2015-07-18 15:53:00

பிலிப்பைன்ஸ் திருஅவை அரசின் சுரங்கத்திட்டத்திற்கு எதிர்ப்பு


ஜூலை,18,2015. பிலிப்பைன்ஸ் அரசு திட்டமிட்டுவரும் சுரங்கத் திட்டம், பல்வேறு உயிரினங்களின் வாழ்வுக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்று சொல்லி, அத்திட்டத்திற்கு ஆயிரக்கணக்கான அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள் மற்றும் பொது மக்கள் எதிர்ப்புப் பேரணி நடத்தியுள்ளனர்.

பிலிப்பைன்ஸ் நாட்டின் Batangas மாநிலத்தில் 20 ஆயிரத்து 320 ஹெக்டேர் நிலப்பரப்பில் இரண்டு நிறுவனங்களுக்கு, கடந்த மார்ச் 31ம் தேதி வரை, குறைந்தது பத்து சுரங்கங்கள் தோண்டுவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலப் பகுதியிலுள்ள லோபோ நகரம் உட்பட அதிகமான இடங்கள் பல்வேறு உயிரினங்கள் வாழும் பகுதியாகும். 

பிலிப்பைன்ஸ் அரசு அனுமதி அளித்துள்ள இப்பகுதியில் சுரங்க வேலைகள் தொடங்கப்பட்டால் அது சுற்றுச்சூழலுக்குப் பெரும் சேதத்தை ஏற்படுத்தும் என்று, லிப்பா உயர்மறைமாவட்ட சுற்றுச்சூழல் பணிக்குழு இயக்குனர் அருள்பணி தகிலா ராமோஸ் அவர்கள் கூறியுள்ளார்.

பிலிப்பைன்ஸ் நாட்டில் பல்வேறு உயிரினங்கள் வாழும் பகுதி என 1997ம் ஆண்டில் குறிக்கப்பட்ட 18 மையங்களில் லோபோ நகரமும் ஒன்றாகும். இந்நகரின் ஒரு சிறு பகுதியில் மட்டும் ஏறக்குறைய 1,736 வகை கடல் உயிரினங்கள் வாழ்வதாக, அனைத்துலக அறிவியலாளர்கள் குழு ஒன்று 2004ம் ஆண்டில் கூறியது குறிப்பிடத்தக்கது.   

மேற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தென்கிழக்கு ஆசிய நாடாகிய பிலிப்பைன்ஸ், 7,107 தீவுகளைக் கொண்ட ஒரு நாடாகும்.

ஆதாரம் : UCAN/ வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.