2015-07-21 14:49:00

கடுகு சிறுத்தாலும்... சாக்குபோக்குகளும் சாதனையாளர்களும்


முயற்சி ஏதும் எடுக்காமல், தப்பித்துக் கொள்ள சொல்லப்படும் காரணங்களை, பொதுவாக, நாம் சாக்குபோக்குகள் என்று கூறுவோம். நாம் வழக்கமாகக் கூறும் சாக்குப் போக்குகளைச் சிதறடித்த சாதனையாளர்களில் இருவர்:

1. “இது மிகவும் கடினமானது, எனவே என்னால் இதைச் செய்ய இயலாது” என்பது, பொதுவாக பலர் கூறும் ஒரு சாக்கு. இதை ஒரு காரணமாக முன்னிறுத்துவோர், ஹெலன் கெல்லெர் (Helen Keller) அவர்களை எண்ணிப் பார்க்கவேண்டும்.

ஹெலன் கெல்லெர் அவர்கள், 19 மாதக் குழந்தையாக இருந்தபோது நோயுற்றதால், கேட்கும் திறனையும், பார்க்கும் திறனையும் இழந்தார். இதனால், அவர் பேசும் திறனை வளர்க்க முடியவில்லை. குழந்தைப் பருவம் முதல், கேட்கவும், பார்க்கவும், பேசவும் முடியாத ஹெலன் கெல்லெர் அவர்கள், கல்லூரிப் படிப்பை முடித்த முதல் மாற்றுத் திறனாளி என்ற சிகரத்தை அடைந்தவர்.

2. “எனக்கு அதிக வயதாகிவிட்டது; இனி என்ன செய்யமுடியும்?” என்று செயலற்று போவோருக்கு பாடமாக அமைபவர், அன்னா மேரி ராபர்ட்சன் மோசெஸ் (Anna Mary Robertson Moses) அவர்கள்.

'Grandma Moses' என்று செல்லமாக அழைக்கப்படும் இவர், குழந்தைப் பருவம் முதல் ஓர் ஓவியராக வேண்டும் என்று ஆசைப்பட்டவர். ஆனால், வாழ்வின் பல்வேறு சூழல்களால் தன் ஆசையை அவரால் நிறைவேற்ற இயலவில்லை. துணிகளில் பூவேலைப்பாடுகள் (embroidery) செய்வதில் அவ்வப்போது ஈடுபட்ட மோசெஸ் அவர்கள், 76வது வயதில் arthritis எனப்படும் மூட்டுவலியால் துன்புற்றபோது, பூவேலைப்பாடுகள் செய்ய இயலாமல் தவித்தார். ஓவியம் வரைவது எளிதானது என்று அவருக்கு அறிவுரை வழங்கப்பட்டது. எனவே, தன் 78வது வயதில் ஓவியம் வரைவதில் முழு மூச்சுடன் ஈடுபட்டு, உலகப் புகழ்பெற்ற ஓவியராக திகழ்ந்தார். இவர், தன் 101வது வயதில் காலமானார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.