2015-07-18 15:29:00

CNCA கூட்டமைப்பினர், திருத்தந்தை சந்திப்பு


ஜூலை,18,2015. கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கு முயற்சிக்கும் மாநகர மேயர்கள் கூட்டமைப்பின் உறுப்பினர்கள், வரும் வாரத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை வத்திக்கானில் சந்தித்து காலநிலை மாற்றத்தைத் தடுப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வேண்டுகோளின்பேரில், காலநிலை நெருக்கடியும், நவீன அடிமைத்தனமும் என்ற தலைப்பில் வருகிற செவ்வாய், புதன் தினங்களில் வத்திக்கானில் நடைபெறவிருக்கும் கூட்டத்தில், இக்கூட்டமைப்பின் உறுப்பினர்கள்  கலந்துகொண்டு திருத்தந்தையையும் சந்திக்கவுள்ளனர்.

புவியில் ஏற்பட்டுள்ள மாசுகேட்டை குறைத்து, ஏழைகள் மற்றும் ஆபத்தான சூழல்களில் வாழும் மக்களின் நலவாழ்வை மேம்படுத்துவதற்குத் தங்களை அர்ப்பணிக்கும் அறிவிப்பு ஒன்றில், திருத்தந்தையும், மாநகர மேயர்களும் கையெழுத்திடவுள்ளனர்.

இன்றைய மனித சமுதாயத்தில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் நகரங்களில் வாழ்கின்றனர் என்றும், உலக அளவில் வெளியேற்றப்படும் கார்பன் வாயுவில் ஏறக்குறைய நான்கில் மூன்று பங்குக்கு நகரங்களே பொறுப்பு என்றும், கார்பன் வெளியேற்றத்தை 2050ம் ஆண்டுக்குள் குறைந்தது 80 விழுக்காடு குறைப்பது இன்றியமையாதது என்றும் மாநகர மேயர்கள் கூட்டமைப்பு கூறியுள்ளது.

ஜூலை 21, 22 ஆகிய தேதிகளில் வத்திக்கான் நடத்தும் கருத்தரங்கில் நியுயார்க், பாஸ்டன், இலண்டன், வான்கூவர், ஸ்டாக்கோம், ஆஸ்லோ, பெர்லின், சான் பிரான்சிஸ்கோ உட்பட 12 மாநகரங்களின் மேயர்கள், துணை மேயர்கள் என 12 பேர் கலந்து கொள்வார்கள்.

கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதற்கென உருவாக்கப்பட்டுள்ள CNCA(Carbon Neutral Cities Alliance) மாநகர மேயர்கள் கூட்டமைப்பு 2015ம் ஆண்டு மார்ச் மாதத்தில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது. இப்படி ஒரு கூட்டமைப்பை உருவாக்குவதற்கென 2014ம் ஆண்டு ஜூன் மாதத்தில் கோப்பன்ஹாகனில் முதல் கூட்டத்தை  மாநகர மேயர்கள் நடத்தினர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.