2015-07-17 16:48:00

எட்டு இறையடியார்களின் வீரத்துவமான வாழ்வு முறை ஏற்பு


ஜூலை,17,2015. உக்ரேய்னின் Lviv முன்னாள் பேராயர் Andrea Szeptyckyj, இத்தாலியின் வெரோனா முன்னாள் ஆயர் Giuseppe Carraro உட்பட, இத்தாலி, மெக்ஸிகோ, பிரான்ஸ், இஸ்பெயின் ஆகிய நாடுகளின் எட்டு இறையடியார்களின் வீரத்துவமான பண்புகள் நிறைந்த வாழ்வு முறையை ஏற்றுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். 

புனிதர் நிலைக்கு உயர்த்தும் திருப்பேராயத் தலைவர் கர்தினால் ஆஞ்சலோ அமாத்தோ அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை இவ்வியாழன் மாலை வத்திக்கானில் சந்தித்து எட்டு இறையடியார்களின் வீரத்துவமான பண்புகள் நிறைந்த வாழ்வு முறையைச் சமர்ப்பித்தார்.

1865ம் ஆண்டு பிறந்த Lviv பேராயர் Andrea Szeptyckyj அவர்கள் 1944ம் ஆண்டு Lvivல் இறந்தார். இவர் புனித பெரிய பேசில் சபையைச் சார்ந்தவர்;1899ம் ஆண்டு இத்தாலியின் Miraவில் பிறந்த வெரோனா ஆயர் Giuseppe Carraro, 1980ம் ஆண்டில் வெரோனாவில் காலமானார்; மறைமாவட்ட அருள்பணியாளரும், நம் ஆண்டவரின் கருணை சகோதரிகள் சபையை நிறுவியவருமான இறையடியார் Agostino Ramírez Barba அவர்கள், 1881ல் மெக்ஸிகோவில் பிறந்து 1967ல் காலமானார்; பிரான்சிஸ்கன் சபை அருள்பணியாளரும், திரு இதயங்களின் பிரான்சிஸ்கன் சகோதரிகள் சபையை நிறுவியவருமான இறையடியார் Aniello Francesco Saverio Maresca அவர்கள், இத்தாலியில் 1827ல் பிறந்து 1898ல் காலமானார்; மெக்ஸிகோவில் 1866ல் பிறந்த, கைம்பெண்ணான இறையடியார் Maria del Rifugio Aguilar y Torres அவர்கள், திருநற்கருணையின் இரக்கத்தின் சகோதரிகள் சபையை நிறுவியவர். இவர் 1937ல் இறந்தார்; பிரான்ஸின் Pierre d’Irubeல் 1873ல் பிறந்த இறையடியார் Maria Teresa Dupouy Bordes அவர்கள், திரு இதயங்களின் மறைப்பணியாளர் சபையைத் தோற்றுவித்தவர். 1953ல் இஸ்பெயின் நாட்டின் San Sebastián ல் மரணமடைந்தார்; இத்தாலியின் Longobardiல் 1904ல் பிறந்த இறையடியார் Elisa Miceli அவர்கள், திரு இதய கிராம மறைக்கல்வியாளர்கள் சகோதரிகள் சபையை நிறுவியவர். இவர் 1976ல் Frascatiல் இறந்தார்; இறையடியார் Isabella Méndez Herrero அவர்கள், 1924ல் இஸ்பெயினில் பிறந்தார். தூய வளன் பணியாளர் சபை அருள்சகோதரியான இவர், 1953ல் Salamancaல்  காலமானார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.