2015-07-17 17:09:00

போதைப்பொருள் வர்த்தகம், காலனி ஆதிக்கத்தின் புதிய வடிவம்


ஜூலை,17,2015. பிலிப்பைன்ஸ் நாட்டில் போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் அவற்றின் பயன்பாட்டைத் தடை செய்யுமாறு அந்நாட்டு ஆயர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

போதைப்பொருளைப் பயன்படுத்துவதற்கு எதிராக மேய்ப்புப்பணி அறிக்கை வெளியிட்டுள்ள பிலிப்பைன்ஸ் ஆயர்கள், போதைப்பொருள் வர்த்தகர்களைக் கடும் சொற்களால் சாடியுள்ளனர்.

போதைப்பொருள், ஒரு மனிதரில் தீமையை விதைக்கின்றது மற்றும் அம்மனிதரை தனது சொந்த வாழ்விலிருந்து தனிமைப்படுத்துகிறது என்றும் கூறியுள்ள ஆயர்கள், போதைப்பொருள் வர்த்தகர்களும், அவற்றை உற்பத்தி செய்வோரும் மனிதர்களையும், சமூகங்களையும் அழிக்கின்றனர், இந்த அழிவு இயற்கைப் பேரிடர்களைவிட மோசமானது என்றும் எச்சரித்துள்ளனர்.

போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் அவற்றின் பயன்பாட்டை, காலனி ஆதிக்கத்தின் புதிய வடிவங்கள் என்றும், இவற்றுக்கு யாரும் பலியாகிவிடக் கூடாது என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பிலிப்பைன்ஸ் நாட்டுக்கானத் திருத்தூதுப் பயணத்தின்போது கேட்டுக்கொண்டதையும் தங்களின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்  பிலிப்பைன்ஸ் ஆயர்கள். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.