2015-07-21 15:59:00

குற்றவாளிகளுக்கு கருணை,வாழ்வின் நற்செய்தி காட்டப்படவேண்டும்


ஜூலை,21,2015. கடும் குற்றவாளிகளின் வாழ்வும் இறைவனிடமிருந்து வந்தது என்பதால், அக்குற்றவாளிகள் மீது கருணையும், நீதியும் காட்டப்பட வேண்டும் என்று அமெரிக்க ஐக்கிய நாட்டின் இரு ஆயர்கள் கூறியுள்ளனர்.

கிறிஸ்தவர்கள் என்ற முறையில், வாழ்வின் நற்செய்தி, நம்பிக்கை மற்றும் நீதிக்குச் சாட்சி பகர்பவர்களாய், மரணக் கலாச்சாரத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்குமாறு கேட்டுள்ளனர் பாஸ்டன் கர்தினால் Sean O’Malley மற்றும் மியாமி பேராயர் Thomas G. Wenski.

அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின் வாழ்வுக்கு ஆதரவு ஆணைக்குழு, குடும்ப நீதி-மனித வளர்ச்சி ஆணைக்குழு ஆகிய இரண்டின் சார்பில் செய்தி வெளியிட்டுள்ள இவ்விரு தலைவர்களும் கிறிஸ்தவர்கள் மரணக் கலாச்சாரத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்குமாறு  கேட்டுள்ளனர்.

இரக்கமுடையோர் பேறுபெற்றோர், ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவார்கள் என்ற இயேசுவின் மலைப்பொழிவுப் போதனையைச் சுட்டிக்காட்டியுள்ள இச்செய்தி, நாம் அனைவரும் பாவிகள், இயேசுவின் சிலுவைத் தியாகத்தாலும், தந்தையின் அன்புக் கருணையாலும்  நித்திய வாழ்வெனும் கொடை நமக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறுகிறது.

அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள், கடந்த பத்து ஆண்டுகளாக மரண தண்டனையை எதிர்த்துப் போராடி வருகின்றனர்.

ஆதாரம் : CNA / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.