2015-07-21 15:10:00

விவிலியத் தேடல் : தாலந்து உவமை – பகுதி - 2


மத்தேயு நற்செய்தியின் 25ம் பிரிவில் காணப்படும் 'தாலந்து உவமை'யில், நம் தேடல் பயணத்தை சென்ற வாரம் துவக்கினோம். மூன்று பகுதிகளைக் கொண்ட இந்த உவமையின் முதல் பகுதி (மத். 25: 14-18), பயணம் மேற்கொண்ட இல்லத் தலைவரையும், அவரது உடமைகளுக்குப் பொறுப்பேற்ற மூன்று பணியாளர்களையும் நம் மனக்கண் முன் கொணர்ந்தது.

எவ்வித நிபந்தனையும் இன்றி, தன் உடைமைகளை ஒப்படைத்துச் சென்ற இல்லத் தலைவர், இறைவனை நமக்கு நினைவுறுத்தினார். இல்லத் தலைவர், தன் பணியாளர்களிடம், 5,2, அல்லது 1 என்ற அளவில் ஒப்படைத்தத் தாலந்துகளின் மதிப்பு, நம்மை வியப்படைய வைத்தது. வெள்ளியால் ஆன தாலந்துகள் என்றால், இல்லத் தலைவர், விட்டுச் சென்ற 8 தாலந்துகளின் ஒட்டுமொத்த மதிப்பு, 160 ஆண்டுகளுக்குரிய கூலித்தொகை என்றும், ஒப்படைக்கப்பட்ட தாலந்துகள், தங்கத்தால் ஆனவை எனில், அவற்றின் ஒட்டுமொத்த மதிப்பு, 4,800 ஆண்டுகளுக்குரிய கூலித்தொகை என்றும் கணக்கிட்டபோது, வியப்படைந்தோம்.

இதையொத்த, அல்லது, இதையும் மிஞ்சிய தாராள மனதுடன், இறைவனும் இவ்வுலகச் செல்வங்களை, எவ்வித நிபந்தனையும் இன்றி மனிதர்களாகிய நமக்கு வாரி வழங்கியுள்ளார் என்பதையும், சென்ற வாரம் நாம் சிந்தித்தோம்.

இன்று, இவ்வுவமையின் இரண்டாம் பகுதியில் (மத். 25: 19-23) அடியெடுத்து வைக்கிறோம். இப்பகுதியில், 5 மற்றும் 2 தாலந்துகளைப் பெற்ற முதல் இரு பணியாளர்கள், தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பிற்கு எவ்விதம் கணக்கு ஒப்படைக்கின்றனர் என்பதையும், அவர்களுக்குக் கிடைத்த வெகுமதி என்ன என்பதையும் இப்பகுதி சொல்கிறது. இதோ, இவ்வுவமையின் 2ம் பகுதி:

மத்தேயு நற்செய்தி 25: 19-23

நெடுங்காலத்திற்குப் பின் அந்தப் பணியாளர்களின் தலைவர் வந்து அவர்களிடம் கணக்குக் கேட்டார். ஐந்து தாலந்து பெற்றவர் அவரை அணுகி, வேறு ஐந்து தாலந்தைக் கொண்டு வந்து, 'ஐயா, ஐந்து தாலந்தை என்னிடம் ஒப்படைத்தீர்; இதோ பாரும், இன்னும் ஐந்து தாலந்தை ஈட்டியுள்ளேன்' என்றார். அதற்கு அவருடைய தலைவர் அவரிடம், 'நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்கு கொள்ளும்' என்றார். இரண்டு தாலந்து பெற்றவரும் அவரை அணுகி, 'ஐயா நீர் என்னிடம் இரண்டு தாலந்து ஒப்படைத்தீர். இதோ பாரும், வேறு இரண்டு தாலந்து ஈட்டியுள்ளேன்' என்றார். அவருடைய தலைவர் அவரிடம், 'நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்குரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்குகொள்ளும்' என்றார்.

கணக்கை ஒப்படைத்த முதல் இரு பணியாளர்களிடம் தலைவர் சொல்லும் வார்த்தைகள் மனதுக்கு நிறைவு தரும் சொற்கள்:

மத்தேயு நற்செய்தி 25: 21,23

தலைவர் அவரிடம், 'நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்கு கொள்ளும்' என்றார்.

கிறிஸ்தவ மறைபோதகர்களில் புகழ்பெற்ற அமெரிக்கப் போதகர், பில்லி கிரகாம் (Billy Graham) அவர்கள். 96 வயது நிறைந்த இவர், தன் 31வது வயதிலிருந்து கிறிஸ்துவையும், விவிலியத்தையும் மேடைகளிலும், ஊடகங்கள் வழியாகவும் பறைசாற்றினார். கடந்த 23 ஆண்டுகளாக பார்க்கின்சன்ஸ் நோயினால் துன்புறும் இவர், தன் 90வது வயது வரை தன் போதகப் பணிகளைத் தொடர்ந்தார்.

Gallup என்ற புகழ்பெற்ற நிறுவனம், 1948ம் ஆண்டு முதல், அமெரிக்க ஐக்கிய நாட்டில் வாழும் மக்களிடையே ஒரு கருத்துக்கணிப்பை நடத்திவருகிறது. 'உலகில் பெரும் மதிப்பிற்குரியவர்கள்' என்ற தலைப்பில், கடந்த 65 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தப்படும் இக்கருத்துக்கணிப்பில், பில்லி கிரகாம் அவர்களின் பெயர், 55 ஆண்டுகள், முதல் 10 இடங்களில் இடம்பெற்றுள்ளது.

1996ம் ஆண்டு, அமெரிக்கப் பாராளுமன்றத்தின் மிக உயர்ந்த தங்கப்பதக்கம், பில்லி கிரகாம் அவர்களுக்கும், அவரது மனைவி ரூத் கிரகாம் அவர்களுக்கும் வழங்கப்பட்டது. அமெரிக்காவின் குடிமக்கள் பெறக்கூடிய மிக உயர்ந்த விருது இதுவே. அமெரிக்கக் குடிமக்கள் மட்டுமல்ல, பல்வேறு துறைகளில் நன்மை தரும் மாற்றங்களை உருவாக்கிய உலகக் குடிமக்களுக்கும் இந்த விருது வழங்கப்படும். எடுத்துக்காட்டாக, பில்லி கிரகாம் (Billy Graham) அவர்கள் இவ்விருதைப் பெற்றதற்கு அடுத்த ஆண்டு, அதாவது 1997ம் ஆண்டு, இவ்விருதை, அருளாளர் அன்னைத் தெரசா அவர்களும், அதற்கு அடுத்த ஆண்டு, 1998ல் நெல்சன் மண்டேலா அவர்களும் பெற்றனர். பில்லி கிரகாம் அவர்கள், இவ்விருதைப் பெற்றபின் வழங்கிய பேட்டியில், அவர் கூறியது, நாம் சிந்திக்கும் தாலந்து உவமையுடன் தொடர்புடையது.

"என் மனைவிக்கும், எனக்கும் வழங்கப்பட்டுள்ள இவ்விருது, எங்களைப் பணிவடையச் செய்கிறது. ஆயினும், நான் கிறிஸ்துவுக்கு முன் நிற்கும் அந்த நாளை எதிர் நோக்கி காத்திருக்கிறேன். அந்த நாளன்று, இயேசு கிறிஸ்து என்னிடம், 'நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே' என்று கூறுவதையே நான் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன்" என்று தன் பேட்டியில் கூறினார் பில்லி கிரகாம்.

ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வின் இறுதியில், தங்கள் கணக்கு வழக்கை இறைவனிடம் சமர்ப்பிக்கும் வேளையில், 'நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே' என்ற வார்த்தைகளை இறைவனிடமிருந்து பெறுவது ஒன்றே, நம் வாழ்வின் நிறைவாக அமையும்.

இவ்வுவமையின் மூன்றாம் பகுதியில் வருவது, நமது உவமையின் நாயகன். தான் பெற்றுக்கொண்ட ஒரு தாலந்தைப் பத்திரமாகப் பாதுகாத்து, எவ்வித மாற்றமும் இன்றி தலைவரிடம் தருகிறார். இந்தப் பணியாளருக்கும், தலைவருக்கும் இடையே நிகழும் உரையாடல், இவ்விதம் ஒலிக்கிறது:

மத்தேயு நற்செய்தி 25: 24-27

ஒரு தாலந்தைப் பெற்றுக் கொண்டவரும் அவரையணுகி, “ஐயா, நீர் கடின உள்ளத்தினர்; நீர் விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவர்; நீர் தூவாத இடத்திலும் விளைச்சலைச் சேகரிப்பவர் என்பதை அறிவேன். உமக்கு அஞ்சியதால் நான் போய் உம்முடைய தாலந்தை நிலத்தில் புதைத்து வைத்தேன். இதோ, பாரும், உம்முடையது” என்றார். அதற்கு அவருடைய தலைவர், “சோம்பேறியே! பொல்லாத பணியாளனே, நான் விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவன். நான் தூவாத இடத்திலும் போய் சேகரிப்பவன் என்பது உனக்குத் தெரிந்திருந்தது அல்லவா? அப்படியானால் என் பணத்தை நீ வட்டிக் கடையில் கொடுத்து வைத்திருக்க வேண்டும். நான் வரும்போது எனக்கு வரவேண்டியதை வட்டியோடு திரும்பப் பெற்றிருப்பேன்” என்று கூறினார்.

உவமையின் முதல் இரு பகுதிகளில் சித்திரிக்கப்படும் தலைவர், நிபந்தனை ஏதுமின்றி பெரும் பொறுப்பை தன் பணியாளர்களுக்குத் தந்தார் என்பதைக் காண்கிறோம். இந்த எண்ணங்களுக்கு முற்றிலும் மாறான ஒரு தலைவரை, மூன்றாவது பணியாளரின் கூற்று சித்திரிக்கிறது. இவரைப் பொருத்தவரை, தலைவர், கடின உள்ளம் கொண்டவர், மாபெரும் கஞ்சன்... இவை, உண்மையிலேயே தலைவரின் குணங்களா, அல்லது, பணியாளரின் சோம்பேறித்தனத்தை மூடிமறைக்க, அவர் தேடி கண்டுபிடித்த காரணங்களா? என்ற கேள்வி எழுகிறது.

முயற்சி ஏதும் எடுக்காமல், தங்கள் தவறுகளை மூடிமறைக்க விழைவோர், பொருத்தமில்லாத காரணங்களைச் சொல்வது வழக்கம். தாங்கள் தப்பித்துக் கொள்ள சொல்லப்படும் இத்தகையக் காரணங்களை, பொதுவாக, நாம் சாக்குபோக்குகள் என்று கூறுவோம்.

நாம் வழக்கமாகக் கூறும் சாக்குப் போக்குகளில் நான்கையும், அவற்றின் எதிர் சாட்சிகளாக அமைந்தவர்கள் சொல்லித்தரும் பாடங்களையும் பயில முயல்வோம்:

1. “இது மிகவும் கடினமானது, எனவே என்னால் இதைச் செய்ய இயலாது” என்பது, பொதுவாக பலர் கூறும் ஒரு சாக்கு. இதை ஒரு காரணமாக முன்னிறுத்துவோர், ஹெலன் கெல்லெர் (Helen Keller) அவர்களை எண்ணிப் பார்க்கவேண்டும்.

ஹெலன் கெல்லெர் அவர்கள், 19 மாதக் குழந்தையாக இருந்தபோது நோயுற்றதால், கேட்கும் திறனையும், பார்க்கும் திறனையும் இழந்தார். இதனால், அவர் பேசும் திறனை வளர்க்க முடியவில்லை. குழந்தைப் பருவம் முதல், கேட்கவும், பார்க்கவும், பேசவும் முடியாத ஹெலன் கெல்லெர் அவர்கள், கல்லூரிப் படிப்பை முடித்த முதல் மாற்றுத் திறனாளி என்ற சிகரத்தை அடைந்தவர்.

2. “எனக்கு அதிக வயதாகிவிட்டது; இனி என்ன செய்யமுடியும்?” என்று செயலற்று போவோருக்கு பாடமாக அமைபவர், அன்னா மேரி ராபர்ட்சன் மோசெஸ் (Anna Mary Robertson Moses) அவர்கள்.

'Grandma Moses' என்று செல்லமாக அழைக்கப்படும் இவர், குழந்தைப் பருவம் முதல் ஓர் ஓவியராக வேண்டும் என்று ஆசைப்பட்டவர். ஆனால், வாழ்வின் பல்வேறு சூழல்களால் தன் ஆசையை அவரால் நிறைவேற்ற இயலவில்லை. துணிகளில் பூவேலைப்பாடுகள் (embroidery) செய்வதில் அவ்வப்போது ஈடுபட்ட மோசெஸ் அவர்கள், 76வது வயதில் arthritis எனப்படும் மூட்டுவலியால் துன்புற்றபோது, பூவேலைப்பாடுகள் செய்ய இயலாமல் தவித்தார். ஓவியம் வரைவது எளிதானது என்று அவருக்கு அறிவுரை வழங்கப்பட்டது. எனவே, தன் 78வது வயதில் ஓவியம் வரைவதில் முழு மூச்சுடன் ஈடுபட்டு, உலகப் புகழ்பெற்ற ஓவியராக திகழ்ந்தார். இவர், தன் 101வது வயதில் காலமானார்.

“நான் ஒரு குழந்தை, என்னால் என்ன செய்யமுடியும்?” என்று கேள்வி எழுப்புகிறவர்கள்,

5வது வயதில், பியானோ, வயலின் ஆகிய இசைக் கருவிகளை இசைப்பதில் சிறந்து விளங்கிய Wolfgang Amadeus Mozart அவர்களிடமும், 13வது வயதில் சதுரங்க விளையாட்டில் உலகப் புகழ்பெற்ற Magnus Carlsen அவர்களிடமும் பாடங்கள் பயிலவேண்டும்.

3. “நான் சொல்வதை யாரும் கேட்பதில்லை, எனவே, என்னால் எதுவும்  செய்ய இயலாது” என்பது பெரும்பாலானோர் கூறும் ஒரு சாக்கு. அவர்களுக்குப் பாடம் சொல்லித் தருபவர், அறிவியல் மேதை, தாமஸ் எடிசன்.

ஆயிரம் முறை தோல்விகளைத் தழுவி, மற்றவர்களின் ஏளனங்களுக்கு உள்ளான தாமஸ் எடிசன் அவர்கள், மின்விளக்கைக் கண்டுபிடித்ததால், இன்றளவும் மனித வரலாற்றை ஒளிபெறச் செய்துள்ளார்.

4. “எனக்குப் படிப்பறிவு போதாது, எனவே, நான் சாதிப்பதற்கு ஒன்றும் இல்லை” என்று சொல்பவர்களுக்கு, மீண்டும் தாமஸ் எடிசன் அவர்கள் ஓர் உந்து சக்தியாக விளங்குகிறார்.

படிப்பதற்குத் தகுதியற்றவர் என்று ஆசிரியர்களால் முத்திரை குத்தப்பட்ட சிறுவன் தாமஸ் எடிசனுக்கு, வீட்டிலேயே கல்வி புகட்டியவர், அவரது அன்னை.

தன் 15வது வயதில் பள்ளியைவிட்டு விலகி, தன் அறிவியல் பாதையை வகுத்துக் கொண்டவர், அறிவியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்.

முயற்சிகள் எடுக்காமல், முடங்கிப் போகும் நமக்கு, மேதைகள் மேற்கொண்ட முயற்சிகள், தூண்டுதலாக அமையவேண்டும். முயற்சிகள் எடுக்காத வண்ணம், நம்மைச் செயலிழக்கச் செய்யும் அச்சத்தைக் குறித்து சொல்லப்படும் ஒரு சில அழகிய கருத்துக்கள் இதோ:

"துறைமுகத்தில் தங்கியுள்ள கப்பல் பாதுகாப்பாக இருக்கும், ஆனால், கப்பல் அவ்விதம் தங்குவதற்கு உருவாக்கப்படவில்லையே" என்று சொன்னவர், William G.T. Shedd.

"மலராக விரிவது வலிக்கும் என்ற அச்சத்தில், ஒரு மொட்டாக மூடிக் கிடந்தேன். மலராக விரிவதில் உண்டாகும் வலியைவிட, மொட்டாக இறுகிக் கிடப்பதில் உண்டாகும் வலி பெரிது என்பதை, நல்லவேளை, விரைவில் உணர்ந்தேன்" என்று கூறியவர், Anais Nin.

தாலந்து உவமையில் நம் தேடல் தொடரும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.