2015-07-16 16:37:00

மிலான் எக்ஸ்போ 2015வில் வறியோருக்கு காத்திருக்கும் விருந்து


ஜூலை,16,2015. மிலான் நகரில் நடைபெற்றுவரும் 'எக்ஸ்போ 2015' என்ற அகில உலக கண்காட்சியின் ஒரு பகுதியாக, 'காத்திருக்கும் விருந்து' என்ற ஒரு முயற்சியை, மிலான் உயர் மறைமாவாட்டமும், காரித்தாஸ் அம்புரோசியானா அமைப்பும் துவக்கவுள்ளன.

'காத்திருக்கும் விருந்து' என்ற ஒரு முயற்சியில் 28 உணவகங்கள் கலந்துகொள்வதாக அறிவித்துள்ளன என்றும் இந்த மறைமாவட்டத்தின் செய்திக் குறிப்பு கூறுகிறது.

இந்த முயற்சியின்படி, இந்த உணவகங்களில் உணவு உண்போர், தங்கள் உணவுக்குரிய தொகையுடன், 'காத்திருக்கும் விருந்து' என்ற முயற்சிக்கு ஒரு தொகையை கூடுதலாக வழங்கினால், அந்தத் தொகையைக் கொண்டு, உணவின்றி தவிக்கும் ஓர் ஏழைக்கு இந்த உணவகங்கள் விருந்தளிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

வருகிற ஆகஸ்ட் மாதம் முதல், நவம்பர் மாதம் முடிய 'காத்திருக்கும் விருந்து' என்ற இந்த முயற்சி 28 உணவகங்கள் வழியே மேற்கொள்ளப்படும் என்று இந்த முயற்சியை ஒருங்கிணைக்கும் ஆயர் Erminio De Scalzi அவர்கள், இப்புதனன்று செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தார்.

இந்த உணவகங்களில் திரட்டப்படும் தொகை ஒன்று சேர்க்கப்பட்டு, 10 யூரோ சீட்டுகளாக மாற்றப்பட்டு, தேவையில் இருக்கும் வறியோருக்கு வழங்கப்படும் என்று காரித்தாஸ் அம்புரோசியானா அமைப்பாளர்கள் கூறினர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.