2015-07-18 15:22:00

பம்பினோ ஜேசு மருத்துவமனைக்கு வத்திக்கான் ஹெலிகாப்டர் தளம்


ஜூலை,18,2015. நோயாளிகள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் மருத்துவக் கருவிகளை அவசர காலங்களில் எடுத்துச் செல்வதற்கு, உரோம் பம்பினோ ஜேசு மருத்துவமனை, வத்திக்கான் ஹெலிகாப்டர் தளத்தைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வத்திக்கான் தோட்டத்திலுள்ள ஹெலிகாப்டர் தளத்தை, பம்பினோ ஜேசு மருத்துவமனை பயன்படுத்துவது குறித்த ஒப்பந்தத்திற்கு அனுமதி அளித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வொப்பந்தம், தனக்கு மகிழ்ச்சியளிக்கின்றது மற்றும் இது சிறாருக்குப் பெரும் உதவியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

வத்திக்கான் நகர நாட்டிற்கும், பம்பினோ ஜேசு என்ற குழந்தை இயேசு மருத்துவமனை நிர்வாகத்திற்கும் இடையே இவ்வெள்ளியன்று இவ்வொப்பந்தம் கையெழுத்தானது.

இது குறித்து திருப்பீடத்திற்கு தனது நன்றியைத் தெரிவித்த இம்மருத்துவமனை தலைவர் மரியல்லா எனோக் அவர்கள், பிறரன்பின் அடையாளமாக அமைந்துள்ள இவ்வொப்பந்தம், அடிப்படை நலவாழ்வு தேவைக்கு உதவுவதாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். 

1869ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட உரோம் நகரின் பம்பினோ ஜேசு சிறார் மருத்துவமனையில், ஆறு பெரிய மாடிக் கட்டடங்களில் 800 படுக்கைகள் உள்ளன.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.