2015-07-17 16:42:00

திருத்தந்தையின் டுவிட்டரை பார்வையிடுபவர் 22 மில்லியன்


ஜூலை,17,2015. “நம் வாழ்வில் அனைத்தும் நம்மைவிட்டு நீங்கிய நிலையில், இறைவன் நம்மை அன்பு கூர்கிறார், இறைவன் நம் அனைவர்மீதும் அன்பு செலுத்துகிறார் என்பதுவே நம் நம்பிக்கையைத் தாங்கிப் பிடிப்பது” என்ற வார்த்தைகளை, தனது டுவிட்டரில் இவ்வெள்ளியன்று பதிவு செய்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இலத்தீன் அமெரிக்காவுக்குத்  திருத்தூதுப் பயணத்தை நிறைவு செய்தவுடன் திருத்தந்தையின் டுவிட்டர் பக்கத்தைப் பார்வையிடுபவரின் எண்ணிக்கை 2 கோடியே இருபது இலட்சத்தைத் தாண்டியுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈக்குவதோர், பொலிவியா, பரகுவாய் ஆகிய மூன்று இலத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு திருத்தந்தை தனது திருத்தூதுப் பயணத்தை நிறைவு செய்த நேரத்தில், ஒன்பது மொழிகளில் பிரசுரிக்கப்படும் @Pontifex என்ற திருத்தந்தையின் டுவிட்டர் பக்கத்தைப் பார்வையிடுபவரின் எண்ணிக்கை இரண்டு கோடியைத் தாண்டியது என்று, திருப்பீட சார்பு தினத்தாள் லொசர்வாத்தோரே ரொமானோ அறிவித்துள்ளது.

இம்மாதம் 5ம் தேதி முதல் 13ம் தேதி வரையிலான நாள்களில், திருத்தந்தையின் டுவிட்டர் பக்கத்தைப் புதிதாகப் பார்த்தவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு 24 மணி நேரத்திற்கும் குறிப்பிடத்தக்க வகையில் உயர்ந்தது என்றும், அது 29 ஆயிரமாக இருந்தது என்றும், இஸ்பானிய மொழியில் இதைப் பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை 93 இலட்சத்து 47 ஆயிரத்து 116 என்றும் அத்தினத்தாள் கூறியுள்ளது. 

இஸ்பானிய மொழிக்கு அடுத்தபடியாக ஆங்கிலம், இத்தாலியம் என, திருத்தந்தையின் டுவிட்டர் பக்கத்தைப் பார்வையிடுபவரின் எண்ணிக்கையை வரிசைப்படுத்தியுள்ளது லொசர்வாத்தோரே ரொமானோ.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.