பு, கடல்பரப்பு ஆகியவற்றில் நிலவிய வெப்பம், இதுவரை காணப்படாத அளவு அதிகமான வெப்பம் என்று ஐ.நா. அவையின் காலநிலை மாற்ற அலுவலகம் இச்செவ்வாயன்று அறிவித்தது.

20ம் நூற்றாண்டு முழுவதும் ஒவ்வோர் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் நிலப்பரப்பின் சராசரி வெப்ப அளவு 15.5° C என்ற அளவு இருந்ததாகவும், 2015ம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இந்த வெப்ப அளவு சராசரி அளவைவிட 0.85° C கூடுதலாக இருந்ததாகவும் இவ்வறிக்கை கூறுகிறது.

அதேபோல், கடல்பரப்பின் வெப்பநிலையும், கடந்த நூற்றாண்டின் சராசரி அளவைவிட 0.65° C கூடுதலாக இருந்ததென்று கூறப்பட்டுள்ளது. 

இவ்வாண்டில் மார்ச், மே மற்றும் ஜூன் மாதங்களில் நிலவிய வெப்பநிலை, இதுவரை கண்டிராத அளவு உயர்வாக இருந்ததென்று ஐ.நா.வின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

வெப்பநிலை உயர்வால், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர் என்பதையும் இவ்வறிக்கை குறிப்பிடுகிறது.

ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடு, இவ்வாண்டு கூடுதல் வெப்பத்தால் பாதிக்கப்பட்டுள்ளன என்று கூறும் இவ்வறிக்கை, ஐரோப்பாவில் போஸ்னியா-ஹெர்சகொவினா, குரோவேசியா, செர்பியா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளும் வெப்ப அலைகளால்  தாக்கப்பட்டுள்ளன என்று சுட்டிக்காட்டுகிறது.

காலநிலை மாற்றங்களின் அளவு, 1880ம் ஆண்டு முதல் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.