2015-07-16 16:13:00

முகமுகமாக உரையாடும் திருத்தந்தை, மாற்று அடையாளம்


ஜூலை,16,2015. தொடர்பு சாதன கருவிகளால் பெரிதும் சூழப்பட்டிருக்கும் இளையோர் மற்றும் குழந்தைகள் நடுவில், முகமுகமாக உரையாடும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒரு மாற்று அடையாளமாக விளங்குகிறார் என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் அண்மையில் உருவாக்கப்பட்ட தொடர்புசாதன பணித்துறையின் தலைவர், அருள்பணி Dario Edoardo Viganò அவர்கள், திருத்தந்தையின் அண்மைய திருத்தூதுப் பயணம் குறித்து, வத்திக்கான் நாளிதழ் L'Osservatore Romanoவில் வெளியிட்டுள்ள கட்டுரையில் இவ்வாறு கூறியுள்ளார்.

'உலகம் என்ற கிராமத்தில் திருத்தந்தை பிரான்சிஸ்' என்ற தலைப்பில் வெளியாகியுள்ள இந்தக் கட்டுரையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தூரின் நகரில் இளையோருடன் மேற்கொண்ட உரையாடல் மற்றும், இலத்தீன் அமெரிக்க பயணத்தின் இறுதியில் விமானப் பயணத்தின்போது பத்திரிக்கையாளர்களுடன் மேற்கொண்ட உரையாடல் இவற்றை மையப்படுத்தி, அருள்பணி Viganò அவர்கள், தன் கருத்துக்களை வழங்கியுள்ளார்.

எழுத்து வடிவில் தன் உரைகளை தயாரித்தாலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மனதிலிருந்து எழுவதை அடிக்கடி பேசுவது, வாய்வழி வார்த்தைகளால் உருவாகும் உறவுகளுக்கு நல்லதொரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது என்று அருள்பணி Viganò அவர்கள், தன் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.